ஒற்றைத் தலைமைக்கான தனித்தீர்மானம் நிறைவேற்றத் தடை எதிரொலி : அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்பார் என் அறிவிப்பு!!

சென்னை : அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்பார் என அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் ஆர். வைத்திலிங்கம் அறிவித்துள்ளார். அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு தடை விதிக்கக் கோரி பொதுக்குழு உறுப்பினர் சண்முகம் என்பவர், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். நேற்று தனி நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்பு இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, அதிமுக பொதுக்குழு கூட்டத்தை நடத்த தடை இல்லை என உத்தரவிடப்பட்டது. தீர்மான விவகாரங்களில் நீதிமன்றம் தலையிட முடியாது எனவும் தனி நீதிபதி தீர்ப்பளித்தார்.இதனை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு, நீதிபதிகள் துரைசாமி, சுந்தர் மோகன் தலைமையிலான அமர்வில் நள்ளிரவே விசாரணைக்கு வந்தது. விடிய விடிய நடைபெற்ற விசாரணையில், அனைத்து தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள், பொதுக்குழுவை நடத்த தடையில்லை என உத்தரவிட்டனர். அதே நேரத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர் செல்வம் ஒப்புதல் அளித்த 23 தீர்மானங்களைத் தவிர, ஒற்றைத் தலைமை தொடர்பான தனித் தீர்மானத்தை நிறைவேற்ற நீதிபதிகள் தடை விதித்தனர்.நீதிபதிகளின் தீர்ப்பை தொடர்ந்து இன்று நடைபெறும் அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்பார் என அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் ஆர். வைத்திலிங்கம் அறிவித்துள்ளார். நீதிமன்ற தீர்ப்பை மதித்து செயல்படுவோம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதனிடையே பரபரப்பான சூழ்நிலையில் அதிமுக பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் இன்று நடைபெறுகிறது. காலை 10 மணிக்கு தற்காலிக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் கூட்டம் நடக்கிறது.ஸ்ரீவாரு மண்டபத்தில் நடக்கும் கூட்டத்தில் செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள் மட்டுமே பங்கேற்கின்றனர்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.