செஸ் ஆட்டத்தில் தூங்கிய வீரர்... பகலில் தூக்கம் வருவது உடல்நலத்துக்கு நல்லதா, கெடுதலா?

மாமல்லபுரத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் செஸ் ஒலிம்பியாடு போட்டியில் 186 நாடுகளைச் சேர்ந்த 2,000-க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றுள்ளனர். அதில் 5-வது சுற்று ஆட்டத்தில் நார்வே நாட்டைச் சேர்ந்த உலக செஸ் சாம்பியன் மாக்னஸ் கார்ல்சன் - ஜாம்பியா வீரர் கிலன் ஆகியோர் மோதினர். இந்த ஆட்டத்தைப் பலரும் ஆர்வத்துடன் பார்த்து வந்தனர்.

செஸ் ஒலிம்பியாட்

ஆட்டத்தின் நடுவே லேசாக கண்ணயர்ந்துவிட்டார் மேக்னஸ் கார்ல்சன். ஆனாலும், விழித்துக்கொண்ட அவர் சுறுசுறுப்பாகக் களமிறங்கினார். போட்டியில் 26-வது நகர்த்தலில் ஜாம்பியா வீரரை வீழ்த்தி மாக்னஸ் கார்ல்சன் வெற்றியும் பெற்றார்.

மேக்னஸ் கார்ல்சன் வெற்றி பெற்றாலும், ஆட்டத்தின் நடுவே அவர் தூங்கியது பரபரப்பாகப் பேசப்பட்டது.

பொதுவாக, பலருக்கும் பகலில் தூங்கும் பழக்கம் உள்ளது. பகலில் தூக்கம் வருவது ஏன்? அது ஆரோக்கியதுக்கு நல்லதா? என்ற கேள்வியை திருநெல்வேலியைச் சேர்ந்த பொது அறுவைசிகிச்சை மருத்துவர் மகாலிங்கம் ஐயப்பன் முன் வைத்தோம். அவர் சொன்ன விளக்கங்கள்:

உடலுக்குள் ஒரு கடிகாரம்

நமது உடலில் பயலாஜிக்கல் கிளாக் என்ற உயிரியல் கடிகாரம் உள்ளது. இதுதான் இரவு பகல் வித்தியாசத்தை நம் உடலில் உள்ள ஒவ்வொரு செல்லுக்கும் உணர்த்துகிறது. உயிர் சக்கரம் என்று சொல்லப்படும் பயலாஜிக்கல் கிளாக் , பூமியின் சுழற்சி, பரிணாம வளர்ச்சிக்கேற்ப நமது உடலை தகவமைத்துக் கொள்ளும்.

தூக்கம்

இரவு பகலை உணர்த்தி தூக்கத்தை ஏற்படுத்துவதும், விழிக்க வைப்பதும் இந்த பயலாஜிக்கல் கிளாக் என்ற சிஸ்டம் காரணமாக இருக்கிறது. பகலில் நம்மை சுறுசுறுப்பாக இயக்கவும், சூரியன் மறைந்த மாலை நேரத்துக்குப் பிறகு, மெள்ள மெள்ள ஓய்வுக்குத் திரும்பவும் வைக்கிறது. இரவு உறங்க வைக்கிறது. உறக்கம், உணவுமுறை, ஹார்மோன்களை வெளியிடுதல், ரத்த அழுத்தம் போன்றவற்றுக்கு காரணமாக பயலாஜிக்கல் கிளாக் அமைந்துள்ளது.

பழக்க தோஷம் ( Habit formation )

சில சமயங்களில் பகலில் அதிகமாகச் சாப்பிட்டாலோ, அதிகமாக வேலை செய்தலோ, அசதியால் ஓய்வுக்காக தூக்கம் வரும், அது இயல்பானது.

சிலர் பகலில் வேலைகள் செய்யாமல், எந்தக் காரணமும் இல்லாமல் தூங்கிக்கொண்டிருப்பார்கள்... அது Habit formation எனப்படும் வழக்கம். இவர்கள் பகலில் தூங்கினால் உடலுக்கு நல்லது என்ற மூடநம்பிக்கையில் இருப்பார்கள்.

மதிய உணவுக்குப் பிறகு, சிறிது ஓய்வும் உறக்கமும் தேவை, தூங்கி விழித்தெழுந்தால் சுறுசுறுப்பாகப் பணிகளில் ஈடுபடலாம் என நினைப்பது அறியாமைதான். பகலில் தூங்குவதால் எந்த நன்மையும் கிடையாது.

தூக்கம்

உறங்கும் நேரம் 

இயற்கையாகவே பகலில் சுறுசுறுப்பும், இரவில் ஆழ்ந்த உறக்கமும் இருப்பதுதான் ஆரோக்கியத்தின் அடையாளம். பகலில் தூங்குவதும், இரவில் விழித்திருப்பதும் உடல் நலத்துக்கு கெடுதலை ஏற்படுத்தும். பல உடல் உபாதைகள் உருவாக அதுவே காரணமாகும். காலையில் புத்துணர்ச்சியுடன் எழுவதற்கும், மனம் விழிப்புடன் இருப்பதற்கும் இரவு தூக்கம் அவசியமாகிறது.

6 - 8 மணி நேரம் உறக்கம் இருந்தால் நல்லது. ஆனால், இன்றைய சூழலில் அரசியலில் இருப்பவர்கள் உட்பட பலரால் இத்தனை மணி நேரம் தூங்க முடிவதில்லை. அவர்கள் 4 - 5 மணி நேரமாவது அவசியம் உறங்கியாக வேண்டும். மனிதனுக்கு உடலளவிலும் மனதளவிலும் ஓய்வைத் தருவது தூக்கம். அதில் ஆழமாகத் தூங்குவது என்பது முக்கியம்.

