வீட்டில் வைத்தே போலி பாஸ்போர்ட், விசா தயாரிப்பு; சிறைக்குச் சென்றும் திருந்தாத மோசடி மன்னன்!
மத்திய வருவாய் புலனாய்வு இயக்குநரகத்தின் உதவி இயக்குநர், சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் ஒன்றைக் கொடுத்தார். அதில், முகமது ஷேக் இலியாஸ் என்பவர் பாஸ்போர்ட், விசா போன்ற ஆவணங்களை போலியாகத் தயாரித்துவருவதாகக் குறிப்பிட்டிருந்தார். அதனடிப்படையில் சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவின்பேரில், கூடுதல் கமிஷனர் மகேஸ்வரி, துணை கமிஷனர் நாகஜோதி ஆகியோர் மேற்பார்வையில் கூடுதல் துணை கமிஷனர் பிரபாகரன் தலைமையில் உதவி கமிஷனர் சரஸ்வதி, இன்ஸ்பெக்டர் புஷ்பராஜ், சப்-இன்ஸ்பெக்டர் எமர்சன் தலைமையிலான போலீஸார் போலி பாஸ்போர்ட் வழக்கைக் கையிலெடுத்தனர். மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகள் கூறிய தகவலின் அடிப்படையில் ராயபுரத்துக்கு போலீஸார் சென்றனர். அங்கு ஒரு வீட்டிலிருந்த முகமது ஷேக் இலியாஸ் என்பவரிடம் பாஸ்போர்ட் வேண்டும் என போலீஸ் இன்ஃபார்மர் ஒருவர் கேட்டிருக்கிறார்.
அதற்கு முகமது ஷேக் இலியாஸ், `பாஸ்போர்ட் வேண்டுமென்றால், பாஸ்போர்ட் ஆபீஸுக்குச் செல்லுங்கள் என்று கூறியிருக்கிறார். அதனால் அந்த இன்ஃபார்மர் வெறுங்கையோடு திரும்பினார். அதையடுத்து, முகமது ஷேக் இலியாஸைப் பிடிக்க மத்திய குற்றப்பிரிவு போலீஸார் வியூகம் அமைத்தனர். முகமது ஷேக் இலியாஸிடம் யார் சொன்னால் பாஸ்போர்ட் கிடைக்கும் என்ற நெட்வொர்க் குறித்து விசாரித்தனர். அப்போதுதான் போலீஸாரின் மாஸ்டர் பிளானில் முகமது ஷேக் இலியாஸுக்கு புரோக்கராகச் செயல்படும் ஒருவர் சிக்கினார். அவரைக் கொண்டு முகமது ஷேக் இலியாஸிடம், `பாஸ்போர்ட் வேண்டும், அதற்கு லட்சம் ரூபாய் தருகிறோம் என போலீஸார் தெரிவித்தனர்.
இதையடுத்து, பாஸ்போர்ட்டைக் கொடுக்க முகமது ஷேக் இலியாஸ் சம்மதித்திருக்கிறார். தொடர்ந்து பணம் கைமாறியதும் முகமது ஷேக் இலியாஸ், ஒரிஜினல்போல ஒரு பாஸ்போர்ட்டைக் கொடுத்திருக்கிறார். அதைப் பார்த்த போலீஸார் `ஷாக் ஆகியிருக்கிறார்கள். அந்த பாஸ்போர்ட்டை போலீஸார் ஆய்வுசெய்தபோது, அது வேறு ஒருவரின் பெயரிலுள்ள பாஸ்போர்ட் எனத் தெரியவந்திருக்கிறது. அவரின் புகைப்படத்துக்கு பதில் போலீஸார் கேட்டவரின் புகைப்படம் ஒட்டப்பட்டிருந்தது. இதையடுத்து முகமது ஷேக் இலியாஸை மடக்கிப் பிடித்த போலீஸார், அவரிடம் விசாரித்தனர். அப்போதுதான் வீட்டிலேயே வைத்து தனக்குத் தெரிந்தவர்களுக்கு மட்டும் போலியாக பாஸ்போர்ட், விசா உள்ளிட்டவற்றைத் தயாரித்துக் கொடுத்தது தெரியவந்தது.
