வெள்ளி மட்டுமே திறந்திருக்கும் மலைக்கோயில்; நோய்தீர்க்கும் தலவிருட்சம்; மதுரை அருகே அற்புதக் கோயில்!

மதுரை மாவட்டம் மாடக்குளம் அருகே உள்ளது பசுமலை. எழில் சூழ்ந்த இந்த மலையின் மேல் அமைந்துள்ளது ஸ்ரீ கபாலீஸ்வரி அம்மன் மற்றும் ஸ்ரீ அலங்காரி அம்மன் திருக்கோயில்.

அன்னை பார்வதி கபாலீஸ்வரியாக அமர்ந்து தவம் புரியும் இந்தத் திருக்கோயில் சிறப்புகள் என்னென்ன என்பது குறித்து அந்தக் கோயிலின் பூசாரி சேதுவிடம் கேட்டோம். ``அன்னை ஶ்ரீகபாலீஸ்வரியும் ஶ்ரீஅலங்காரி அம்மனும் இங்கே அருளாட்சி செய்கிறார்கள். கேட்பவர்களுக்குக் கேட்கும் வரம் தரும் அருள்மாரியாக விளங்கிறார்கள். இந்த ஆலயம் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு சித்தர்களால் எழுப்பப்பட்டது. அதன்பிற்கு இங்கு வாழ்ந்த மலைகிராமத்து மக்கள் இந்த தேவியரை வழிபடத் தொடங்கினார்கள். இங்கே பார்வதி தேவி ஶ்ரீகபாலீஸ்வரியாக தவக்கோலத்தில் அமர்ந்திருப்பதால் அனைத்துப் படையல்களும் வழிபாடுகளும் ஶ்ரீஅலங்காரி அம்மனுக்கே" என்றார் சேது

ஶ்ரீ அலங்காரி அம்மன்

இங்கு அலங்காரி அம்மன் சயனக் கோலத்தில் காட்சி கொடுக்கிறார். அன்னை ஏன் சயனக் கோலத்தில் அருள்பாலிப்பது ஏன் என்று பூசாரியிடம் கேட்டோம்.

"முன்னொரு காலத்தில் அம்பிகையை வழிபட்ட வந்த பக்தை ஒருவரின் குழந்தை எதிர்பாராமல் இறந்துவிட அந்த பக்தை அதிர்ச்சி அடைந்தார். உற்றாரும் உறவினரும் எங்கே தன்னைக் குறைசொல்வார்களே என்று அஞ்சிய அந்தத் தாய் தன் உயிரைத் தியாகம் செய்தார். ஆனால் குழந்தை உயிர் துறப்பதற்கு முன்பாக அந்தத் தாய் சந்நிதியில் இருந்த பாலைக் குழந்தைக்குக் கொடுத்தார். அதனால் அந்தக் குழந்தை இறந்தாலும் தெய்வமாக மாறியது. அதுவே ஶ்ரீஅலங்காரி அம்மன் என்கிறார்கள்.

தாயை இழந்த சோகத்தால் ஶ்ரீஅலங்காரி ஆக்ரோஷமாகக் காணப்பட்டாள். இதனால் ஊருக்குள் துர்சகுனங்கள் நிகழ்ந்தவண்ணம் இருந்தன. எனவே கவலை அடைந்த ஊர்மக்கள் ஆலயத்துக்கு வந்து தங்கள்மீது இரக்கம் காட்டுமாறு வேண்டினர். அப்போது அலங்காரி அம்மன் தோன்றித் தன்னை சயனக் கோலத்தில் வழிபடுமாறு கூறினாள்.

அன்னையின் உக்கிரம் தணியும் படிக்கு அன்னை மீது வெயில்படுமாறு ஒரு திருமேனி அமைத்து வழிபடத் தொடங்கினர். ஒவ்வோர் ஆண்டும் ஆடிமாதம் அம்மனுக்கு சிறப்பாக விழா கொண்டாடப்படுகிறது. அன்னையை வேண்டிக்கொண்டு பொங்கலிட்டுப் படையலிட்டால் வேண்டும்வரம் உடனே கிடைக்கும்.

ஶ்ரீ கபாலீஸ்வரி - அலங்காரி அம்மன் சந்நிதி

இங்கே உள்ள மரம் ஒன்று நோய் தீர்க்கும் மருந்தாக நம்பப்படுகிறது. இங்கு வந்து அந்த மரத்தின் இலையை பக்தியோடு பறித்து சாப்பிட்டால் எப்பேற்பட்ட நோயும் குணமாகும் என்பது நம்பிக்கை. அன்னையாக ஸ்ரீ கபாலீஸ்வரி சாந்த ரூபிணியாகக் காட்சி தருகிறார். இரண்டு அம்மனையும் வணங்கி வழிபட்டால் சகல துன்பங்களும் நீங்கி நல் வாழ்வு கிடைக்கும்" என்றார் சேது.

இந்தக் கோயில் வெள்ளிக்கிழமைகளில் காலை 8 மணி முதல் 11.30 மணிவரை மட்டுமே திறந்திருக்கும். எனவே வாய்ப்பிருக்கும் பக்தர்கள் அன்னையை ஒரு வெள்ளிகிழமையன்று சென்று வழிபாடு செய்து வளம்பெறுங்கள்.

தொடர்பு : கண்ணன் : 7639700380

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.