`தடுப்பூசிகள் உயிரைக் காப்பாற்றாது! ஆனால்..! - WHO தடுப்பூசித்துறை இயக்குநர் சொல்வது என்ன?

கோவிட்- 19 தடுப்பூசிகள், தொற்றிலிருந்து மீண்டு வருவதற்கு நமக்குப் பெரிதும் உதவி உள்ளன‌‌. இந்நிலையில், இனி வரப்போகும் காலங்களில் பல்வேறு நோய்களுக்கு எதிராக உருவாகும் தடுப்பூசிகள் குறித்து உலக சுகாதார ‌நிறுவனத்தின் தடுப்பூசித்துறை இயக்குநர் மருத்துவர் கேத்ரின் ஓ ப்ரைன் பேசியிருக்கிறார்.

Vaccine

``கடந்த இரண்டு வருடங்களாகக் கோவிட்-19 தடுப்பூசித் தயாரிப்பில் பெரிய முன்னேற்றங்களைக் கண்டுள்ளோம். கோவிட்-19 தவிர, இன்னும் நிறைய நோய்களுக்கு எதிராகப் பல்வேறு தடுப்பூசிகள் தயாரிப்பு நிலைகளில் உள்ளன. அவற்றை இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம். முதல் வகை ஏற்கெனவே தடுப்பூசி இல்லாத நோய்க்கிருமிகளுக்கான தடுப்பூசிகள். அந்த வகையில் முதன்மையானது Respiratory syncytial virus-க்கு (RSV) எதிரான தடுப்பூசி ஆகும். இது இளம் குழந்தைகளின் நுரையீரலை பாதிக்கும் வைரஸ் ஆகும்.

இந்த வைரஸ் தொற்றை பொதுவாக வருடம்தோறும் கிட்டத்தட்ட அனைத்து நாடுகளிலும் பார்க்க முடியும். அந்த வகையில் வரும் மற்றொரு முக்கிய தடுப்பூசி Group B strep என்ற பாக்டீரியாவுக்கு எதிரான தடுப்பூசியாகும். இது இளம் குழந்தைகளிடம் நோய்த் தொற்றை ஏற்படுத்தி மரணம்வரை ஏற்பட வாய்ப்புள்ளது. இன்னும் ஹெச்.ஐ.வி போன்ற வைரஸ்களுக்கு எதிரான தடுப்பூசிகளைத் தயாரிப்பதற்கான ஆராய்ச்சிகளும் நடந்து கொண்டிருக்கின்றன.

Lungs

இரண்டாவது வகை, ஏற்கெனவே உள்ள தடுப்பூசிகளை இன்னும்‌ சில முன்னேற்றங்களுடன் உருவாக்குவது. இத்தகைய தடுப்பூசிகளை ஏற்கெனவே கண்டுபிடித்து வைத்துள்ளோம். ஆனால், இன்னும் பல முன்னேற்றங்களுடன் அவற்றை மேம்படுத்தத் திட்டமிட்டுள்ளோம். அந்த வகையில் காசநோய், இன்ஃப்ளூயன்ஸா (Influenza) ஆகிய தடுப்பூசிகளை மேம்படுத்த விருக்கிறோம். இரண்டாம் தலைமுறை கோவிட்-19 தடுப்பூசிகளையும் தயாரிக்கும் பணிகளை மேற்கொண்டுள்ளோம்" எனத் தெரிவித்துள்ளார்.

கோவிட்-19 தொற்றுக்கு உருவாக்கப்பட்டதைப் போல மற்ற நோய்களுக்கும் தடுப்பூசிகள் அதே வேகத்தில் உருவாகுமா என்ற கேள்விக்கு, ``கோவிட்-19 தொற்றுப் பரவிய சமயத்தில் உருவாக்கப்பட்ட தடுப்பூசிகள் தனிச்சிறப்பு பெற்றவை. அதற்குப் பல காரணங்கள் உண்டு. முதலாவதாக கோவிட்-19 தடுப்பூசி தயாரிப்புப் பணிகளில் உலகம் முழுவதிலும் இருந்து ஒத்துழைப்பு இருந்தது. பல விஞ்ஞானிகள் தடுப்பூசித் தயாரிப்பு நிறுவனங்களிலும், ஆராய்ச்சி நிலையங்களிலும் கோவிட் -19 தொற்றுக்கான தீர்வைத் தேடி மும்முரமாக உழைத்தார்கள்.

