ஸ்கிரீன் ப்ரின்டிங்கில் மாதம் ரூ.2 லட்சம் வருமானம் - குடிசை தொழிலில் அசத்தும் மதுரை விஜயலட்சுமி!

பிசினஸ் உலகில் கால்பதித்து, வெற்றியை நோக்கிச் சென்றுகொண்டிருக்கும், மற்றும் நட்சத்திரங்களாக மின்னிக்கொண்டிருக்கும் பெண்களை அடையாளம் காட்டும், அங்கீகரிக்கும் பகுதி... இந்த #HerBusiness. தங்களது புதுமையான சிந்தனைகள், அதைச் செயல்படுத்திய விதம், அணுகுமுறை உள்ளிட்ட பல காரணிகள் மூலம் தொழிலில் ஜெயித்து வரும் இவர்களது வெற்றிக் கதைகள், மற்றவர்களையும் ஊக்கப்படுத்தும். புதிதாக உருவெடுக்க வைக்கும்!

சுயதொழில்

ஒரேயொரு தொழிலைக் கையில் எடுத்துச் செய்வதே இன்றைய காலகட்டத்தில் பெரும் சவாலாக இருக்கும்போது, ஸ்க்ரீன் ப்ரின்டிங், டெய்லரிங், பேக் மேக்கிங், ஃபினாயில், சோப்புத்தூள் மற்றும் மூலிகை சாம்பிராணி தயாரிப்பு, டிசைனர் பிளவுஸ் வடிவமைப்பு... என்று ஒரே நேரத்தில் பல்வேறு தொழில்களை எடுத்துச் செய்து அவற்றில் வெற்றிக்கொடி நாட்டி வருகிறார் மதுரையைச் சேர்ந்த விஜயலட்சுமி. அதுமட்டுமல்லாமல், தனது தொழில்கள் வழியாகப் பெண்கள் பலருக்கு வேலைவாய்ப்புகளையும் வழங்கி வருகிறார். இவரது வெற்றிக்கதை, பிசினஸ் ஆர்வம் இருந்தும் அதற்குள் நுழையத் தயங்கும் பெண்களுக்கு நிச்சயம் ஒரு உந்துசக்தியாக இருக்கும்.

“மதுரையைச் சேர்ந்தவள் நான். என்னுடையது பிசினஸ் குடும்பம். அப்பா கன்ஸ்ட்ரக்ஷன் பிசினஸ் செய்துவந்தார். மொசைக் கம்பெனி ஒன்றையும் என் குடும்பம் நடத்திவந்தது. அதனால், பிசினஸ் மீது எனக்கும் இயல்பாகவே ஓர் ஆர்வம் இருந்தது. என்றாலும், எனக்கு மிக இள வயதிலேயே திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்குப் பிறகு வீட்டிற்குள்ளேயே என் வாழ்க்கை சென்றது. வீட்டிற்குள்ளேயே இருந்தாலும், நான் ஏதாவது செய்துகொண்டே இருப்பேன்.

ஸ்கிரீன் ப்ரின்டிங்

20 ஆண்டுகளுக்கு முன்னால், பொதிகை சேனலில் கிராஃப்ட் வொர்க் செய்வது குறித்த நிகழ்ச்சிகள் வரும். அவற்றையெல்லாம் பார்த்துப் பார்த்து, அரிசி சாக்கில் கஞ்சிப் பசை போட்டு பர்ஸ் செய்யக் கற்றுக்கொண்டேன். அதேபோல, மணலில் படம் வரையவும் பயின்றேன். யாரிடமும் சென்று கற்காமல் சுயமாக பிளவுஸ் தைப்பதற்குக்கூட கற்றுக்கொண்டேன். பழைய பிளவுஸை முழுவதுமாகப் பிரித்துப் பார்த்து அதன் வழியாக பிளவுஸ் தைத்துப் பழகினேன்” என்கிறார் விஜயலட்சுமி.

“பணி மாறுதல் காரணமாக என் கணவர் வடஇந்தியாவுக்குச் செல்ல நேரிட்டது. என் ஒரே மகனும் பள்ளிக்குச் சென்றுகொண்டிருந்தான். இதனால் வீட்டில் எனக்கு ஃப்ரீ டைம் நிறைய கிடைத்தது. அப்போது, அரசு பாலிடெக்னிக்குகளில் நிறைய சுயதொழில் சார்ந்த்த இலவச பயிற்சி வகுப்புகள் நடந்தன. ஃபினாயில், சோப்புத்தூள் போன்றவற்றை வீட்டிலேயே தயாரிப்பதற்குத் தேவையான பயிற்சிகளை அங்கே கொடுப்பார்கள். ஐந்து நாள், பத்து நாள் என்று நடக்கும் அந்த வகுப்புகளில் கலந்துகொள்ளத் தொடங்கினேன். அதுமட்டுமல்லாமல், கம்ப்யூட்டர் கோர்ஸ்கள் சிலவற்றையும் கற்றுத் தேர்ந்தேன். பி.காம் படிப்பையும் அப்போதுதான் படித்து முடித்தேன். இப்படி, புதிய புதிய விஷயங்களைக் கற்க ஆரம்பித்ததும் எனக்குள் தன்னம்பிக்கை அதிகமானது.

குடிசை தொழில்கள்

சுயதொழில் பயிற்சி வகுப்புகளில் கற்றுக்கொண்ட விஷயங்களை அப்படியே விட்டுவிடாமல் வீட்டிலும் செயல்படுத்தத் தொடங்கினேன். அப்போது முதல் இப்போதுவரை எங்கள் வீட்டிற்குத் தேவையான ஃபினாயில், சோப்புத்தூள் போன்றவற்றை நானேதான் சொந்தமாகத் தயாரிக்கிறேன்” என்பவர் 2010-க்குப் பிறகு பிசினஸ் உலகில் காலடி எடுத்து வைத்திருக்கிறார்.

