ஏப்ரல் 1 முதல் அத்தியாவசிய மருந்துகள் விலை உயர்வு; பட்டியலில் உள்ள மாத்திரைகள் என்னென்ன?

இந்தியாவில் மக்கள் பயன்படுத்தும் அத்தியாவசிய பொருளான மருந்துகளின் விலையை தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் (NPPA) நிர்ணயம் செய்கிறது. ஒவ்வோர் ஆண்டும் மருந்தின் விலை திருத்தப்பட்டு வருகிறது. மூலப்பொருள்களின் விலை அதிகரிப்பு, உற்பத்தி செலவினம் அதிகரிப்பு ஆகிய காரணங்களால் மருந்துகளின் விலையை மேலும் அதிகரிக்க மருந்து உற்பத்தி நிறுவனங்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

Tablets (Representational Image)

இந்த நிறுவனங்களின் கோரிக்கையை ஏற்று மருந்துகளின் விலையை உயர்த்த திட்டமிட்டு வருகிறது தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம். அதன்படி மொத்த விற்பனை விலைக் குறியீட்டில் (WPI) ஆண்டு மாற்றம் 12.2% ஆக அதிகரிக்கும் என NPPA தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு இது மொத்த விற்பனை குறியீட்டில் 10.7% ஆக இருந்தது. கடந்த ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மருந்துப் பொருள்களின் விலை 12%-க்கும் அதிகமாக உயர்த்தப்படுகிறது.

இதனையடுத்து வரும் ஏப்ரல் 1-ம் தேதி முதல் வலி நிவாரணிகள், தொற்று எதிர்ப்பு மருந்துகள், இதய நோய் மருந்துகள் மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகள் உள்ளிட்ட, மக்கள் அத்தியாவசியமாகப் பயன்படுத்தும் 384 மருந்துகளின் விலை, மற்றும் 900-க்கும் மேற்பட்ட மாறுபட்ட ஃபார்முலேஷன் கொண்ட மருந்துகளின் விலை உயரவுள்ளது.

Medicine

இந்த விலை உயர்வு மூலம் சந்தையில் எந்த மருந்துக்கும் தட்டுப்பாடு இருக்கக் கூடாது என்பதை உறுதி செய்யவும், அதே நேரம் மருந்து உற்பத்தியாளர்கள் மற்றும் மக்கள் இந்த விலை கட்டுப்பாடு மூலம் பலன் பெறவும் விலை உயர்வு நிர்ணயம் செய்யப்படுவதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

எந்தெந்த மருந்துகளின் விலை உயர்கிறது..?

ஹாலோதேன், ஐசோஃப்ளூரேன், கெட்டமைன், நைட்ரஸ் ஆக்சைட், டிக்லோஃபெனாக், இப்யூபுரூஃபன், மெஃபெனாமிக் அமிலம், பாராசிட்டமால், மார்பின், அமோக்ஸிசிலின், ஆம்பிசிலின், பெனிசிலின், செஃபாட்ராக்சில், செஃபாசோலின், செஃப்ட்ரியாக்சோம் மற்றும் கோவிட்டை கட்டுப்படுத்தும்  மருந்துகளின் விலையும் அதிகரிக்கிறது. 

Medicine

காசநோய் எதிர்ப்பு மருந்துகளான அமிகாசின், பெடாகுலின், கிளாரித்ரோமைசின் போன்றவையும், பூஞ்சை நோய் எதிர்ப்பு மருந்துகளான க்ளோட்ரிமாசோல், ஃப்ளூகோனசோல், முபிரோசின், நிஸ்டாடின், டெர்பினாஃபைன் போன்றவையும்,  வைரஸ் நோய் எதிர்ப்பு மருந்துகளான அசைக்ளோவிர், வால்கன்சிக்ளோவிர் போன்றவையும், எச்.ஐ.வியை கட்டுப்படுத்தும் மருந்துகளான அபாகாவிர், லாமிவுடின், ஜிடோவுடின், எஃபாவிரென்ஸ், நெவிராபின், ரால்டெக்ராவிர், டோலுடெக்ராவிர், ரிடோனாவிர் போன்றவையும், இரைப்பை மற்றும் குடல் சார்ந்த பிரச்னைகளுக்குப் பயன்படுத்தும் மருந்துகளான ORS, லாக்டுலோஸ், Bisacodyl போன்றவற்றின் விலையும் அதிகரிக்கப்படுகிறது. 

