கட்டிய மனைவி, குழந்தை குட்டிகளை விட்டுவிட்டு வேறொரு பெண்ணுடன் ஓடிப்போகும் முத்தலாக் முறையை நீக்கியவர் பிரதமர் நரேந்திர மோடி: தமிழக பா.ஜ.க. தலைவர் L முருகன் காரசார பேச்சு.!

ஈரோடு தெற்கு மாவட்ட செயற்குழுக் கூட்டத்தில் பங்கேற்க சென்ற பாஜக மாநிலத்தலைவர் முனைவர் திரு.எல்.முருகன் கூட்டத்தில் எழுச்சி மிகுந்த உரையாற்றினார். அப்போது அவர்கள் பேசுகையில் நிகழ்ச்சியில் அதிகம் பேர் கூடியிருப்பது தமிழகத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றத்தின் அறிகுறியாகும் என்றார். தமிழகத்தில் கறுப்பர் கூட்டத்தை ஓட ஓட விரட்டியடித்து, மாபெரும் மாற்றத்தை உருவாக்கப் போகும் கூட்டம் காவிக் கூட்டம் என்றார்.

எப்போதுமில்லாத வகையில் பட்டியல் இன சகோதரர்கள் உட்பட செல்வந்தர்கள், கலைத்துறையை சேர்ந்தவர்கள், பலதரப்பு மக்கள் பல கட்சிகளில் இருந்து விலகி தினமும் பாஜகவில் இணைந்து வருகின்றனர். அடுத்து தமது கட்சியில் இருந்து பாஜகவில் இணையப்போவது யார் யார் ? என்பது பற்றி உளவு பார்க்கும் வேலையை செய்வதே தமிழகத்தில் சில அரசியல் கட்சி தலைவர்களின் வேலையாக போய்விட்டது. இதற்கெல்லாம் காரணம் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் ஆற்றல் மிக்க வல்லமையால்தான். அதனால்தான் பாஜக ஆட்சி தமிழகத்தில் வேண்டும் என மக்கள் நினைக்கின்றனர். இதுதான் இந்த எழுச்சிக்குக் காரணம். நாம் வெல்லப்போவதும், சட்டசபைக்கு செல்லப்போவதும் நிச்சயம் என்றார் .

மேலும் அயோத்தியில் ஸ்ரீராமர் கோவில் கட்ட காரணமான பிரதமர் மோடியை நாடுமுழுவதும் கோடிக்கணக்கான மக்கள் வாழ்த்துகின்றனர். அவருடைய திறமை பெருமையாக பேசுகின்றனர். காஷ்மீரில் 370 வது பிரிவு நீக்கப்பட்டு, இன்றைக்கு பரவலான வளர்ச்சியை காண்பதன் மூலம் பாஜக மூத்த தலைவர் ஷ்யாம் பிரசாத் முகர்ஜியின் தியாகம் இன்றைக்கு பிரதமர் மோடியால் தான் நிறைவேறியுள்ளது என்றார். ஒரு பெண்ணை கல்யாணம் செய்யலாம், குழந்தை பெறலாம், ஆனால் இவர்களை நடுத்தெருவில் விட்டுவிட்டு வேறொரு பெண்ணுடன் செல்ல வகை செய்யும் முத்தலாக் முறையை நீக்கி முஸ்லிம் பெண்களை காப்பாற்றியவர் பிரதமர் நரேந்திரமோடி அவர்கள்தான் என்றார்.

தமிழகத்தில் 41 இலட்சம் விவசாயிகள் பிரதமரின் ஆண்டுக்கு 6 ஆயிரம் உதவி பணத்தை பெற்று வருகின்றனர். அப்பணம் மூலம் மீண்டும் விவசாயம் செய்து பல விவசாயிகள் நன்மை அடைந்து வருகின்றனர். சேவை மனப்பான்மை என்பது பாஜக தொண்டனின் ரத்தத்தில் ஊறிப்போனது, கொரோனா காலத்தில் 30 இலட்சம் பேருக்கு தொடர்ந்து சமையல் செய்து சாப்பாடு அளித்தவர்கள் பாஜக தொண்டர்கள். பாஜகவினரை சட்டசபை நாற்காலியில் உட்காரவைக்கும் வரையில் நமக்கு ஓய்வில்லை, வேகமாக பணியாற்றுவோம், வெற்றி காண்போம், தேர்தலுக்கு இன்னும் ஐந்து மாதங்களே உள்ளது இவ்வாறு மாநிலத்தலைவர் எல்.முருகன் பேசினார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.