திருவாரூர் ஆழித்தேர்: `ஆரூரா தியாகேசா...- புராணம் முதல் தாத்பர்யம் வரை!

பிறந்தால் முக்தி தரும் தலம் திருவாரூர். திருவாரூர் என்றாலே ஞாபகம் வருவது ஆழித்தேர்தான்.

புராணங்களில் தேர்

புராணங்களில் முதன்முதலில் சிவபெருமான் திரிபுராந்தகன் என்ற அசுரனை வதைக்க உருவாக்கியதே தேர் என்ற வடிவம். திரிபுராந்தகன் என்றொரு அசுரன் அகிலத்தில் மக்களுக்கும் தேவர்களுக்கும் பல தொல்லைகளைத் தொடர்ந்து கொடுத்து வந்தான். அவற்றைக் கண்டு கோபம் கொண்ட சிவபெருமான் அவனை அழிக்க எண்ணினார். ஆனால் திரிபுராந்தகன் பல மந்திர வித்தைகளைக் கற்றுத் தேர்ந்தவன். பல வரங்களையும் பெற்றிருந்தான்.

அதோடு அவன் ஓர் இடத்தில நிலைத்து இருக்க மாட்டான். வானில் அங்குமிங்கும் பறந்து செல்லும் சக்தியும் பெற்றிருந்தான். அதனால் அவனை அழிக்கச் சரியான காலம் மட்டுமல்ல, பலரின் உதவியும் சிவபெருமானுக்குத் தேவைப்பட்டது. அசுரன் பறந்து செல்பவனல்லவா, எனவே அவனை வதைக்கத் தானும் எதிலாவது பயணிக்க வேண்டும் என அவர் எண்ணினார்.

திருவாரூர் தேர் விழா!
ஈசன், இந்த உலகத்தையே தேராக மாற்றிக்கொண்டார். சூரியனும் சந்திரனும் சக்கரங்கள் ஆயினர். பிரம்மா தேரை செலுத்தும் தேரோட்டியானார். விஷ்ணு அம்பாக மாறினார். சரியான காலம் வந்ததும் அனைவரும் இணைந்து அந்த அசுரனை வீழ்த்தினர் என்கிறது புராணம்.

தேர்த்திருவிழாவின் தாத்பர்யம்

இந்த உடலையே தேராக எடுத்துக்கொண்டால், அதனைச் செலுத்தும் தேரோட்டி புத்தியாகும். நமது ஆன்மாவே தேரின் மையப்பொட்டாக விளங்கும் கடவுள். நம்முள் இருக்கும் ஆன்மாவை மனதில் தியானித்து தேரோட்டியான புத்தியின் பேச்சைக் கேட்டு நடந்தால் சொர்க்கத்தில் வாழலாம். அதை விடுத்து ஆன்மாவையே மறந்து தேரின் வெளித்தோற்றத்தில் மயங்கிக் கிடக்க வாழ்க்கையே நரமாகிவிடும். இவ்வாறு நினைத்து தேர் திருவிழாவைக் கொண்டாடினால், ஆன்மா இறைவனில் நிலைத்திருக்கும் என்பதுவே தாத்பர்யம்.

முற்காலத்தில், ஒரு நாட்டை ஆளும் அரசன் மக்களை நேரடியாகக் கண்டு அவர்களின் நலன்களை ஆராய வேண்டும். அதோடு மக்களும் தன்னை ஆளும் அரசனை தரிசனம் செய்ய வேண்டும். இதற்காகவே வீதி உலாவாக அரசன் தேரில் வருவார். அதே பின் மாறி கடவுள்களின் உற்சவ சிலைகளைத் தேரில் இழுத்து பவனி வந்தனர் பக்தர்கள். அதில் மிகவும் சிறப்புடையது ஆரூரின் ஆழித்தேர்.

திருவாரூர் ஆழித்தேர்

ஆரூரின் ஆழித்தேர்:

ஆழித்தேர், கடல் போன்ற பெரிய தேர்தான் ஆரூரின் தேர். உலகத்திலேயே பெரிய தேர் என்றால் அது இந்தத் திருவாரூர்த் தேர்தான். இந்தத் தேர்த் திருவிழா வெகு விமர்சையாக நடைபெறும். அனைத்து ஊர்களிலிருந்தும் மக்கள் வந்து இந்தத் தேர் இழுத்துக் கொண்டாடுவர். தேர் முனை திரும்பும் அழகைக் காணக் கண் கோடி போதாது என்பது திருவாரூர் மக்கள் வாக்கு. அத்தனை பேரழகாய் இருக்கும் இந்த தேர் திரும்பும் அழகு. இந்த ஆழித்தேர் இழுக்க இழுக்க, ஆரூரா தியாகேசா என்ற கோஷமும் வானை எட்டும் அளவுக் கேட்கும். அந்த உற்சாகத்தில் திளைத்தே மக்கள் தேர் இழுத்து மகிழ்வர்.

தேரின் அமைப்பு

எட்டு குதிரைகள் பூட்டி, பிரம்மா சாரதியாய் அமர, தியாகராஜர் அமர்த்தப்பட்டு ஆழித்தேர் அழகாய் பவனி வரும். அதன் முன்னே விநாயகரின் தேர் முதலாகவும், சுப்பிரமணிய சுவாமி தேர் இரண்டாவதாகவும் நிற்கும். மூன்றாவதாய் ஆழித்தேரும் அதன் பின் நீலோத்பலாம்பாளின் தேரும் இறுதியில் சண்டிகேஸ்வரர் தேரும் பவனி வரும். தியாகராஜர் முன் இருவரும், பின் இருவருமாய் சேர்த்து பஞ்ச மூர்த்தியாய் பவனி வருவர்.

தியாகராஜர் தேர்

தான தர்மம் செய்ய வாய்ப்பு

இந்தத் தேர் திருவிழா தான தர்மம் செய்திடவும் சிறந்த நாளாய் அமைகிறது. தேர் இழுக்கும் பக்தர்களுக்கு நீர்மோர், பானகம் அளித்தும் அன்னதானம் வழங்கியும் தங்கள் தர்மத்தை செய்கின்றனர் பலர். இதனால் புண்ணியம் பெறுகும் என்பது நம்பிக்கை.

இத்தகைய சிறப்புடைய தேர்த் திருவிழா இந்த ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதி நடக்கவுள்ளது. தேர் பிரித்துக் கட்டும் பணி ஒரு மாதம் முன்பே தொடங்கியது. இம்முறை தேர் விழாவிற்கு அடுத்த நாள் பங்குனி உத்திரமும் வருவதால், தேர்த் திருவிழாவோடு வருடத்தில் இருமுறையே காட்சி தரும் தியாகராஜரின் பாத தரிசனத்தையும் பக்தர்கள் கண்டு மகிழலாம்.

ஆரூரா தியாகேசா!

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.