டாட்டன்ஹாம் ஹாட்ஸ்பர் 3-0 ஆர்செனல்; சாம்பியன்ஸ் லீக் ஸ்பாட் யாருக்கு?
பீரிமியர் லீகில் இருந்து 2022-23 சாம்பியன்ஸ் லீக் சீசனுக்குத் தகுதி பெறப் போகும் அணிகள் எவை என்ற போட்டி விறுவிறுப்படைந்திருக்கிறது. ஆர்செனல் அணிக்கெதிரான போட்டியை டாட்டன்ஹாம் ஹாட்ஸ்பர் அணி 3-0 என வெற்றி பெற்றுள்ள நிலையில், கடைசி 2 இடங்களுக்கு இப்போது 3 அணிகள் போட்டியில் உள்ளன!
வழக்கமாக பிரீமியர் லீகில் முதல் நான்கு இடங்கள் பிடிக்கும் அணிகள் அடுத்த சீசன் சாம்பியன்ஸ் லீக் தொடருக்குத் தகுதி பெறும். பிரீமியர் லீகில் இருந்து முதல் இரண்டு இடங்கள் பிடித்திருக்கும் மான்செஸ்டர் சிட்டி மற்றும் லிவர்பூல் அணிகள் ஏற்கெனவே தகுதி பெற்றுவிட்டன. மீதமிருக்கும் இரண்டு இடங்களுக்குத்தான் இப்போது மிகவும் பெரிய போட்டி ஏற்பட்டிருக்கிறது. நிச்சயம் சாம்பியன்ஸ் லீக் தொடருக்குத் தகுதி பெற்றுவிடும் என்று நினைக்கப்பட்ட செல்சீ, தொடர்ந்து புள்ளிகளை இழந்து தடுமாறிக்கொண்டிருக்கிறது. அதேசமயம் ஆர்செனல், டாட்டன்ஹாம் ஹாட்ஸ்பர் அணிகள் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு அந்த அணியுடனான இடைவெளியைக் குறைத்திருக்கின்றன.
டாட்டன்ஹாம் ஹாட்ஸ்பர் ஸ்டேடியத்தில் ஆர்செனல் அணியை இன்று அதிகாலை சந்தித்தது ஸ்பர்ஸ். இந்தப் போட்டியில் தோல்வியடைந்தால் ஸ்பர்ஸ் அணியின் சாம்பியன்ஸ் லீக் கனவு முடிவுக்கு வந்துவிடும். அதனால், பயங்கர உத்வேகத்தோடு ஆடியது ஆன்டோனியோ கான்டேவின் அணி. சிறப்பான தொடக்கத்தின் பலனாக, 21-வது நிமிடத்தில் அந்த அணிக்கு பெனால்டி கிடைத்தது. போஸ்ட்டுக்கு அருகே சன் ஹியூங் மின்-ஐ கீழே தள்ளினார் செட்ரிக் சோர்ஸ். அதனால் கிடைத்த பெனால்டியை ஹேரி கேன் கோலாக்க, 1-0 என முன்னிலை பெற்றது டாட்டன்ஹாம் ஹாட்ஸ்பர்.
33-வது நிமிடத்தில் ஆர்செனல் அணிக்கு அடுத்த அடி விழுந்தது. அதுவும் மிகப்பெரிய அடி. இரண்டாவது யெல்லோ கார்ட் பெற்று போட்டியிலிருந்து வெளியேற்றப்பட்டார் டிஃபண்டர் ராப் ஹோல்டிங். 27-வது நிமிடத்தில் சன்-ஐ ஃபவுல் செய்ததற்காக முதலில் யெல்லோ கார்ட் பெற்றார் ஹோல்டிங். அடுத்த ஆறு நிமிடங்களில் இன்னொரு முறை அவரையே ஃபவுல் செய்து இரண்டாவது யெல்லோ கார்டும் பெற்று வெளியேற்றினார். அதனால், அடுத்த ஒரு மணி நேரமும் 10 வீரர்களோடு விளையாடவேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டது ஆர்செனல். ஏற்கெனவே பல டிஃபண்டர்கள் காயத்தால் அவதிப்பட்டிருப்பதால், ஆர்செனல் அணியால் இன்னொரு டிஃபண்டரைக் களமிறக்க முடியவில்லை.
37-வது நிமிடத்தில் இரண்டாவது கோலையும் அடித்தது டாட்டன்ஹாம் ஹாட்ஸ்பர். கிடைத்த கார்னர் வாய்ப்பை பெனால்டி ஏரியாவுக்கு அனுப்பினார் சன். அதை ஹெட்டர் செய்து இரண்டாவது போஸ்ட்டுக்கு அருகே அனுப்பினார் ராட்ரிகோ பென்டன்கர். அதை தன் டைவிங் ஹெட்டர் மூலம் கோலாக்கினார் ஹேரி கேன். அதனால், இரண்டு கோல்கள் முன்னிலை பெற்றது டாட்டன்ஹாம் ஹாட்ஸ்பர். 43-வது நிமிடத்தில் எட்டீ என்கெடியா அடித்த ஷாட்டை லோரிஸ் மிகச் சிறப்பாகத் தடுத்தார். அதனால், முதல் பாதி 2-0 என முடிவுக்கு வந்தது.
