அறைகளில் கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் கருவி... சர்ச்சையும் விளக்கமும்!

`இந்தக் கருவியை உற்பத்தி செய்யலாம் என அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகத்துறை (FDA) அனுமதி அளித்ததாக ஆரம்பத்தில் செய்திகள் வெளிவந்தன. இந்நிலையில் இந்த நிறுவனம் ஏற்கெனவே புற்றுநோய் சிகிச்சைகான கருவியைக் கண்டறிந்து அதற்கு FDA அனுமதியளித்துள்ளதாக தெரிவித்தததாகவும், அதை FDA நிர்வாகம் மறுத்துள்ளது எனவும், எனவே கொரோனா பரவலைத் தடுக்கும் கருவி விஷயத்திலும் உண்மைத்தன்மையை அறிய வேண்டும் என சமூக வலைதளங்களில் செய்திகள் உலாவருகின்றன.

பார்ப்பதற்கு டிரம் போன்ற தோற்றத்திலிருக்கும் இந்தக் கருவி, மூடப்பட்ட அறைகளில் கொரோனா வைரஸ் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்குப் பரவுவதைத் தடுக்கும் என்று இவர்கள் தெரிவிக்கின்றனர்.

ஸ்கெலீன் சைபர்நெட்டிக்ஸ் லிமிடெட் என்ற நிறுவனத்தின் தயாரிப்பான இந்தக் கருவிக்கு Scalene Hypercharge Corona Canon என்று பெயரிடப்பட்டுள்ளது. நிறுவனத்தின் தலைவரும், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தின் இயக்குநர் மற்றும் தலைமை விஞ்ஞான அதிகாரியுமான ராஜா விஜய் குமாரின் எண்ணத்தில் உருவாகியுள்ளது இந்தக் கருவி.

கருவிகள் தொடர்பான சரச்சை, கொரோனா பரவலைத் தடுக்கும் கருவி உருவாக்கம் மற்றும் செயல்பாடு குறித்து, ராஜா விஜய் குமாரிடம் பேசினோம்.

corona spread

``எங்கள் நிறுவனமானது 27 ஆண்டுகளாக மருத்துவப் பொறியியல் துறையில் ஆராய்ச்சிகளைச் செய்து வருகிறது. பருவகால ஃப்ளூ, பறவைக் காய்ச்சல் போன்ற நோய்கள் பரவும் நேரத்தில், அந்தத் தொற்றுகள் எங்கள் ஊழியர்களுக்கு ஒருவரிடமிருந்து மற்றவர்களுக்குப் பரவாமல் தடுப்பதற்காக ஒரு கருவியைத் தயாரிக்க நினைத்தோம். அதற்கான பணிகளை 2018-ம் ஆண்டு தொடங்கினோம். 2019-ம் ஆண்டு மார்ச் மாதம் எங்கள் நிறுவனத்தில் அந்தக் கருவியைப் பொருத்தினோம். அது சிறப்பான பயனை அளித்தது.

இந்த ஆண்டு தொடக்கத்தில் கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியதும் அதன் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் இந்தக் கருவியை மேம்படுத்தினோம். தயாரித்த கருவியை அமெரிக்காவுக்கு பரிசோதனை ஆய்வுக்கு அனுப்பினோம். அதன் பாதுகாப்பு, செயல்திறன் போன்றவற்றை அறிய 25-க்கும் மேற்பட்ட சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. கடந்த வாரம் பரிசோதனைகள் அனைத்தும் நிறைவடைந்தன.

இந்நிலையில், கோவிட்-19 அவசர நிலையின் காரணமாக அமெரிக்காவின் FDA நிர்வாகம் `விருப்ப அமலாக்கம் (Enforcement Discretion) என்ற நெறிமுறையின் கீழ் இந்தக் கருவியை உற்பத்தி செய்யலாம் என்று அறிக்கை (Notification) கொடுத்துள்ளது.