இது குறித்து மத்திய குற்றப்பிரிவின் உயரதிகாரி ஒருவரிடம் பேசினோம். ``சென்னை, ராயபுரத்தைச் சேர்ந்த முகமது ஷேக் இலியாஸ் என்பவரைக் கடந்த 20-ம் தேதி கைதுசெய்தோம். அவர் அளித்த தகவலின்படி திருவொற்றியூரைச் சேர்ந்த சிவக்குமார், ராயபுரத்தைச் சேர்ந்த முகமது புஹாரி ஆகியோரை, கடந்த 29-ம் தேதி கைதுசெய்தோம். இதில் முகமது ஷேக் இலியாஸ், முகமது புஹாரி ஆகியோர்தான் மாஸ்டர் மைண்டுகள். இவர்கள் இருவரும் சேர்ந்து வீட்டிலேயே போலி பாஸ்போர்ட்கள், விசாக்களைத் தயாரித்து லட்சம் ரூபாய்க்கு மேல் ஒரு பாஸ்போர்ட்டை விற்று வந்திருக்கிறார்கள். இவர்களுக்கு உதவியாக சிவக்குமார் செயல்பட்டிருக்கிறார். போலி பாஸ்போர்ட்டுகளைத் தயாரிக்க இந்திய அரசு, வெளிநாட்டு அரசுகளின் ரப்பர் ஸ்டாம்புகளை இவர்கள் போலியாக தயாரித்து வைத்திருந்தனர். மேலும் பாஸ்போர்ட், விசா ஆகியவற்றைத் தயாரிக்க கம்ப்யூட்டரையும் பயன்படுத்தியிருக்கிறார்கள். அவற்றையும் இவர்கள் பயன்படுத்திய செல்போன்களையும் பறிமுதல் செய்திருக்கிறோம்.
முகமது ஷேக் இலியாஸ், முகமது புஹாரி ஆகியோர், ஏஜென்ட்டுகளிடமிருந்து பழைய பாஸ்போர்ட்டுகள், விசாக்களை குறைந்த விலைக்கு வாங்குகின்றனர். பின்னர் அதன் உள்பக்கத்திலிருக்கும் தாள்களைப் பிரித்தெடுக்கிறார்கள். அதன் பிறகு பாஸ்போர்ட் கேட்டு தங்களை அணுகுபவர்களின் போட்டோக்களை ஒட்டி போலி பாஸ்போர்ட்டுகளைத் தயாரித்திருக்கிறார்கள். இவர்கள் கொடுக்கும் இந்த பாஸ்போர்ட்டுகளின் நம்பர்கள் ஒரிஜினல் என்பதால், அதைப் பயன்படுத்தியவர்களுக்கு எந்தவிதச் சிக்கலும் ஏற்படவில்லை. அதனால் இவர்களின் பாஸ்போர்ட், விசா பிசினஸ் எந்தவிதப் பிரச்னையும் இல்லாமல் இருந்துவந்திருக்கிறது.
முகமது ஷேக் இலியாஸுக்குக் கடத்தல் கும்பலுடன் தொடர்பிருப்பது தெரியவந்திருக்கிறது. அவர்களுக்கும் இவர் பாஸ்போர்ட்டுகள், விசாக்களைத் தயாரித்துக் கொடுத்தது விசாரணையில் தெரியவந்திருக்கிறது. முகமது ஷேக் இலியாஸ், முகமது புஹாரி பள்ளிப் படிப்பைக்கூட தாண்டாதவர்கள். ஆனால், கம்ப்யூட்டர்களைப் பயன்படுத்தி ஒரிஜினலைப்போல போலி பாஸ்போர்ட்டுகள், விசாக்களைத் தயாரித்து விற்று வந்திருக்கிறார்கள். அதன் மூலம் ஆடம்பரமாக வாழ்ந்து வந்திருக்கிறார்கள். முகமது ஷேக் இலியாஸ், முகமது புஹாரி ஆகியோர் யாரையும் நம்பமாட்டார்கள்.

தங்களின் நெட்வொர்க்கில் உள்ளவர்கள் சொன்னால் மட்டுமே பாஸ்போர்ட்டுகள், விசாக்களைக் கொடுப்பார்கள். அதனால்தான் அவர்கள் குறித்து வெளியில் எந்தத் தகவலும் தெரியாமல் இருந்திருக்கிறது. மேலும் வீட்டையே ஆபீஸ்போல இவர்கள் பயன்படுத்தி வந்திருக்கிறார்கள். தற்போது கைதுசெய்யப்பட்டிருக்கும் முகமது ஷேக் இலியாஸ் மீது ஏற்கெனவே போலி பாஸ்போர்ட் தொடர்பான மோசடி வழக்குகள் மத்திய குற்றப்பிரிவில் பதிவாகியிருக்கின்றன. அந்த வழக்குகளில் சிறைக்குச் சென்றாலும், மோசடி மன்னன் முகமது ஷேக் இலியாஸ் தொடர்ந்து மோசடி வேலைகளில் ஈடுபட்டு வந்திருக்கிறார். இவர்களிடம் போலி பாஸ்போர்ட்டுகள், விசாக்களை யாரெல்லாம் வாங்கியிருக்கிறார்கள் என்பதை விசாரித்துக்கொண்டிருக்கிறோம். இந்த நெட்வொர்க்கின் பின்னணியில் இப்போதைக்கு முகமது ஷேக் இலியாஸ், முகமது புஹாரி ஆகியோர் குறித்த தகவல்கள் மட்டுமே கிடைத்திருக்கின்றன" என்றார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.