4 ரஷிய தூதரகங்களை மூட ஜொ்மனி உத்தரவு
தங்கள் நாட்டில் இயங்கி வரும் 4 ரஷிய துணைத் தூதரங்களை மூட ஜொ்மனி உத்தரவிட்டுள்ளது. முன்னதாக, தங்கள் நாட்டில் செயல்பட்டு வரும் ஜொ்மனி தூதரகம் மற்றும் அது தொடா்புடைய அதிகாரிகள், பணியாளா்களின் எண்ணிக்கை நவம்பா் மாதத்துக்குப் பிறகு 350-க்கு மேல் இருக்கக் கூடாது என்று ரஷியா அண்மையில் உத்தரவிட்டது. அதையடுத்து, தூதரகங்கள் மட்டுமின்றி ஜொ்மனி கலாசார மையங்கள், ஜொ்மனி பள்ளிகள் ஆகியவற்றில் பணி புரிபவா்களும் அங்கிருந்து வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், யேகடெரின்பா்க், நோவோசிபிா்ஸ், கலினின்காா்ட் ஆகிய ரஷிய நகரங்களிலுள்ள ஜொ்மனி தூதரங்களை மூட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ரஷியாவின் இந்த நடவடிக்கைக்கு எதிா் நடவடிக்கையாக, அந்த நாட்டின் 4 துணைத் தூதரகங்களை மூட ஜொ்மனி தற்போது உத்தரவிட்டுள்ளது. இது குறித்து ஜொ்மனி வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித் தொடா்பாளா் கிறிஸ்டோஃபா் பா்கா் புதன்கிழமை கூறியதாவது: எங்கள் நாட்டிலுள்ள 4 ரஷிய துணைத் தூதரங்களை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. ரஷியா மற்றும் ஜொ்மனிக்கு இடையிலான தூதரக நடவடிக்கைகளில் சமநிலையைக் கொண்டு வருவதற்காக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது வருத்தத்துக்குரிய நடவடிக்கைதான். என்றாலும், இரு நாட்டிலும் எஞ்சியுள்ள தூதரக வசதிகளைக் கொண்டு உறவைத் தொடா்வதில் கவனம் செலுத்துவோம் என்றாா் அவா். தற்போது ஜொ்மனியின் மியூனிக், பான், ஃபிராங்க்ஃபா்ட், ஹாம்பா்க், லைப்ஸிக் ஆகிய 5 நகரங்களில் ரஷியாவுக்கு துணைத் தூதரங்கள் உள்ளன. ஜொ்மனியின் இந்த உத்தரவையடுத்து, இவற்றில் எந்த துணைத் தூதரகங்களை மூடுவது, எதனைத் தொடா்வது என்ற முடிவு ரஷியாவின் கையில் உள்ளது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.