மகத்தான ஜோ ரூட்: ஒன்றரை வருடங்களில் 11 சதங்கள்

 

இந்தியாவுக்கு எதிரான 5-வது டெஸ்டில் பிரபல பேட்டர் ஜோ  ரூட் சதமடித்து அசத்தியுள்ளார். 

பிர்மிங்கமில் நடைபெற்று வரும் 5-வது டெஸ்டில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி, பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இந்தியா முதல் இன்னிங்ஸில் 84.5 ஓவர்களில் 416 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இங்கிலாந்து அணி, 61.3 ஓவர்களில் 284 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்திய அணி 2-வது இன்னிங்ஸில் 81.5 ஓவர்களில் 245 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இங்கிலாந்து அணி வெற்றி பெற்று தொடரை சமன் செய்ய 378 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.  4-ம் நாள் முடிவில் இங்கிலாந்து அணி, 57 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 259 ரன்கள் எடுத்தது. ஜோ ரூட் 76, பேர்ஸ்டோ 72 ரன்களுடன் களத்தில் இருந்தார்கள். 

இந்நிலையில் இன்றும் விரைவாக ரன்கள் எடுத்து சதத்தைப் பூர்த்தி செய்தார் ஜோ ரூட். 136 பந்துகளில் 14 பவுண்டரிகளுடன் சதமடித்தார். இது அவருடைய 28-வது டெஸ்ட் சதம். 2022-ல் தனது 5-வது சதத்தை அடித்துள்ளார் ரூட். 2021 ஜனவரி முதல் விளையாடிய 24 டெஸ்டுகளில் 11 சதங்களை எடுத்துள்ளார்.

ஃபேப் 4 (Fab 4) என்று சொல்லக்கூடிய கோலி, ரூட், வில்லியம்சன், ஸ்மித் ஆகியோரில் அதிக டெஸ்ட் சதங்களை எடுத்த வீரர் என்கிற பெருமையையும் ரூட் பெற்றுள்ளார். 2021 முதல் ஸ்மித், வில்லியம்சன் ஆகியோர் தலா 1 சதம் மட்டுமே எடுத்துள்ளார்கள். கோலியால் ஒரு சதத்தையும் எடுக்க முடியவில்லை. 

சிறந்த 4 பேட்டர்களில் (ஃபேப் 4) அதிக சதங்கள்

ரூட் - 28 (121 டெஸ்டுகள்)
ஸ்மித் - 27 (86 டெஸ்டுகள்)
கோலி - 27 (102 டெஸ்டுகள்)
வில்லியம்சன் - 24 (88 டெஸ்டுகள்)

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.