இலங்கை நாடாளுமன்றத்தில் இருந்து அதிபர் கோத்தபய விரட்டியடிப்பு: எதிர்க்கட்சிகளின் கோஷத்தால் ஓட்டம்

கொழும்பு: இலங்கையில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில்,  நாடாளுமன்றத்தில் இருந்து எதிர்க்கட்சிகளால் அதிபர் கோத்தபய விரட்டியக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கை, 4 லட்சம் கோடி கடனில் தவித்து வருகிறது. வரும் 2026ம் ஆண்டுக்குள் 2 லட்சம் கோடியும், இந்தாண்டுக்குள் ரூ.60 ஆயிரம் கோடியையும் திருப்பி செலுத்த வேண்டிய கட்டாயத்தில் அது உள்ளது. ஆனால், அன்னிய செலாவணி கையிருப்பு வரலாறு காணாத வகையில் சரிந்து இருப்பதால், வெளிநாட்டு கடன்களை திருப்பி செலுத்துவதை இலங்கை நிறுத்தி உள்ளது. மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள், பெட்ரோல், டீசல் வாங்கக் கூட இலங்கை அரசிடம் பணம் இல்லை. இதனால், சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி போன்றவற்றிடம் கடன் கேட்டு வருகிறது. உலக வங்கி நிதியுதவி அளிக்க மறுத்து விட்டது. ஆனால், சிறிய அளவில் கடன் கொடுக்க முன் வந்துள்ள சர்வதேச நாணய நிதியம், அதற்கு பல்வேறு நிபந்தனைகளை விதித்துள்ளது. கடந்த மாதம் 20ம் தேதி கொழும்பு சென்ற சர்வதேச நாணய நிதியத்தின் குழுவினர், இலங்கையின் தற்போதைய பொருளாதார நிலை, பொருளாதார மீட்பு நடவடிக்கை போன்றவை குறித்து ஆய்வு செய்தனர். இந்நிலையில், வரும் ஆகஸ்ட் மாதத்திற்குள் கடன் மறுசீரமைப்பு திட்டம் தொடர்பான அறிக்கையை சர்வதேச நாணய நிதியத்திடம் இலங்கை அரசு அளிக்கும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே, நாடாளுமன்றத்தில் நேற்று தெரிவித்தார். இலங்கையின் தற்போதைய நிலைமைக்கு அதிபர் கோத்தபயவும் காரணம் என கூறி, அவர் பதவியில் இருந்து விலகக் கோரி பொதுமக்களும், எதிர்க்கட்சியினரும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சூழலில், நாடாளுமன்றத்துக்கு நேற்று அதிபர் கோத்தபய ராஜபக்சே வந்தார். அப்போது, எதிர்க்கட்சி உறுப்பினர்கள், ‘கோத்தபயவே வீட்டுக்கு போ’ என்ற கையில் பதாகைகளை ஏந்தி கோஷமிட்டனர். இதனால், அவையில் எழுந்து கோத்தபய ஏதோ விளக்கம் அளிக்க முயன்றார். ஆனால், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து ஆவேசமாக கோஷம் எழுப்பியதால், கோத்தபய நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேறினார். எதிர்க்கட்சிகளால் அதிபர் கோத்தபய விரட்டியடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதனால், இலங்கையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.