தூதரக அதிகாரிகளுக்கு அமெரிக்கா உத்தரவு: உக்ரைனில் இருந்து வெளியேறுங்கள்

வாஷிங்டன்: உக்ரைனில் இருந்து உடனே வெளியேறும்படி தனது துாதரக அதிகாரிகளுக்கு  அமெரிக்கா அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. கிழக்கு ஐரோப்பாவில் உள்ள உக்ரைன் ‘நேட்டோ’நாடுகளின் பாதுகாப்பு கூட்டணியில் இணைவதற்கு   ரஷ்யா கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இருதரப்புக்கும் இடையே பேச்சுவார்த்தைகள் நடந்து வருகிறது. உக்ரைன் நாட்டின் மீது படையெடுக்கும் திட்டம் எதுவும் இல்லை என்று ரஷ்யா மறுத்து வருகிறது. இருந்தபோதிலும் நேட்டோவில் உக்ரைன் இணைவதை தடுக்கும் வகையில் அதன் எல்லையில் 1 லட்சம் படைவீரர்களை ரஷ்யா குவித்துள்ளதாக அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் குற்றம் சாட்டி உள்ளன. ரஷ்யா  படைகளை குவித்து வருவதால், அங்கு பதட்டம் அதிகரித்துள்ளது.உக்ரைன்  முன்னாள் எம்பி யெவ்ஹென் முர்ரயேவ் என்பவர் தலைமையில் தங்களுக்கு ஆதரவான ஒரு பொம்மை அரசை உருவாக்குவதற்கான சதி வேலைகளில் ரஷ்யா ஈடுபட்டுள்ளதாக தங்களுக்கு உறுதியான தகவல் கிடைத்துள்ளது என பிரிட்டன் அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்கிடையே, அமெரிக்க துாதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், உக்ரைன் மீது ரஷ்யா எந்த நேரத்திலும் தாக்குதல் நடத்தலாம். அப்போது அங்கு உள்ள அமெரிக்க பிரஜைகளை மீட்டு வருவதற்கு போதுமான அவகாசம் கிடைக்காது. எனவே, தலைநகர் கீவ் நகரில் உள்ள அமெரிக்க துாதரக அதிகாரிகள் மற்றும் அங்கு வசிக்கும் அமெரிக்க நாட்டினர்  உடனே அங்கிருந்து வெளியேற வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.போர் கப்பல், விமானங்கள்: உக்ரைனில் ஏற்பட்டுள்ள பதட்டத்தையடுத்து,கிழக்கு ஐரோப்பிய பகுதிக்கு போர் கப்பல்கள், போர் விமானங்களை நேட்டோ நாடுகள் அனுப்பி உள்ளன.டென்மார்க் நாடு எப்.16 போர் விமானங்களை அனுப்பி உள்ளது. ஸ்பெயின் நாட்டின் போர் கப்பல் கிழக்கு ஐரோப்பாவுக்கு அனுப்பப்பட்டுள்ளது.இதை போல் பல்வேறு நாடுகள் ஆயுதங்கள் மற்றும் படை வீரர்களை அனுப்புவதற்கு முன்வந்துள்ளன. தனது ராணுவத்தில் உள்ள  5 ஆயிரம் வீரர்களை கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் நிறுத்த அமெரிக்காவும் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.