தைவானை சுற்றி 2வது நாளாக போர் பயிற்சி 100 விமானங்களை அனுப்பியது சீனா: பெலோசிக்கு பொருளாதார தடை

பீஜிங்: தைவானை சுற்றி 2வது நாளாக போர் பயிற்சியில் ஈடுபட்டு வரும் சீனா, அங்கு 100 போர் விமானங்களையும், 10 போர்க்கப்பல்களையும் அனுப்பி வைத்தது. எச்சரிக்கையை மீறி தைவான் சென்றதற்காக, அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசிக்கு சீனா பல்வேறு தடைகளை விதித்துள்ளது. ஆசிய சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி, கடந்த 3ம் தேதி சீனாவின் கடும் எச்சரிக்கையையும் மீறி தைவான் சென்றார். 25 ஆண்டுக்குப் பிறகு தைவான் சென்ற முதல் அமெரிக்க தலைவர் இவர்தான். தைவான் தனது நாட்டின் ஒரு பகுதி என்று சீனா உரிமை கொண்டாடி  வருவதால், பெலோசி பயணத்தை அதனால் ஏற்க முடியவில்லை. அவரை அனுமதித்த தைவானை மிரட்டும் தொனியில், அந்நாட்டை சுற்றி கடல் பகுதியில் 6 இடங்களில் போர் ஒத்திகையை நேற்று முன்தினம் தொடங்கியது. இதன் காரணமாக, தைவான் ஜலசந்தியில் கடுமையான போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது.சீனாவின் இந்த முப்படை போர் பயிற்சி 2வது நாளாக நேற்றும் தொடர்ந்தது. இதில், 100 போர் விமானங்களையும், 10 போர் கப்பல்களையும் சீனா அனுப்பி வைத்துள்ளது. இந்த பயிற்சியில் உண்மையான வெடிகுண்டுகள் பயன்படுத்தப்படுகின்றன. மேலும், அதிநவீன ஏவுகணைகளையும் சீனா ஏவி தைவானை மிரட்டிக் கொண்டிருக்கிறது. நேற்றைய பயிற்சியின் போது, சீனாவின் பல போர் விமானங்கள் தைவான் வான்வெளியில் பறந்து பயிற்சி மேற்கொண்டன. மேலும், சீன போர்க்கப்பல்களில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணைகள் தைவான் வான் பரப்பில் பயணித்து, கடல் இலக்கை துல்லியமாக தகர்த்தன. சீன போர்க்கப்பல்கள் ஏவிய 5 ஏவுகணைகள் ஜப்பானின் கடல் எல்லையை ஒட்டி பசிபிக் பெருங்கடலில் விழுந்ததாக கூறப்படுகிறது. இதனால், சர்வதேச நாடுகள் தங்களுக்கு ஆதரவு வழங்க வேண்டுமென வலியுறுத்தி உள்ள தைவான் அரசு, தனது நாட்டு ராணுவத்தையும், போர் கப்பல்களையும் எல்லையை நோக்கி நகர்த்தி உள்ளது. இதற்கிடையே, தைவான் சென்றதற்காக பெலோசியும். அவரது குடும்பத்தினரும் தனது நாட்டில் நுழைய சீன அரசு தடை விதித்துள்ளது. தைவானை தொடர்ந்து தென் கொரியா சென்ற பெலோசி, நேற்று ஜப்பான் நாட்டிற்கு சென்றார். அங்கு பேசிய அவர், ‘தைவானுக்கு அமெரிக்க அதிகாரிகள் வந்து செல்வதை சீனாவால் ஒருபோதும் தடுக்க முடியாது,’ என கூறினார். சீனாவின் போர் பயிற்சி பிராந்தியத்தில் அமைதியையும், பாதுகாப்பையும் சீர்குலைத்திருப்பதாக ஜப்பான் வருத்தம் தெரிவித்துள்ளது. இது சீனாவுக்கு மேலும் ஆத்திரத்தை ஏற்படுத்தி இருப்பதால், தைவான் ஜலசந்தியில் போர் பதற்றம் அதிகரித்துள்ளது.அமெரிக்கா உடனான பேச்சுவார்த்தை ரத்துபெலோசியின் தைவான் பயணத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில், பருவநிலை மாற்றம், ராணுவ விவகாரம், போதை தடுப்பு போன்றவை தொடர்பாக அமெரிக்காவுடன் நடத்தி வந்த அனைத்து பேச்சுவார்த்தைகளும் ரத்து செய்யப்படுவதாக சீனா அறிவித்துள்ளது. ஐரோப்பிய தூதர்களுக்கு சம்மன்* சீனாவின் போர் பயிற்சிக்கு ஜி7 நாடுகளும், ஐரோப்பிய யூனியனும் கடும் கண்டனம் தெரிவித்தைத் தொடர்ந்து, ஐரோப்பிய நாடுகளின் தூதர்களுக்கு சீனா சம்மன் அனுப்பி உள்ளது.* சீன போர் பயிற்சியை அமெரிக்காவும் கண்டித்துள்ளது.* தொழில்நுட்ப சாதனங்களுக்கு அத்தியாவசியமான செமி கன்டக்டரை உலகிலேயே அதிகளவில் தயாரிக்கும் தைவானின் டிஎஸ்எம்சி நிறுவனத்தின் கிளையை அமெரிக்காவில் அமைப்பதும், சீன நிறுவனங்களுக்கு அதிநவீன சிப்களை தயாரித்து வழங்குவதை தடுப்பதும்தான் பெலோசியின் தைவான் பயணத்தின் முக்கிய காரணங்களில் ஒன்றாக கூறப்படுகிறது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.