அம்பானியால் கேள்விக்குறியாகும் ரூ.3,400 கோடி; கலக்கத்தில் எல்.ஐ.சி

அம்பானி சகோதரர்களில் இளையவரான அனில் அம்பானி வாங்கிய கடனால் எல்.ஐ.சி நிறுவனத்துக்கு ரூ.3,400 கோடி இழப்பு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.

அனில் அம்பானியின் ரிலையன்ஸ் குழும நிறுவனங்களில் ஒன்றான ரிலையன்ஸ் கேப்பிட்டல் எல்.ஐ.சி நிறுவனத்திடமிருந்து ரூ.3,400 கோடி கடன் பெற்றுள்ளது. இந்தக் கடனில் ரூ.782 கோடியை மட்டுமே ரிலையன்ஸ் கேப்பிட்டலால் திரும்பச் செலுத்த முடியும் என நிறுவனத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எல்.ஐ.சி

இதனால் மீதமுள்ள கடன் தொகை முழுவதும் எல்.ஐ.சி நிறுவனத்துக்கு நஷ்டத்தை ஏற்படுத்தும் என்று தெரிகிறது. இந்த நஷ்டத்தைத் தவிர்ப்பதற்காக எல்.ஐ.சி நிறுவனம் கடன் வசூலிப்பு நிறுவனங்களை அணுகியுள்ளது.

இந்த முயற்சியில் ACRE SSG என்ற நிறுவனம் ரிலையன்ஸ் கேப்பிட்டல் வாங்கியக் கடனை வாங்கிக் கொள்ள முன்வந்தது. ஆனால், கடன் தொகையில் 73 சதவிகிதத்தை தள்ளுபடி செய்ய வேண்டுமெனவும் மீதமுள்ள தொகையை மட்டும் வாங்கிக் கொள்வதாக நிபந்தனை வைத்தது. இந்த நிபந்தனையை ஏற்றால் எல்.ஐ.சி நிறுவனத்துக்கு ரூ.3,400 கோடியில் 73 சதவிகிதம் நஷ்டம் உண்டாகும். அதாவது ரூ.2,482 கோடி இழப்பு ஏற்படும்.

அதேசமயம் வேறு எந்த நிறுவனமும் இந்தக் கடனை வாங்கிக் கொள்ள முன்வரவில்லை. இதனால் ACRE SSG நிறுவனத்துக்கும் கடனை விற்க முடியாமல் வேறு நிறுவனங்களையும் பிடிக்க முடியாமல் எல்.ஐ.சி திணறிவருகிறது.

அனில் அம்பானி, முகேஷ் அம்பானி

அனில் அம்பானியின் ரிலையன்ஸ் குழுமம் மிகப்பெரிய நிதி நெருக்கடியில் சிக்கி திவால் ஆனதால் எல்.ஐ.சிக்கு வந்த சோதனை இது. முகேஷ் அம்பானி மேலும் மேலும் வளர்ந்துகொண்டே இருக்கிறார். ஆனால் அனில் அம்பானியால் வாங்கியக் கடனைத் திருப்பித் தர முடியவில்லை. அம்பானி சகோதரர்களிடையே நிலவும் இந்த முரண் தொழில்துறையில் பரபரப்பாகப் பேசப்படும் ஒன்றாகத் தொடர்கிறது. சமீபத்தில் அனில் அம்பானிக்கு உதவும் வகையில் சில முடிவுகளை முகேஷ் அம்பானி எடுத்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.