ஆபீஸ் வர முடியாது.. - ரூ.6 கோடி ஊதியத்தை உதறித்தள்ளிய ஆப்பிள் நிறுவன அதிகாரி

வீட்டிலிருந்தே வேலைபார்க்கும் முறையை கைவிட்டு அலுவலகத்திற்கு வந்து பணிபுரிய சொன்னதால் வருடத்திற்கு ரூ.6 கோடிக்கு மேல் சம்பளம் பெற்றுவந்த ஆப்பிள் நிறுவன உயரதிகாரி ஒருவர் தனது வேலையை ராஜினாமா செய்துள்ளார்.   

2020ஆம் ஆண்டில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு நாடுகளிலும் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டது. இக்காலத்தில் பெரும்பாலான நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை வீட்டிலிருந்தபடியே வேலை பார்க்க அனுமதித்தன. இதனைத்தொடர்ந்து இந்த ஆண்டில் கொரோனா பாதிப்புகள் குறைந்து, இயல்புநிலை திரும்பத் தொடங்கியுள்ள நிலையில் பெரும்பாலான நிறுவனங்களும் தங்களது ஊழியர்களை அலுவலகத்துக்கு திரும்ப வரவழைத்துள்ளன.

சிலர் வீட்டில் உள்ள சிரமங்களைக் கருத்தில் கொண்டு அலுவலகத்துக்கு ஆர்வமுடன் திரும்பினர். இன்னும் சிலரோ அதற்கு மாறாக வீட்டிலிருந்தே தொடர்ந்து வேலை பார்க்க விரும்பினர். தொடர்ந்து பல மாதங்கள் வீட்டிலேயே இருந்துவிட்டு மீண்டும் அலுவலகத்துக்கு வருவதை சிரமமாக கருதுவதால் வேலையே வேண்டாம் என்று பலர் முடிவெடுத்துவிட்டனர்.

உலகின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக இருக்கும் ஆப்பிள் நிறுவனத்திற்கும் இதே நிலைதான். கொரோனா பெருந்தொற்றின்போது அலுவலகத்தில் வேலை பார்த்தவர்கள் வீட்டிலிருந்துதான் வேலை பார்த்தனர். ஆனால் இப்போது அவர்கள் அலுவலகத்துக்கு வரவேண்டும் என்று ஆப்பிள் நிறுவனம் உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து ஆப்பிள் நிறுவனம் தற்போது வெளியிட்டிருக்கும் பணி விதிமுறைகளின்படி, மே 23 முதல் வாரத்தில் குறைந்தது 3 நாள்கள் அலுவலகத்தில் இருந்தபடியே பணியாற்ற வேண்டும் என ஊழியர்களுக்கு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

image

ஆப்பிள் நிறுவனத்தின் இந்த புதிய அறிவிப்பால் சில ஊழியர்கள் மகிழ்ச்சியடையவில்லை எனத் தெரிகிறது. இது குறித்து ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான டிம் குக்-கிற்கு ஊழியர்கள் கடிதம் எழுதியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் ஆப்பிள் நிறுவனத்தில் மெஷின் லேர்னிங் இயக்குனராக இருக்கும் இயன் குட்ஃபெலோ என்பவர் தனது பணியையே ராஜினாமா செய்துள்ளார். இயன் குட்ஃபெலோ தனது விருப்பத்தினை நிறுவன குழுவிடம் தெரிவித்துள்ளார். மேலும் வீட்டில் இருந்து பணிபுரிவது ஒரு நெகிழ்வு தன்மையை அளிக்கும் என்றும் நிச்சயம் எங்களது அணிக்கு சிறந்த கொள்கையாக இருந்திருக்கும் என நான் உறுதியாக நம்புகிறேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆப்பிள் நிறுவனத்தில் இயன் குட்ஃபெலோ ஆண்டுக்கு ரூபாய் மதிப்பில் 6  கோடி முதல் 8 கோடி வரை ஊதியம் பெற்று வந்துள்ளதாக கூறப்படுகிறது. இன்னும் நிறையப் பேர் தங்களது வேலையை விட்டு வெளியேறவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படிக்கலாம்: மாபெரும் கருந்துளையின் முதல் புகைப்படம் வெளியீடு

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.