ஏமன் நாட்டில் ராணுவ ஆயுத சேமிப்பு கிடங்கில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்து... 10 பேர் பலி.. 45 பேர் படுகாயம்!!

ஏமன் : ஏமன் நாட்டில் ராணுவ ஆயுத சேமிப்பு கிடங்கில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர். அப்யன் மாகாணம் லவ்டர் என்ற நகரத்தில் ஏமன் ராணுவத்திற்கு சொந்தமான ஆயுத கிடங்கு உள்ளது. இதில் நேற்று மாலை பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. சேமித்து வைக்கப்பட்டு இருந்த ஆயுதங்கள் வெடித்துச் சிதறி அந்த தாக்கத்தால் பல கிலோ மீட்டர் தூரத்தில் இருந்த கட்டிடங்களும் அதிர்ந்ததாக மக்கள் தெரிவித்துள்ளனர். இந்த வெடி விபத்தில் அரசுப் படையினர் 10 பேர் உயிரிழந்தனர். அருகில் உள்ள பல்வேறு வீடுகளும் வெடி விபத்தால் இடிந்து விழுந்துள்ளன. இதில் படுகாயம் அடைந்த 45 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த வெடி விபத்து தற்செயலாக ஏற்பட்டதா அல்லது திட்டமிட்ட சதியா என ஏமன் ராணுவ அதிகாரிகள் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர். ஏமன் நாட்டில் அரசுப் படையினருக்கும் ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே பல ஆண்டுகளாக அவ்வப்போது கடும் சண்டை நடைபெற்று வருகிறது. ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு ஈரான், ரஷ்யாவும்; ஏமன் ராணுவத்திற்கு சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடுகளும் ஆதரவளிக்கின்றன.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.