Doctor Vikatan: அடிக்கடி பாதிக்கும் ஆஸ்துமா; உடனடி நிவாரணம் தரும் நரம்பு ஊசி... பாதுகாப்பானதா?

Doctor Vikatan: என் நண்பனுக்கு 50 வயது. அவனுக்கு ஆஸ்துமா, வீஸிங் பிரச்னை உள்ளது. திடீரென வீஸிங் தீவிரமாகும்போது, மருத்துவரிடம் சென்று நரம்பின் வழியே செலுத்தப்படும் ஊசியைப் போட்டுக் கொள்வான். உடனே நிவாரணம் கிடைக்கும். இப்படி நரம்புவழி செலுத்தும் ஊசியை அடிக்கடி போட்டுக் கொள்ளலாமா.... இதனால் ஏதேனும் பாதிப்பு வருமா?

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த நுரையீரல் சிகிச்சை சிறப்பு மருத்துவர் திருப்பதி

நுரையீரல் மருத்துவர் திருப்பதி

ஆஸ்துமா, வீஸிங் தீவிரமான நபருக்கு மூச்சு விடும்போது சத்தம் அதிகம் கேட்கும். இருமல் அதிகமிருக்கும். இரவு நேரத்தில் இந்தத் தொல்லைகள் அதிகமிருக்கும். அந்நிலையில் பாதிப்பின் தீவிரத்தன்மையை உடனடியாகக் குறைக்க நரம்பில் ஊசி வழியே மருந்து செலுத்தப்படும்.

தீவிரம் குறைந்ததும் மறுபடி இன்ஹேலர் பயன்படுத்த அறிவுறுத்துவோம். உடனடி நிவாரணம் கிடைக்கிறது என்பதற்காக நரம்பில் செலுத்தும் ஊசி மருந்தை அடிக்கடி எடுத்துக்கொள்ளக்கூடாது. அதில் செலுத்தப்படும் மருந்தின் வீரியம் அதிகமாக இருக்கும். நேரடியாக ரத்தத்தில் செலுத்தப்படுவதால் பாதிப்புகளும் அதிகமிருக்கும்.

ஊசி

நோயாளி அடிக்கடி மருத்துவமனைக்கு வருவதைத் தவிர்ப்பது, அவசர சிகிச்சைக்கு வருவதைத் தவிர்ப்பது, இயல்பான வாழ்க்கையை வாழச் செய்வது... இவைதான் ஆஸ்துமா சிகிச்சையின் நோக்கங்கள். அந்த வகையில் நரம்புவழி ஊசி மருந்துகள் பாதுகாப்பானவை அல்ல, இன்ஹேலர்தான் பாதுகாப்பானது.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.