180 கி.மீ., ஓர் ஆண்டு பயணம்; வனத்துறையை வியக்க வைத்த யானையின் நெகிழ்ச்சிக் கதை!

கர்நாடக மாநிலம் செட்ஹள்ளி பகுதியில் 2016-ம் ஆண்டில் காட்டு யானை ஒன்று தொடர்ந்து விளை நிலங்களை சேதப்படுத்தி வந்தது. உள்ளூர் விவசாயிகளின் அழுத்தம் காரணமாக அந்த யானையைப் பிடித்து முகாமில் அடைக்க கர்நாடக வனத்துறை முடிவு செய்தது. பெரும் போராட்டத்துக்கு பின் அந்த ஒற்றை யானையைப் பிடித்து துபாரே வளர்ப்பு யானைகள் முகாமில் அடைத்தனர்.

குஷா யானை

முகாமில் அடைத்தும் ஆக்ரோஷம் குறையாமல் இருந்த அந்த யானைக்கு குஷா எனப் பெயரிட்டு வளர்ப்பு யானையாக மாற்ற முயற்சி செய்தனர். யாருக்கும் கட்டுப்படாத அந்த யானை முகாமிலிருந்து தப்பி மீண்டும் காட்டுக்கே சென்றது. இரண்டாவது முறையாக பெரும் போராட்டத்துக்கு பின் அந்த யானையைப் பிடித்து மீண்டும் முகாமில் அடைத்தனர். ஆனால் அந்த யானையை முகாமில் வைத்து பராமரிப்பது முடியாத காரியமாகவே இருந்தது. விலங்கு நல செயல்பாட்டாளர் மேனகா காந்தியின் தொடர் முயற்சியில் அந்த யானையை மீண்டும் காட்டிலேயே சுதந்திரமாக விடுவிக்க முடிவு செய்தனர் வனத்துறையினர்.

கடந்த 2021-ம் ஆண்டு குஷா யானையை துபாரே முகாமில் இருந்து லாரியில் ஏற்றி, சுமார் 180 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் பந்திப்பூர் காட்டில் விட்டனர். பந்திப்பூர் காட்டில் உள்ள மற்ற யானைகளுடன் சேர்ந்து பழக ஆரம்பித்தது குஷா யானை. சில மாதங்கள் வனத்துறையினர் கண்காணித்து வந்தனர். இந்த நிலையில், ஓராண்டுக்கு பின் தற்போது துபாரே முகாம் அருகில் குஷா யானையைப் பார்த்த வனத்துறையினர் ஆச்சரியத்தில் ஆழ்ந்துள்ளனர்.

குஷா யானை குறித்து கர்நாடக வனத்துறையினர் தெரிவித்துள்ளதாவது,"முகாமில் பராமரிக்கப்பட்டு வந்த சுமார் 30 வயது மதிக்கத்தக்க குஷா என்ற ஆண் யானைக்கு ரேடியோ காலர் பொருத்தி பந்திப்பூர் காட்டுக்குள் கடந்த ஆண்டு விடுவித்தோம். மீண்டும் துபாரே முகாமை நோக்கி நெடும்பயணத்தை தொடங்கிய குஷா, பந்திப்பூர், கேரளாவின் வயநாடு, கர்நாடகாவின் கபினி, நாஹரோலே வழியாக ஒரு வருடத்தில் மீண்டும் துபாரேவை வந்தடைந்திருக்கிறது.

குஷா யானை

இரண்டு பெண் யானை உட்பட மூன்று யானைகளுடன் குஷாவை தற்போது பார்த்தோம். இணையை தேடி வந்திருக்கலாம் என நம்புகிறோம். யானைகளுக்கு நினைவுத் திறன் அதிகம். ஆனால், பல நூறு கிலோமீட்டர்களை எப்படி கடந்து வந்திருக்கிறது என நினைத்தால் எங்களால் நம்ப முடியவில்லை" என தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.