இரண்டாவது பாதி தொடங்கிய இரண்டே நிமிடங்களில் இன்னொரு கோலையும் அடித்தது டாட்டன்ஹாம் ஹாட்ஸ்பர். பந்தோடு பாக்சுக்குள் நுழைந்த ஹேரி கேனைத் தடுத்து பந்தை டேக்கிள் செய்தார் கேப்ரியல். ஆனால், அந்தப் பந்து பாக்சின் ஓரத்தில் நின்றிருந்த சன் கால்களுக்கே செல்ல, அதை அற்புதமாக கோலாக்கினார் அவர். 51-வது நிமிடத்தில் புகாயோ சகாவின் ஷாட்டை பென் டேவிஸ் மிகச் சிறப்பாகத் தடுத்துவிட, அந்த வாய்ப்பும் வீணானது.
59-வது நிமிடத்தில் டாட்டன்ஹாம் ஹாட்ஸ்பர் அணி நான்காவது கோலை அடித்திருக்கும். கேன் பெனால்டி ஏரியாவுக்குள் ஒரு பந்தை அனுப்ப, அதை கோல் நோக்கி ஹெட்டர் செய்தார் எமர்சன் ராயல். அதை மிகச் சிறப்பாக ரியாக்ட் செய்து தடுத்தார் ஆர்செனல் கோல்கீப்பர் ஆரோன் ராம்ஸ்டேல். அடுத்த நிமிடத்தில், ஹேரி கேன் அடித்த ஷாட்டையும் தடுத்தார் ராம்ஸ்டேல். அடுத்த நிமிடத்தில் இன்னொரு வாய்ப்பையும் உருவாக்கியது டாட்டன்ஹாம் ஹாட்ஸ்பர். செசன்யான் கொடுத்த பாஸை சைட் நெட்டில் அடித்து நான்காவது கோல் வாய்ப்பை வீணடித்தார் சன்.

80-வது நிமிடத்தில் டவாரஸ் கொடுத்த பாஸை கோல் நோக்கி அடித்தார் மார்டின் ஓடகார்ட். ஆனால், அதை ஹூகோ லோரிஸ் தடுத்துவிட்டார். அதன்பிறகு இரண்டு அணிகளாலும் வாய்ப்புகளை உருவாக்கவோ, கோலடிக்கவோ முடியவில்லை. அதனால், 3-0 என வெற்றி பெற்றது டாட்டன்ஹாம் ஹாட்ஸ்பர்.
இந்த வெற்றியின் மூலம் 65 புள்ளிகள் பெற்றிருக்கிறது டாட்டன்ஹாம் ஹாட்ஸ்பர். ஆர்செனல் அணியோ 66 புள்ளிகளோடு ஐந்தாவது இடத்தில் இருக்கிறது. நான்காவது இடத்தில் இருக்கும் செல்சீ 70 புள்ளிகள் பெற்றிருக்கிறது. கோல் வித்யாசத்தைப் பொறுத்தவரை டாட்டன்ஹாம் ஹாட்ஸ்பர் அணியைவிட செல்சீ 19 கோல்கள் அதிகமாகப் பெற்றிருக்கிறது. டாட்டன்ஹாம் ஹாட்ஸ்பர் அணியால் அதிகபட்சம் 61 புள்ளிகள் தான் எடுக்க முடியும் என்பதால், மீதமிருக்கும் 2 போட்டிகளில் செல்சீ 1 டிரா செய்தால் மட்டும் போதும். ஆக, அந்த அணியின் சாம்பியன்ஸ் லீக் வாய்ப்பு கொஞ்சம் அருகில் தான் இருக்கிறது.

தற்போது இருக்கும் சூழ்நிலையில் ஆர்செனல், டாட்டன்ஹாம் ஹாட்ஸ்பர் அணிகளில் ஏதேனும் ஒரு அணி தான் அடுத்த சீசன் சாம்பியன்ஸ் லீக் தொடருக்கு முன்னேற முடியும். ஆர்செனல் அணி மீதமிருக்கும் இரண்டு போட்டிகளில் நியூகாசில் யுனைடட் மற்றும் எவர்டன் அணிகளைச் சந்திக்கிறது. டாட்டன்ஹாம் ஹாட்ஸ்பர் அணி பர்ன்லி மற்றும் நார்விச் சிட்டி அணிகளோடு மோதவிருக்கிறது. இரண்டு அணிகளுமே அந்த இரு போட்டிகளையும் வெற்று பெறவேண்டும் என்ற நோக்கத்தில் விளையாடும் என்பதால், கடைசி வாரம் வரை பரபரப்பான போட்டி இருக்கப்போகிறது. சமிபமாக செல்சீ அணியும் தடுமாற்றத்தோடு விளையாடிவருவதால், அவர்கள் இரண்டு தோல்விகளைச் சந்தித்தால், மற்ற இரு அணிகளுமே கூட முன்னேறிவிடும். ஆக, இந்த பிரீமியர் லீக் சீசனில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.