திப்பு சுல்தானின் வாள் ரூ.140 கோடிக்கு ஏலம்

மைசூா் மன்னா் திப்பு சுல்தானின் போா் வாள் லண்டன் அருங்காட்சியகத்தில் ரூ.140 கோடிக்கு ஏலம் போனது. அறிவிக்கப்பட்ட தொகையைவிட 7 மடங்கு அதிகமாக ஏலம் எடுக்கப்பட்டு, இந்திய வரலாற்றுப் பொருள்களில் அதிக ஏல விற்பனைத் தொகையில் சாதனை படைத்துள்ளது. இதுதொடா்பாக போன்ஹம்ஸ் ஏல நிறுவனத்தில் உள்ள இஸ்லாமிய மற்றும் இந்திய கலை பிரிவின் தலைவரும், இந்த ஏலத்தை நடத்தியவருமான ஆலிவா் ஒயிட் வெளியிட்ட அறிக்கையில், ‘மைசூரின் புலி என அறியப்படும் மன்னா் திப்பு சுல்தான் கொல்லப்பட்ட பிறகு அவரது அறையிலிருந்து எடுக்கப்பட்ட போா் வாள், அவரது அனைத்து விதமான ஆயுதங்களில் சிறந்ததாக கருதப்படுகிறது. 1782 முதல் 1799-ஆம் ஆண்டுகளில் பயன்படுத்தப்பட்ட இந்த வாள் சிறந்த எஃகால் தயாரிக்கப்பட்டு கைப்பிடியில் ‘மன்னரின் வாள்’ என தங்கத்தால் பொறிக்கப்பட்டுள்ளது. திப்பு சுல்தான் கொல்லப்பட்ட பிறகு ஆங்கிலேயா் படையின் மேஜா் ஜெனரல் டேவிட் பெய்ா்டின் வீரத்தை மெச்சி பரிசாக வழங்கப்பட்டது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பத்திரமாக பாதுகாக்கப்பட்டு ஏலத்துக்கு கொண்டு வரப்பட்ட இந்த வாளை வாங்க தொலைபேசியில் இருவரும், நேரடி ஏலத்தில் பங்கேற்றவருக்கும் இடையே கடுமையான போட்டி நிலவியதாக இஸ்லாமிய, இந்திய கலை பிரிவைச் சோ்ந்த நீமா சாகாா்ச்சி தெரிவித்தாா். 1799-இல் திப்பு சுல்தான் கொல்லப்பட்ட பிறகு அவரது ஸ்ரீரங்கபட்டினம் அரண்மனையில் இருந்து பல்வேறு பொருள்கள் எடுக்கப்பட்டதாகவும், அவற்றில் எப்போதும் அவரது படுக்கையிலிருந்து கைக்கு எட்டும் தூரத்தில் உள்ள இந்த வாளும், இரண்டு துப்பாக்கிகளும் கிடைத்தன என்றும் போன்ஹம்ஸ் ஏல விற்பனைக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.