ஹார்மோன் மாத்திரைகள் மற்றும் கருத்தடை மருந்துகள், ஹெப்படைட்டிஸ் பி, டிபிடி தடுப்பூசி, ஜப்பானிய மூளை அழற்சி நோய்க்கான  தடுப்பூசி, தட்டம்மை  தடுப்பூசி, ரேபிஸ் தடுப்பூசி போன்றவற்றுக்கான  விலையும் அதிகரிக்கிறது. 

தடுப்பூசி

கண் பிரச்னை சார்ந்த மருந்துகள், ஆக்ஸிடோசிக்ஸ், மனநல  சிகிச்சையளிப்பதற்கான மருந்துகள், சுவாசக்குழாய் கோளாறுக்கான மருந்துகள், வைட்டமின் மாத்திரைகள் மற்றும் தாதுக்கள் நிறைந்த மருந்துகள், மலேரியாவை குணப்படுத்தும் மருந்துகளான ஆர்ட்சுனேட், ஆர்டெமீதர், குளோரோகுயின், கிளிண்டமைசின், குயினைன், ப்ரிமாகுயின் போன்றவையும், புற்றுநோய் சிகிச்சை மருந்துகளான ஃப்ளோரூராசில், ஆக்டினோமைசின் டி, ஆல்-டிரான்ஸ் ரெட்டினோயிக் அமிலம், ஆர்சனிக் ட்ரை ஆக்சைடு, கால்சியம் ஃபோலினேட் போன்றவையும், ரத்த சோகை சிகிச்சைக்காக பயன்படுத்தப்படும் ஃபோலிக் அமிலம், இரும்பு சுக்ரோஸ், ஹைட்ராக்ஸோகோபாலமின் போன்றவையும், கார்டியோவாஸ்குலர் சிகிச்சைக்கான மருந்துகளான டிலிடாசெம், மெட்டோப்ரோலால், டிகோக்சின், வெராப்ராமில், அம்லோடிபைன், ராமிபிரில், டெல்மிசார்டன் போன்றவற்றின் விலையும் அதிகரிக்கின்றன. 

சரும நோய்களுக்கான மருந்துகள், புடெசோனைடு, சிப்ரோஃப்ளோக்சசின், க்ளோட்ரிமாசோல், கிருமிநாசினிகளான குளோரோஹெக்சிடின், எத்தில் ஆல்கஹால், ஹைட்ரஜன் பெராக்சைடு, போவிடின் அயோடின், பொட்டாசியம் பெர்மாங்கனேட் ஆகியவற்றின் விலையும் உயர்த்தப்படுகிறது. 

tonic

இதற்கிடையில்,  20 மாநிலங்களில் உள்ள 76 மருந்து தயாரிக்கும் நிறுவனங்களில் இந்திய மருந்துக் கட்டுப்பாட்டாளர் ஜெனரல் (டிசிஜிஐ) ஆய்வு செய்ததைத் தொடர்ந்து, மோசமான தரம் மற்றும் போலி மருந்துகளை உற்பத்தி செய்ததற்காக 18 மருந்து நிறுவனங்களின் உரிமங்களை மத்திய அரசு நேற்று (28-3-23) ரத்து செய்தது. மேலும் 26 நிறுவனங்களுக்கு  நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. இவற்றில் பெரும்பாலான நிறுவனங்கள் இமாச்சல பிரதேசம், மத்திய பிரதேசம் மற்றும் உத்தரகண்ட் மாநிலங்களில் செயல்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.