Tamil News today live: ``100 நாள் வேலைத் திட்ட ஊதியம் ரூ.294 ஆக உயர்த்தப்படும் - ஐ.பெரியசாமி

``100 நாள் வேலைத் திட்ட ஊதியம் ரூ.294 ஆக உயர்த்தப்படும் - ஐ.பெரியசாமி

ஐ.பெரியசாமி

100 நாள் வேலைத் திட்டத்திற்கான ஊதியம் ஏப்ரல் 2-ம் தேதி முதல் ரூ.294 ஆக உயர்த்தி வழங்கப்படும் என ஊரகவளர்ச்சித் துறை அமைச்சர் ஐ .பெரியசாமி தெரிவித்திருக்கிறார்.

``அ.தி.மு.க-வும், பா.ஜ.க-வும் கூட்டணியில்தான் இருக்கிறது - இ.பி.எஸ்

இபிஎஸ்

சட்டமன்றத்துக்கு வெளியே இ.பி.எஸ் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ``வெள்ளை அறிக்கையின்படி, அ.தி.மு.க ஆட்சியில் 68 சதவிகித அறிவிப்புகள் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன. ஆரம்பத்திலிருந்து அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணியில்தான் இருக்கிறது. நடைபெற்று முடிந்த ஈரோடு கிழக்குத் தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலிலும் அ.தி.மு.க-வும் - பா.ஜ.க-வும் கூட்டணியில் இருந்தது. அ.தி.மு.க-வும், பா.ஜ.க-வும் கூட்டணியில்தான் இருக்கிறது. நாடாளுமன்றத் தேர்தலிலும் கூட்டணியாகத்தான் பயணம் செய்வோம். இது வரைக்கும் அப்படித்தான் பயணம் செய்துகொண்டிருக்கிறோம் என்றார்.

``செப்டம்பர் 17-ம் தேதி `வைக்கம் விருது வழங்கப்படும் - மு.க.ஸ்டாலின்

பெரியார்

இன்று நடைபெற்ற சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ``எல்லை கடந்து சென்று வைக்கத்தில் பெரியார் போராடியதை நினைவுகூரும் வகையில், பிற மாநிலங்களில் ஒடுக்கப்பட்டவர்கள் நலனுக்காகப் பாடுபட்டு, குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தும் ஆளுமைகள், நிறுவனங்களுக்கு ஆண்டுதோறும் `வைக்கம் விருது சமூக நீதி நாளான செப்டம்பர் 17-ம் நாள் அன்று தமிழ்நாடு அரசால் வழங்கப்படும். வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு விழா தமிழ்நாடு அரசு சார்பில், ஓராண்டு முழுவதும் நடைபெறும். வைக்கம் போராட்டம் நூற்றாண்டு நினைவாக சிறப்பு அஞ்சல் தலை வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

ஆவின் தயிர் பாக்கெட்டில் இந்தியைப் பயன்படுத்த அண்ணாமலை எதிர்ப்பு

அண்ணாமலை

`ஆவின் தயிர் பாக்கெட்டில் இந்தியைப் பயன்படுத்த வேண்டும் என்ற அறிவிப்பைத் திரும்பப் பெற வேண்டும்’ என மத்திய உணவு தர கட்டுப்பாட்டு ஆணையத்துக்கு அண்ணாமலை கடிதம் எழுதியிருக்கிறார். இது தொடர்பாக அவர் எழுதியிருக்கும் கடிதத்தில், `` பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு மாநில மொழிகளுக்கு முக்கியத்துவம் அளித்துவருகிறது. இந்த நிலையில் தயிர் பாக்கெட்டுகளில் `தஹி என்ற வார்த்தையை பயன்படுத்த வேண்டும் என்ற அறிவிப்பு, நம் பிரதமர் மோடியின் கொள்கையுடன் ஒத்துப்போகவில்லை. அதனால் உடனடியாக அதைத் திரும்பப் பெற வேண்டும் எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.