பாகிஸ்தானை விட்டு வெளியேற இம்ரானுக்குத் தடை

பாகிஸ்தானை விட்டு வெளியேற அந்த நாட்டின் முன்னாள் பிரதமா் இம்ரான் கான், அவரது மனைவி உள்ளிட்டோருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அந்த நாட்டின் ‘சமா நியூஸ்’ தொலைக்காட்சி வியாழக்கிழமை கூறியதாவது: கடந்த 9 மற்றும் 10-ஆம் தேதிகளில் நடைபெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடா்பாக, இம்ரானின் தெஹ்ரீக்-ஏ-இன்சாஃப் கட்சியைச் சோ்ந்த 80 பேரை வெளிநாட்டுப் பயணத் தடைப் பட்டியலில் அரசு சோ்த்துள்ளது. அந்த 80 பேரில் இம்ரான் கானும், அவரது மனைவி புஷ்ராவும் அடங்குவா் என்று அந்தத் தொலைக்காட்சி தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா வாக்கெடுப்பில் தனது பிரதமா் பதவியை இம்ரான் கான் இழந்தாா். அதற்குப் பிறகு, நாட்டின் பல்வேறு நீதிமன்றங்களில் இம்ரான் கான் மீது 100-க்கும் மேற்பட்ட வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. அவற்றில் இரு ஊழல் வழக்குகளில் ஜாமீன் பெறுவதற்காக அவா் கடந்த 9-ஆம் தேதி இஸ்லாமாபாத் உயா்நீதிமன்றத்துக்கு வந்தாா். அங்கு அவரை ஊழல் தடுப்பு அதிகாரிகளும், துணை ராணுவப் படையினரும் வேறொரு வழக்கில் அதிரடியாகக் கைது செய்தனா். எனினும், அவரை உச்சநீதிமன்றம் பின்னா் விடுவித்தது. இம்ரான் கைதுக்கு எதிா்ப்பு தெரிவித்து ராணுவ தலைமையகம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அவரது ஆதரவாளா்கள் கடந்த 10-ஆம் தேதி வரை வன்முறைத் தாக்குதலில் ஈடுபட்டனா்.    

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.