Doctor Vikatan: அடிக்கடி வரும் வாய் துர்நாற்றம்... நிரந்தரத் தீர்வுகள் உண்டா?
Doctor Vikatan: எனக்கு அடிக்கடி வாய் துர்நாற்றப் பிரச்னை வருகிறது. அது குறித்து யாரும் என்னிடம் எதுவும் சொல்வதில்லை என்றாலும் என்னால் அதை உணர முடிகிறது. இதை எப்படிப் புரிந்துகொள்வது? பிரமையா அல்லது நிஜமாகவே வாய் துர்நாற்றம் இருக்குமா? இதற்கு நிரந்தரத் தீர்வுகள் உண்டா?
பதில் சொல்கிறார் வேலூரைச் சேர்ந்த குழந்தைகள் நலம் மற்றும் பொது மருத்துவர் கீதா மத்தாய்
நம்மில் 50 சதவிகித மக்களுக்கு வாய் துர்நாற்றம் இருக்கிறது. சிலர் தங்களுக்கு வாய் துர்நாற்றம் இருப்பதாக நினைத்துக் கொள்வார்கள். ஆனால் உண்மையில் அவர்களுக்கு அப்படி அந்தப் பிரச்னையே இருக்காது.
எதிராளிக்கு வாய் துர்நாற்றப் பிரச்னை இருப்பது தெரிந்தாலும் அதை அவரிடம் யாரும் சொல்ல மாட்டார்கள். நெருங்கிய நண்பர்கள், பெற்றோர்கூட இதைச் சொல்லத் தயங்குவார்கள். இந்நிலையில் நாமே நமக்கு வாய் துர்நாற்றம் இருக்கிறதா என்பதை டெஸ்ட் செய்து கொள்ள முடியும்.
உங்கள் இரு உள்ளங்கைகளையும் வாயின் மீது குவித்துவைத்து வாயால் மூச்சு விடுங்கள். பிறகு அந்தக் கையை மோந்து பாருங்கள். இதைச் செய்யத் தயக்கமாக இருந்தால் உங்கள் உள்ளங்கை கீழ் நோக்கி இருக்குமாறு திருப்பி, அதாவது புறங்கையில் விரல்களுக்கும் மணிக்கட்டுக்கும் இடையிலான பகுதியை நாக்கால் நக்கிப் பாருங்கள். அந்த உமிழ்நீர் காய்ந்ததும் அந்தப் பகுதியை மோந்து பாருங்கள். அந்த வாடையை வைத்து உங்கள் வாயில் துர்நாற்றம் இருக்கிறதா, இல்லையா என்பதை உறுதி செய்ய முடியும்.
வாய் துர்நாற்றத்தைப் போக்க இன்று மார்க்கெட்டில் ஏராளமான மவுத்வாஷ், பேஸ்ட், ரின்ஸ் என என்னென்னவோ கிடைக்கின்றன. ஆனால் அவையெல்லாம் இந்தப் பிரச்னைக்குத் தீர்வாகாது. வாய் துர்நாற்றத்துக்கான காரணம் தெரியாமல் அதை குணப்படுத்த முடியாது.
அந்த வாடையானது வாயிலிருந்து வருகிறதா, தொண்டையில் இருந்து வருகிறதா அல்லது வேறு எங்கிருந்துமா என்பதை முதலில் அறிய வேண்டும். எனவே இ.என்.டி மருத்துவர் அல்லது பல் மருத்துவரிடம் ஆலோசனை பெற வேண்டும்.
கண்ணாடி முன் நின்று வாயைத் திறந்து உள்ளே ஏதேனும் கட்டிகளோ, சீழோ இருக்கிறதா என்று பாருங்கள். உப்பு கலந்த வெதுவெதுப்பான நீரில் தினமும் இரண்டு முறை வாய் கொப்பளித்தாலே இந்தப் பிரச்னையால் ஏற்படும் வாய் துர்நாற்றம் நீங்கிவிடும்.

சைனஸ் பிரச்னை இருந்தால் தினமும் இருவேளை ஆவி பிடித்தால் வாய் நாற்றம் நீங்கும். பல் தொடர்பான பிரச்னைகள் இருந்தால் நிச்சயம் வாய் துர்நாற்றம் இருக்கும். தினமும் இருவேளைகள் மென்மையான பிரஷ்ஷால் பல் துலக்க வேண்டும். கூடவே நாக்கையும் சுத்தப்படுத்த வேண்டும்.
அடினாய்டு, டான்சில்ஸ், ஜலதோஷம் போன்ற பிரச்னைகளின் காரணமாக குழந்தைகளுக்கும் வாய் துர்நாற்றம் ஏற்படலாம். பெரியவர்களுக்கு புகை மற்றும் மதுப்பழக்கங்களால் வாய் துர்நாற்றம் இருக்கும்.
வாய் துர்நாற்றத்துக்கு இன்ஸ்டன்ட் தீர்வு வேண்டும் என்றால் சாப்பிட்ட உடனேயே சிறிது சீரகம் அல்லது சோம்பு அல்லது கிராம்பு அல்லது ஏலக்காய் மெல்லலாம். நிரந்தர தீர்வுக்கு மருத்துவ ஆலோசனைதான் பெஸ்ட்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.