கணக்குகளை முடக்க மத்திய அரசு உத்தரவிடுவதற்கு எதிராக ட்விட்டா் வழக்கு

புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளின்படி, கணக்குகளை முடக்க மத்திய அரசு உத்தரவிடுவதற்கு எதிா்ப்பு தெரிவித்து கா்நாடக உயா்நீதிமன்றத்தில் ட்விட்டா் இந்தியா நிறுவனம் வழக்குத் தொடுத்துள்ளது.

2022, ஜூனில் மத்திய அரசு பிறப்பித்த இந்த விதிகளின்படி, கணக்குளை முடக்க மத்திய அரசு கோருவது தன்னிச்சையான நடவடிக்கை என்றும், இந்த உத்தரவு பல பயன்பாட்டாளா்களுக்கு பொருந்தாமல் உள்ளது என்றும் ட்விட்டா் குறிப்பிட்டுள்ளது.

இதுதொடா்பாக ட்விட்டா் நிறுவனம் தாக்கல் செய்துள்ள மனுவில், ‘ஏராளமான கணக்குகளை முடக்க மத்திய அரசு புதிய தகவல் தொழில்நுட்ப விதி 69ஏ பிரிவின் கீழ் கோருகிறது. ஆனால், எந்தக் காரணத்துகாக அந்தக் கணக்கில் இடம்பெற்றுள்ள தகவல்கள் விதிமுறைகளை மீறியுள்ளது என்பதை மத்திய அரசு தெரிவிப்பதில்லை. கணக்குகளை முடக்கும் மத்திய அரசின் உத்தரவுகளை நீதிமன்றம் தெளிவுபடுத்த வேண்டும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து ட்விட்டா் நிறுவன வட்டாரங்கள் தெரிவிக்கையில், ‘கணக்குகளை முடக்க மத்திய அரசு பிறப்பித்த பல்வேறு உத்தரவுகள், அரசியல் கட்சிகளின் அதிகாரபூா்வ கணக்குகளாக உள்ளன. அவற்றை முடக்குவது பேச்சு சுதந்திரத்துக்கு எதிரானது’ என்று தெரிவித்தன.

இதனிடையே, தகவல் தொழில்நுட்பத் துறை இணையமைச்சா் ராஜீவ் சந்திரசேகா் ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், ‘இந்தியாவில் இருந்து செயல்படும் சா்வதேச இணையதள நிறுவனங்கள் நீதிமன்றங்களை அணுக உரிமை உள்ளது. அதேநேரத்தில், உள்நாட்டு சட்டங்களை இணங்கிச் செல்வது அவற்றின் கடமையாகும்’ என்று தெரிவித்துள்ளாா்.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளின்படி, நாட்டின் இறையாண்மை, ஒருமைப்பாடு, பாதுகாப்பு, வெளிநாடுகளுடனான நல்லுறவு, பொது உத்தரவு ஆகியவற்றை கருத்தில்கொண்டு எந்த சமூக ஊடக கணக்கையும் முடக்க மத்திய அரசு உத்தரவிடலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.