திருவண்ணாமலை கோயில் அருகே இன்று பாஜக நிர்வாகி ஆக்கிரமித்த கட்டிடம் இடித்து அகற்றம்: டிஎஸ்பி தலைமையில் போலீசார் குவிப்பு

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் எதிரே அறநிலையத்துறைக்கு சொந்தமான இடத்தை பாஜக நிர்வாகி ஆக்கிரமித்து கட்டிய கட்டிடங்கள் இன்று இடித்து அகற்றப்பட்டது. இதையொட்டி டிஎஸ்பி தலைமையில் 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.   திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் அம்மணி அம்மன் கோபுரம் எதிரே அம்மணிஅம்மன் மடத்துக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமித்து தனிபர்கள் கட்டிடம் கட்டியிருப்பதாக இந்து அறநிலையத்துறைக்கு புகார்கள் வந்தது. அதன்பேரில் நடத்தப்பட்ட விசாரணையில் பாஜகவில் ஆன்மிகம் மற்றும் கோயில் மேம்பாட்டு பிரிவு அணி மாநில துணை தலைவராக உள்ள சங்கர் என்பவர், அம்மணி அம்மன் மடத்துக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமித்து கட்டிடம் கட்டியது ஆவணங்களின் அடிப்படையில் உறுதிசெய்யப்பட்டது. இந்த அடுக்குமாடி கட்டிடத்தை அகற்ற அறநிலையத்துறை இணை ஆணையர் குமரேசன் உத்தரவிட்டார். அதன்படி இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான இடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை பாரபட்சமின்றி அகற்ற வேண்டும் என ஏற்கனவே நீதிமன்றம் தெரிவித்திருந்த வழிகாட்டுதல்களின் அடிப்படையில் அறநிலையத்துறை இந்த நடவடிக்கை மேற்கொண்டது. ஆக்கிரமிப்பு செய்திருந்தவர்களுக்கு, அறநிலையத்துறை சார்பில் ஏற்கனவே நோட்டீஸ் வழங்கப்பட்டிருந்தது. நோட்டீஸில் குறிப்பிட்ட கால அவகாசம் நிறைவடைந்ததையடுத்து இன்று காலை கட்டிடங்கள் அகற்றும் பணி நடந்தது. டவுன் டிஎஸ்பி குணசேகரன் தலைமையில் 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புடன் ஜேசிபி இயந்திரம் மூலம் ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் இடித்து அகற்றப்பட்டது. இந்த பணிகளை வருவாய் துறையினர், நகராட்சி துறையினர், அறநிலையத்துறை அதிகாரிகள் கண்காணித்தனர். மீட்கப்பட்ட அறநிலையத்துறைக்கு சொந்தமான இந்த இடம் பல கோடி மதிப்புள்ளது என கூறப்படுகிறது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.