``ராமர் கோயில் மீதான எதிர்ப்புதான் காங்கிரஸின் இந்த கறுப்பு உடை போராட்டம் - அமித் ஷா

நேஷனல் ஹெரால்டு முறைகேடு தொடர்பாக, அமலாக்கத்துறை முதலில் ராகுல் காந்தியிடம் விசாரணை நடத்தத் தொடங்கியதிலிருந்தே, மத்திய அரசுக்கு எதிராக காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தத் தொடங்கினர். பின்னர் சோனியா காந்தியிடம் விசாரணை ஆரம்பிக்கப்பட்டதும் போராட்டம் இன்னும் அதிகமானது. அந்த வரிசையில், விலைவாசி உயர்வு, வேலையின்மை மற்றும் ஜி.எஸ்.டி வரி உயர்வுக்கு எதிராக, காங்கிரஸ் தலைவர்கள் உட்பட பலரும் மத்திய அரசுக்கு எதிராக கறுப்பு உடை அணிந்து போராட்டம் நடத்தினர்.

போராட்டத்தில் ராகுல் காந்தி

இந்த போராட்டத்தில், காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி உட்பட பலரையும் போலீஸார் கைதுசெய்தனர். மேலும், இதில் பிரியங்கா காந்தியை போலீஸார் இழுத்துச்செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி எதிர்க்கட்சிகளின் கண்டனங்களுக்கு உள்ளானது.

இந்த நிலையில், காங்கிரஸின் இந்த போராட்டத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறார்.

அமித் ஷா

இது தொடர்பாக பேசிய அமித் ஷா, ``ஏன் அவர்கள் தினமும் போராட்டம் நடத்துகிறார்கள்? காங்கிரஸுக்கு இதில் ஒரு மறைமுக செயல்திட்டம் இருப்பதாக நான் உணர்கிறேன். அமலாக்கத்துறை இன்று யாரையும் வரவழைக்கவில்லை, யாரையும் விசாரிக்கவும் இல்லை. ரெய்டுகளும் எதுவும் நடக்கவில்லை. பிறகு ஏன் இன்று போராட்டம் நடத்த வேண்டும் என்று புரியவில்லை.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் தான், 550 ஆண்டுகாலப் பிரச்னைக்கு அமைதியான முறையில் தீர்வை வழங்கி, ராம ஜென்ம பூமிக்குப் பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். இந்த நிலையில், ராமர் கோயில் கட்டுமான பணிக்கு எதிர்ப்பு தெரிவித்தே, போராட்டம் மூலம் காங்கிரஸ் மறைமுகமாக தங்களின் நிலைப்பாட்டைத் தெரிவித்திருக்கிறது. ஒருதரப்பினரைத் திருப்திப்படுத்தும் அரசியலை அனைத்து கட்சிகளுமே கைவிடவேண்டும். அத்தகைய திருப்திப்படுத்தும் கொள்கை நாட்டுக்கும், காங்கிரஸுக்கும் நல்லதல்ல" என்று கூறினார்.

காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ்

அமித் ஷாவின் கருத்துக்கு எதிராக , ``விலைவாசி உயர்வு, வேலையின்மை மற்றும் ஜி.எஸ்.டி வரி உயர்வுக்கு எதிரான காங்கிரஸின் இன்றைய ஜனநாயகப் போராட்டங்களைத் திசைதிருப்பும் தீவிர முயற்சியை உள்துறை அமைச்சர் மேற்கொண்டிருக்கிறார்" என காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் ட்வீட் செய்திருந்தார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.