Doctor Vikatan: முதியவர்களைத் தாக்கும் நுரையீரல் தொற்று... தடுக்க முடியுமா?

Doctor Vikatan: நுரையீரலில் சளி சேர்வதால் உயிரிழக்கும் முதியவர்கள் பற்றி அடிக்கடி கேள்விப்படுகிறோம். இதற்கு என்ன காரணம்? தவிர்க்க முடியுமா?

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த தொற்றுநோய் சிகிச்சை சிறப்பு மருத்துவர் குமாரசாமி...

டாக்டர் குமாரசாமி

முதியவர்களுக்கு நுரையீரலில் தொற்று ஏற்படுவது பரவலான ஒரு விஷயம். இந்தத் தொற்றானது பாக்டீரியாவாலோ அல்லது வைரஸ் கிருமிகளாலோ அல்லது பூஞ்சைகளாலோ வரலாம். இவற்றில் முதியவர்களை பாதிக்கும் மிகப் பரவலான தொற்று பாக்டீரியா கிருமிகளால் ஏற்படுவதுதான்.

வயதாக, ஆக நோய் எதிர்ப்புத்திறன் குறைவதால் தான் இத்தகைய தொற்றுகளுக்கு முதியவர்கள் எளிதில் இலக்காகிறார்கள். ஒருவேளை முதியவர்களுக்கு சர்க்கரைநோய் இருந்தால் நோய் எதிர்ப்பாற்றல் மேலும் குறையும். புற்றுநோய் பாதித்து அதற்கான சிகிச்சையில் இருப்பவர்களுக்கும் நோய் எதிர்ப்புத் திறன் குறையும். இப்படி நோய் எதிர்ப்பாற்றல் இல்லாதவர்களை விதம்விதமான பாக்டீரியா தொற்றுகள் பாதிக்கலாம்.

இந்தத் தொற்றுகளை அலட்சியம் செய்யாமல், சரியான சிகிச்சை கொடுக்காவிட்டால் உயிருக்கே ஆபத்தாக முடியும் அபாயம் இருக்கிறது.

இது தவிர சில முதியவர்கள் ஏதேனும் உடல்நலக் கோளாறு காரணமாக சிகிச்சைபெற மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பார்கள். அந்நிலையில் அவர்களுக்கு நோய் எதிர்ப்பாற்றல் குறைவாக இருக்கும். தவிர மருத்துவமனை சூழலிலிருந்தும் இவர்களுக்கு நோய்த்தொற்று பரவலாம். இதை Hospital-acquired infections என்று சொல்வோம். மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் முதியவர்கள் சந்திக்கும் பெரிய பிரச்னை இது.

ஆகஸ்ட் தொடங்கி, டிசம்பர் வரையிலான மாதங்களில் முதியவர்களுக்கு ஃப்ளு காய்ச்சல் பாதிக்கலாம். இது இன்ஃப்ளுயென்ஸா எனும் வைரஸால் ஏற்படுகிற தொற்று. இந்தத் தொற்று எந்த வயதினரையும் பாதிக்கும் என்றாலும் முதியவர்களை பாதிக்கும்போது தீவிரம் அதிகமாக இருக்கும். சரியான சிகிச்சை அளிக்கப்படாதபோது அது நிமோனியாவாக மாறி தீவிரமாகி, உயிரிழக்கும் நிலைக்கும் போகலாம்.

நுரையீரல்

எனவே, முதியவர்களைப் பொறுத்தவரை பாதிப்பு தீவிரமடையும்வரை காத்திருக்காமல், ஆரம்ப அறிகுறிகள் தென்பட்டதுமே மருத்துவரை சந்தித்து சரியான சிகிச்சைகளை மேற்கொள்வதுதான் பாதுகாப்பானது. சளி, காய்ச்சலை அலட்சியம் செய்ய வேண்டாம்.

இவை தவிர முதியவர்களை காசநோய் எனும் டிபியும் அதிகம் பாதிக்கலாம். எந்த பாதிப்பாக இருந்தாலும் தாமதிக்காத, சரியான நேரத்து மருத்துவப் பரிசோதனையும் சிகிச்சையுமே நோயின் தீவிரத்திலிருந்து அவர்களைக் காப்பாற்றும்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.