உலக சுகாதார ‌நிறுவனத்தின் தடுப்பூசித்துறை இயக்குநர் மருத்துவர் கேத்ரின் ஓ ப்ரைன்

கோவிட் தடுப்பூசித் தயாரிப்புப் பணியில் பெருந்தொகை உலகம் முழுவதிலும் இருந்து செலவிடப்பட்டது. சோதனை ரீதியாக இதைப் பலரிடம் பயன்படுத்தவும் வாய்ப்பு அமைந்தது. இவை அனைத்தும் வேறு நோய்களுக்கு எதிராக நாம் தடுப்பூசிகளைத் தயாரிக்கும்போது கிடைக்கும் எனச் சொல்ல முடியாது. அதனால் அதே வேகத்தில் வேறு நோய்களுக்கான தடுப்பூசிகளைத் தயாரிக்க முடியும் என்பதை நாம் எதிர்பார்க்க முடியாது.

ஆனால், கோவிட்டுக்கு எதிராகத் தடுப்பூசிகளைத் தயாரித்தபோது பல புதிய பாடங்களைக் கற்றுக் கொண்டுள்ளோம். பல குறுக்கு வழிகளையும் நேரத்தையும், செலவையும் எப்படிக் குறைக்கலாம் என்பதையும் அறிந்துள்ளோம். இவை இனிவரும் காலங்களில் வெவ்வேறு தடுப்பூசித் தயாரிப்பில் உதவும்" என்கிறார்.

Vaccine Manufacturing

தடுப்பூசி செலுத்திக்கொள்வதன் அவசியம் பற்றிப் பேசியபோது, ``தடுப்பூசிகள் உயிரைக் காப்பாற்றாது. தடுப்பூசி செலுத்திக் கொள்வதே உயிரைக் காக்கும். தடுப்பூசிகள் முறையாகப் பயன்படுத்தப்படாமல் சேமிப்பிலேயே இருப்பதால் எந்தப் பயனும் கிடையாது. தடுப்பூசிகள் போதுமான அளவில் இருந்தாலும் சரியாகத் தடுப்பூசி செலுத்த முடியாததற்கு சில காரணங்கள் உள்ளன. சுருக்கமாகச் சொன்னால் நேரமின்மைகூட இதற்கு ஒரு காரணமாக அமைகிறது. இருப்பிடத்துக்கு அருகில் தடுப்பூசி கிடைக்காமல் நெடுந்தொலைவு சென்று செலுத்திக்கொள்ள வேண்டியிருப்பதும் தடுப்பூசி செலுத்திக்கொள்ளாததற்கு ஒரு காரணம் ஆகும்.

இதுதவிர, தடுப்பூசி தொடர்பாக மக்களிடம் ஒரு தயக்கமும் உள்ளது. இப்படித் தடுப்பூசிகளை எதிர்க்கும் நபர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள் எனப் பொய்யான நம்பிக்கை உண்டு. ஆனால், உண்மையில் தடுப்பூசிகளை எதிர்ப்போர் மிகவும் சிலரே. அவர்கள் சில தவறான நம்பிக்கைகளின் அடிப்படையில் எதிர்க்கிறார்கள். இன்னும் சிலர் தடுப்பூசிகள் எப்படி வேலை செய்கின்றன, அவை பாதுகாப்பானவைதானா என்ற பயம் மற்றும் தயக்கத்துடன் அதைத் தவிர்ப்பார்கள்.

Covid -19 Vaccine

உண்மையில் தடுப்பூசிகள் உடலில் இருக்கும் எதிர்ப்பாற்றல் மண்டலத்தைத் தூண்டி, இனிவரும் காலங்களில் ஏற்படும் நோய்க்கு எதிராக எதிர்ப்பாற்றல் மண்டலத்தை வலுப்படுத்தும். எந்த நோய்க் கிருமிக்கு எதிராகச் செலுத்தப்படுகிறதோ அந்தக் கிருமியால் வருங்காலத்தில் தாக்கப்பட்டாலும் அதற்கு எதிராக நம் உடலை தயார் நிலையில் வைத்திருக்கும்" என்று தெரிவித்தார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.