கொரோனா பெருந்தொற்று காலம் வரை இந்த அறிவிக்கையின் அடிப்படையில் கருவியை உற்பத்தி செய்யலாம். பெருந்தொற்று காலம் நிறைவடைந்தததும், நிரந்தரமாக இந்தக் கருவியை உற்பத்தி செய்வதற்கு மீண்டும் FDA அனுமதிக்கு விண்ணப்பித்து, இயல்பான முறையில் அனுமதி பெற வேண்டும்.

எப்படிச் செயல்படும்?

இந்தக் கருவியானது இயற்பியல் கோட்பாடுகளின்படி தயாரிக்கப்பட்டது. கருவியைப் பொருத்தி இயக்கியதும் அதிலிருந்து எலெக்ட்ரோ மேக்னடிக் கதிர்வீச்சு அலைகளை உள்ளடக்கிய நுண்ணிய துகள்கான போட்டான்ஸ் (Photons) வெளிப்படும். போட்டோன்கள் சுவர், மேசை, நாற்காலி போன்ற பகுதிகளில் விழும்போது அதிலிருந்து எலெக்ட்ரான்கள் வெளியாகும்.

Scientist Rajah Vijay Kumar with the device

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவரின் தும்மல், இருமலிலிருந்து வெளியாகும் நீர்த்திவலைகளில் இருக்கும் வைரஸின் மீது எலெக்ட்ரான்கள் சென்று ஒட்டிக்கொண்டு, அதன் தன்மையை மட்டுப்படுத்திவிடும். அதன் பிறகு கொரோனா வைரஸால் தொற்றை ஏற்படுத்த முடியாது. அதாவது கொரோனா வைரஸ் தொற்று பரவும் பொறிமுறையை இந்தக் கருவி தடுக்கிறது.

செயல்திறன் எப்படியிருக்கும்?

1,000 சதுர அடிக்கு ஒரு கருவி என்ற வகையில் இந்தக் கருவியைப் பொருத்தினால் அதன் அதிகபட்ச செயல்திறனைப் பெற முடியும். ஆய்வுப்படி 99.9 சதவிகிதம் வைரஸ் பரவலைத் தடுக்கிறது என்று பரிசோதனையில் உறுதிசெய்யப்பட்டுள்ளது. ஒரு கருவியை 20 முதல் 25 ஆண்டுகள் பயன்படுத்த முடியும். பொதுமக்களின் பயன்பாட்டுக்கு உற்பத்தி செய்வதற்கு சில நிறுவனங்களுக்கு உரிமம் வழங்கியிருக்கிறோம். அலுவலகம், பள்ளி, ஹோட்டல், மால்கள் போன்ற மூடப்பட்ட பகுதிகளுக்கு இது சிறப்பான பயனைத் தரும்.

Closed surface

Also Read: கொரோனா: `இளைஞர்கள்தாம் வைரஸ் பரவலை அதிகரிக்கின்றனர்!’ - WHO வேதனை

கருவியின் விலை மருத்துவமனையில் ஒருநாள் கோவிட்-19 சிகிச்சை பெறுவதைவிட நிச்சயம் குறைவாகத்தான் இருக்கும். துல்லியமான விலையை உற்பத்தியாளர்கள்தான் நிர்ணயிப்பார்கள்" எனும் ராஜா விஜய்குமார் இன்னொரு விஷயத்தையும் தெரிவித்தார்.

``ஏற்கெனவே கோவிட்-19 மூலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்தக் கருவியால் எந்தப் பயனும் இல்லை. அவர்களிடமிருந்து மற்றவர்களுக்கு நோய் பரவாமல் தடுப்பதற்குதான் இந்தக் கருவி உதவும். கொரோனா வைரஸ் குடும்பத்தைச் சேர்ந்த வைரஸ் வகைகளின் பரவலை இந்தக் கருவி தடுக்கும். உலகளவில் இதுபோன்ற கருவி தயாரிக்கப்பட்டுள்ளது இதுவே முதன்முறை" என்றார்.

அதாவது, இதுவரைக்கும் இந்தக் கருவிக்கு US FDA அனுமதியளிக்கவில்லை. எனவே இந்தக் கருவிக்கு US FDA அனுமதி கிடைத்துவிட்டதாக வரும் செய்திகள் உண்மையல்ல.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.