உள்ளாட்சி தேர்தலுக்கு கூட பிரசாரம் செய்கிறார் 100 தலை ராவணனா மோடி: கார்கே சர்ச்சை பேச்சு; பாஜ கடும் கண்டனம்

அகமதாபாத்: பிரதமர் பதவிக்கான கடமையை செய்யாமல் எந்த தேர்தல் நடந்தாலும் அங்கு பிரசாரம் செய்யும் மோடி, 100 தலை ராவணனா? என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறினார். இதற்கு பாஜ கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. குஜராத் சட்டப்பேரவை தேர்தலையொட்டி அகமதாபாத்தில் நடந்த பிரசார கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேசியதாவது: பிரதமர் மோடி தன் வேலை என்ன என்பதையே மறந்துவிட்டு,  உள்ளாட்சி தேர்தல், சட்டப்பேரவை தேர்தல், நாடாளுமன்ற தேர்தல் எங்கு நடந்தாலும் சரி அங்கு போய் பிரசாரம் செய்கிறார. எங்கு போனாலும் தன்னை பற்றியே பேசுகிறார். என் முகத்துக்காக ஓட்டு போடுங்கள் என்று பிரசாரம் செய்கிறார்.எத்தனை முறைதான் மோடியின் முகத்தை நாம் பார்ப்பது. எத்தனை வடிவத்தில் அவர் நடமாடுகிறார் என்பது தெரியவில்லை. 100 தலை ராவணனா மோடி. நகராட்சி, மாநகராட்சி தேர்தலில் போட்டியிடும் பாஜ வேட்பாளர்கள் கூட தங்களுக்காக ஓட்டு கேட்பதில்லை. மோடியின் முகத்துக்காக ஓட்டு போடுங்கள் என்றுதான் பிரசாரம் செய்து வருகின்றனர். மோடியா நேரடியாக நகராட்சிக்கு வந்து மக்களின் குறைகளை தீர்க்க போகிறார். இவ்வாறு கார்கே பேசினார்.இது பற்றி பாஜ ஐ.டி பிரிவு தலைவர் அமித் மால்வியா கூறுகையில், பிரதமர் மோடியை ராவணனோடு ஒப்பிட்டு குஜராத்தையும், குஜராத்திகளையும் கார்கே அவமதித்துவிட்டார். சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் தோல்வி உறுதியாகிவிட்டதால், ஆத்திரத்தில் கார்கே இப்படி வார்த்தைகளை கொட்டி உள்ளார். அவரது பேச்சு கண்டனத்துக்குரியது. இதற்கு குஜராத் வாக்காளர்கள் தேர்தலில் தக்க பதிலடி கொடுப்பார்கள்’ என்றார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.