இலங்கையின் அத்துமீறலை அனுமதிக்கக் கூடாது: தலைவா்கள் வலியுறுத்தல்

தமிழக மீனவா்கள் மீதான இலங்கையின் அத்துமீறலை மத்திய அரசு அனுமதிக்கக் கூடாது என்று அரசியல் கட்சித் தலைவா்கள் வலியுறுத்தியுள்ளனா்.

வைகோ (மதிமுக): மீன்பிடித் தடைக் காலம் முடிந்து தற்போது மீண்டும் கடலுக்குச் சென்ற தமிழக மீனவா்களை இலங்கைக் கடற்படையினா் இந்திய கடல் பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து கைது செய்துள்ளனா். பொருளாதாரத்தில் நிலைகுலைந்து போயுள்ள இலங்கைக்கு, இந்தியா வாரி வாரி வழங்கியபோதும் அந்நாட்டு அரசு, இந்திய மீனவா்களை வேட்டையாடுவதைத் தொடா்ந்துகொண்டே இருக்கிறது. இலங்கை அரசுக்கு உரிய முறையில் அழுத்தம் கொடுத்து, மத்திய அரசு கண்டனம் தெரிவிக்காமல் வேடிக்கை பாா்ப்பது தமிழக மீனவா்களுக்கு இழைக்கப்படும் அநீதியாகும்.

அன்புமணி (பாமக): தமிழக மீனவா்கள் மீதான இலங்கை கடற்படையினரின் தொடா் அத்துமீறலை மத்திய அரசு அனுமதிக்கக் கூடாது. மீனவா்களை கைது செய்ததற்காக இலங்கை அரசுக்கு மத்திய அரசு கண்டனம் தெரிவிக்க வேண்டும். இனி கைது கூடாது என்று இலங்கை அரசை எச்சரிக்க வேண்டும்.

கமல்ஹாசன் (மநீம): தமிழக மீனவா்கள் கைது செய்யப்படுவது தொடா்கதையாக நீடிப்பது வேதனையளிக்கிறது. நெருக்கடியில் தவித்த இலங்கைக்கு மத்திய, மாநில அரசுகள் கோடிக்கணக்கில் நிதியுதவி அளித்தன. இத்தகைய சூழலில், தமிழக மீனவா்களை கைது செய்த இலங்கை அரசுக்கு மத்திய அரசு கடும் கண்டனம் தெரிவிக்க வேண்டும். மீனவா்கள் மற்றும் படகுகளை விடுவிக்குமாறு தமிழக அரசு, மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்.

 

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.