“2010-ம் ஆண்டிற்குப் பிறகு வீட்டில் பொருளாதாரச் சிரமங்கள் வந்தன. அந்த சமயத்தில்தான் ஸ்க்ரீன் ப்ரின்டிங் செய்யக் கற்றுக்கொண்டேன். ஒரு ஃபிரேமில் இங்க் வைத்து பேக் (bag), தாம்பூலப் பைகள், விசிறி, போன்றவற்றின் மேலே எழுத்துகள் மற்றும் டிசைன்களை ப்ரின்ட் செய்வதற்கு ஸ்க்ரீன் ப்ரின்டிங் என்று பெயர். அப்பளத்தில்கூட ஃபுட் புராசஸிங் (food processing) கலர்களைப் பயன்படுத்தி பிரத்யேகமாக மணமக்களின் பெயரை ப்ரின்டிங் செய்யலாம்.

ஸ்கிரீன் ப்ரின் டிங்

இப்படி, நான் கற்றுக்கொண்ட ஸ்க்ரீன் ப்ரின்டிங் மற்றும் டெய்லரிங் ஆகிய இரண்டு கலைகளையும் பிசினஸாக எடுத்து நடத்த முடிவு செய்தேன். ‘ஸ்ரீ கொடிக்குளம் விநாயகர் குரூப்ஸ்’ (Sri Kodikulam Vinayagar Groups) என்ற பெயரில் அவற்றை குடிசைத் தொழிலாகப் பதிவு செய்து முழு வீச்சில் செயலில் இறங்கினேன். விதவிதமான பேக் வகைகளைத் தயாரிப்பது மற்றும் அவற்றில் ஸ்க்ரீன் ப்ரின்டிங் செய்வது, ஆர்டர்களின் அடிப்படையில் பேக்-களுக்கு ஸ்க்ரீன் ப்ரிண்டிங் மட்டும் செய்து கொடுப்பது, ஃபினாயில், சோப்புத்தூள், மூலிகை சாம்பிராணி போன்றவற்றைத் தயாரித்து விற்பது, டெய்லரிங் பிசினஸ், மற்றும் ஆர்டர்களின் அடிப்படையில் விதவிதமாக பிளவுஸ் டிசைன் செய்து கொடுப்பது போன்ற பல்வேறு தொழில்களை ஒரே நேரத்தில் எடுத்துச் செய்து அசத்தி வருகிறார் விஜயலட்சுமி. இவரிடம், தற்போது 10 ஊழியர்கள் பணிபுரிகின்றனர். தவிர, தனது இந்தக் குடிசைத் தொழில்கள் மூலமாக கிராமப்புறங்களில் உள்ள பெண்களுக்கும் வேலைவாய்ப்பை அளித்து வருகிறார்.

“நாங்கள் கட்டிங் செய்து அனுப்பும் துணி மற்றும் பேக் வகைகளை அப்பெண்கள் தைத்துக் கொடுப்பார்கள். நாங்கள் தயாரிக்கும் சோப்புத்தூள், ஃபினாயில் போன்றவற்றையும் கிராமப்பகுதிகளில் வசிக்கும் பெண்கள் வாங்கிச் சென்று அவர்களுக்கு ஒரு லாபம் வைத்து அதனை விற்பார்கள். முதலீடு எதுவும் இல்லாமல் அப்பெண்களும் தொழில் செய்யவேண்டும் என்ற எண்ணத்தில் இந்த முன்னெடுப்பை நான் செய்து வருகிறேன்” என்பவர் தான் செய்துவரும் ஒவ்வொரு தொழிலுக்கும், எடுக்கும் ஆர்டர்களைப் பொறுத்து ஒவ்வொரு விதமாக வருமானம் வரும் என்கிறார். குறிப்பாக ஸ்க்ரீன் ப்ரின்டிங்கை பொறுத்தவரை மாதம் 2 லட்ச ரூபாய் வரைக்கும் பிசினஸ் செய்வதாகக் கூறுகிறார்.

குடிசை தொழில்

ஒருபக்கம் தொழில்முனைவோராக பட்டையைக் கிளப்பி வரும் விஜயலட்சுமி, மறுபக்கம் சமூக அக்கறையுடன் கேர் கிளப் ஃபவுண்டேஷன் (Care Club Foundation) என்ற அறக்கட்டளையையும் நடத்தி வருகிறார்.

“எப்பாடுபட்டாவது தங்கள் குடும்பத்தைக் கரைசேர்க்கவேண்டும் என்ற தவிப்புடன் இருக்கும் பெண்கள் தங்கள் சொந்தக்காலில் நின்று தொழில் செய்து முன்னேறத் தேவையான அனைத்து வழிகாட்டுதல்களையும், பயிற்சியையும் எங்கள் அறக்கட்டளை வழியாக நாங்கள் கொடுக்கிறோம். எளிய குடும்பங்கள் வாழ்வில் உயரத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்துவருகிறோம்.

தற்போது மதுரையில் மட்டும் நான் செய்துவரும் மேற்சொன்ன தொழில்களை, அடுத்து தமிழ்நாடு முழுக்க விரிவுபடுத்த வேண்டும். அதற்கான வேலைகளில் தற்போது இறங்கியிருக்கிறேன்” என்கிறார் விஜயலட்சுமி புன்னகையுடன்.

அசத்துங்கள் விஜயலட்சுமி!

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.