இரவு நேரம்

இரவு நேரப் பணிகள் 

சிலர் நைட்ஷிஃப்ட் வேலை பார்ப்பார்கள். டீக்கடைகள், பேருந்து நிலையங்கள், விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள், கால் சென்டர்கள் என இரவு நேரம் பணி செய்வார்கள்... ஒரு மாதம் நைட் ஷிஃப்ட், மறு மாதம் பகல் ஷிஃப்ட் என மாறி மாறி பணி செய்வார்கள். இரவு முழித்திருந்து வேலை செய்வார்கள். பகலில் அவர்கள் உறங்குவார்கள், இதுவும் Habit formation தான்.

பயலாஜிக்கல் கிளாக் அவர்கள் சூழலுக்கு ஏற்ப உடலைத் தகவமைத்து உறக்கத்தை ஏற்படுத்தும. என்றாவது ஒருநாள் இரவு நேரம் விழித்திருப்பவர்களுக்கு Habit formation ஆகாது, ஒரு நாள் நைட் ஷிஃப்ட், ஒருநாள் பகல் ஷிஃப்ட் என உடனுக்குடன் மாற்றி பணியாற்றக் கூடாது. இது உடல்நலனை பாதிக்கும்.

ஜெட் லேக்  (Jet lag)

சர்வதேசப் பயணங்களை மேற்கொள்ளும்போது ஜெட் லேக் (Jet lag) பிரச்னையால் தற்காலிக தூக்க பிரச்னை உண்டாகும்.

நாம் இந்தியாவில் இருந்து அமெரிக்கா பயணம் செய்கிறோம் என்றால் இங்கே பகலில் கிளம்பும்போது அங்கே இரவு நேரம்... அங்கு சென்று சேரும்போது அங்கே பகல் நேரம் தொடங்கிவிடும். இந்தப் பயண நேர மாறுபாடு மற்றும் காலநிலை மாறுபாட்டை நமது பயலாஜிக்கல் கிளாக் உடனடியாக ஏற்றுகொள்ளாது... இதனால் ஜெட் லேக் (Jet lag) பிரச்னை ஏற்படுகிறது.

இதனால் பகல்நேர சோர்வு, உடல் நலக்குறைவு, விழிப்புடன் இருப்பதில் சிரமம் மற்றும் செரிமான பிரச்னைகளை ஏற்படுத்தும். ஜெட் லேக் தற்காலிகமானது. இதில் இருந்து மீண்டு வர 3 முதல் 7 நாள்கள் வரை ஆகும்.

செஸ் விளையாட்டின்போது நார்வே நாட்டைச் சேர்ந்த சாம்பியன் மாக்னஸ் கார்ல்சன் தூங்கியதற்கும் இந்த ஜெட் லேக் (Jet lag) பிரச்னை காரணமாக இருக்கலாம்.

இரவு உறக்கத்துக்கு முன் 

இரவு உணவுக்கும் உறக்கத்துக்கும் எவ்வளவு நேரம் இடைவெளி இருக்க வேண்டும்?

இரவு உணவை 8 மணிக்கு முன்னதாக முடித்தால் நல்லது அல்லது உறங்குவதற்கு 2 மணி நேரத்துக்கு முன்னதாக சாப்பிட வேண்டும். அதிக பட்சம் 11 மணிக்குள் உறங்கச் செல்வது சிறந்தது. காலையில் 5 மணிக்கு எழுந்துவிடலாம்.

மருத்துவர் மகாலிங்கம் ஐயப்பன்

உறங்கும்வரை டிவி, மொமைல், லேப்டாப் பார்க்கலாமா ?

படிக்கும் குழந்தைகள், நோயாளிகள் இவர்களை இரவில் அதிக நேரம் டிவி பார்ப்பதைத் தவிர்க்கச் சொல்வார்கள். மற்றவர்களுக்கு இதனால் பெரிதும் பாதிப்பு இல்லை. நான் இரவு 12 மணிக்கு உறங்கி, காலை 5 மணிக்கு எழுந்திருப்பதை சிறு வயதில் இருந்தே வழக்கமாக வைத்துள்ளேன். இரவு படிப்பது... ஏதாவது டிவி பார்ப்பது எனக்கு வழக்கம்தான். இதனால் எனக்கு பாதிப்பு ஏற்பட்டதில்லை. பகலில் நான் தூங்கியதும் இல்லை.

வியர்வை சிந்தும் அளவுக்கு உடல் உழைப்பு அதிகம் உள்ளவர்கள் பகலில் ஓய்வுக்காக சிறிது நேரம் தூங்கலாம். அவர்களுக்கு ஓய்வு தேவை. உடல் பலவீனம், வயிற்றுவலி, அஜீரண நோயுள்ளவர், காயம் ஏற்பட்டு வலி உள்ளவர்கள், நோயால் பாதிக்கப்பட்டவர்கள் போன்றோருக்கு அமைதியைப் பெறவும், உடல் இயக்கம் சுறுசுறுப்படையவும் பகல் தூக்கம் நல்லதே.

இரவு தூங்க முடியாமல் போய்விட்டது என்றால் மறுநாள் பகல் மிதமான உணவைச் சாப்பிட்டு, இரவு விழித்திருந்த நேரத்தில் பாதி நேரம் மட்டும் தூங்குவது நல்லது என்றார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.