பவானி அருகே ஓடும் லாரியில் தீப்பிடித்ததில் 25 டன் பஞ்சு எரிந்து சேதம்

பவானி: ஈரோடு பவானி அருகே ஓடும் லாரியில் தீப்பிடித்ததில் 25 டன் பஞ்சு மற்றும் லாரி எரிந்து சேதம் அடைந்தது.  தருமபுரி மாவட்டம், பொம்முடியைச் சேர்ந்தவர் சதீஷ். இவருக்குச் சொந்தமான லாரி, நாக்பூரில் இருந்து சத்தியமங்கலத்திற்கு 25 டன் பஞ்சு பேல்களை ஏற்றிக்கொண்டு வெள்ளிக்கிழமை அதிகாலை சென்று கொண்டிருந்தது. லாரியை சேலம் மாவட்டம், சங்ககிரியைச் சேர்ந்த வெங்கடேஷ் ஓட்டிச் சென்றார். சித்தோடு - கவுந்தப்பாடி சாலையில் தனியார் கல்லூரி அருகே சென்றபோது ஓட்டுநர் இருக்கைக்கு பின்பகுதியில் எதிர்பாராமல் தீப்பிடித்துள்ளது. இதைக் கண்ட வெங்கடேஷ் லாரியை நிறுத்திவிட்டு பவானி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு நிலைய அலுவலர் பழனிச்சாமி தலைமையில் விரைந்த தீயணைப்பு படையினர் தண்ணீரை பீச்சியடித்து தீயை அணைக்க முயன்றனர். ஆனால், தீ லாரியிலும் பரவி கொளுந்து விட்டு எரியத் தொடங்கியது. இதையடுத்து ஈரோட்டிலிருந்தும் தீயணைப்பு வாகனம் வரவழைக்கப்பட்டு தீயை அணைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இரண்டு வாகனங்கள் மாற்றி, மாற்றி தண்ணீரை கொண்டு வந்து தீயை அணைக்கும் முயன்ற போதிலும் தீ கட்டுக்குள் வரவில்லை. ஈரோடு மாவட்ட தீயணைப்பு அலுவலர் புளுகாண்டி மேற்பார்வையில் சுமார் 5 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் தீ முற்றிலும் அணைக்கப்பட்டது. இதில் லாரி மற்றும் 25 டன் பஞ்சு எரிந்து சேதமானது.   

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.