பாதுகாப்பு ஒத்துழைப்பு உட்பட இந்தியா-ஓமன் இடையே 8 ஒப்பந்தம் கையெழுத்து

மஸ்கட்: ஓமன் சென்ற பிரதமர் நரேந்திர மோடி, 8 முக்கிய ஒப்பந்தங்களை மேற்கொண்டார். நேற்றுடன் 3 நாடுகள் பயணத்தை நிறைவு செய்த அவர் நாடு திரும்பினார். பாலஸ்தீனம், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஓமன் ஆகிய மேற்கு ஆசியாவின் 3 நாடுகளில் பிரதமர் மோடி அரசு முறை பயணம் மேற்கொண்டார். பாலஸ்தீனத்தை தொடர்ந்து ஐக்கிய அரபு எமிரேட்ஸ் சென்ற அவர், உலக அரசு உச்சி மாநாட்டில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று உரையாற்றினார். அதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு பயணத்தின் கடைசி கட்டமாக ஓமன் நாட்டுக்கு சென்றார். தலைநகர் மஸ்கட்டில் பிரதமர் மோடிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. ஓமன் சுல்தான் காபூஸ் பின் சயீத்தை பிரதமர் மோடி சந்தித்து பேசினார். இந்த சந்திப்பில் இருநாட்டு பிரதிநிதிகளும் பங்கேற்றனர். இதுகுறித்து வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் ரவீஸ் குமார் தனது டிவிட்டர் பதிவில், ‘‘வர்த்தகம், முதலீடு, ஆற்றல், பாதுகாப்பு, உணவு பாதுகாப்பு துறையில் இரு தரப்பு உறவை மேம்படுத்துவது தொடர்பாக விவாதிக்கப்பட்டது. மேலும், பிராந்திய விவகாரங்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது’’ என்றார்.அப்போது, ஓமன் நாட்டில் பணிபுரியும் இந்தியர்களின் கடின உழைப்பையும், நேர்மையையும் சுல்தான் காபூஸ் வெகுவாக பாராட்டினார். ஓமன் வளர்ச்சியில் இந்தியர்களின் பங்கு மிக முக்கியமானது என அவர் கூறினார். இதைத்தொடர்ந்து, இரு நாட்டு தலைவர்கள் முன்னிலையில், பாதுகாப்பு, விசா, சுகாதாரம், சுற்றுலா உள்ளிட்ட 8 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இதில், வர்த்தகம் மற்றும் பொது விவகாரங்களில் பரஸ்பரம் சட்ட ஒத்துழைப்பு வழங்குவது, தூதரக, அரசு உயர் அதிகாரிகள், சிறப்பு விசா வைத்திருப்போருக்கு பரஸ்பர விசா விலக்கு அளிப்பது, ராணுவ கூட்டு ஒத்துழைப்பு நடவடிக்கை மேற்கொள்வது ஆகியவை குறிப்பிடத்தக்கதாகும்.பின்னர், ஓமன் வாழ் இந்தியர்கள் மத்தியில் உரையாற்றிய பிரதமர் மோடி, ‘‘அரசியல் சூழலில் எத்தகைய ஏற்றத் தாழ்வுகளை சந்தித்த நேரத்திலும் கூட இந்தியா, ஓமன் இடையேயான உறவு வலுவாக இருந்து வருகிறது. இதற்கு இங்கு வசிக்கும் இந்தியர்களும் முக்கிய காரணம். நூற்றாண்டுகளைக் கடந்து இரு நாடுகளுக்கும் இடையேயான உறவு நீடிக்கிறது’’ என்றார். ஓமனில் சுமார் 90 லட்சம் இந்தியர்கள் பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது. ஓமன் பயணத்தின் 2ம் நாளான நேற்று பிரதமர் மோடி, அந்நாட்டின் துணை பிரதமர்கள் சயீத் பகத் பின் மகமூத் அல் சயீத்தையும், சயீத் அசாத் பின் தாரிக் அல் சயீத்தையும் சந்தித்து பேசினார்.  பின்னர் 3 நாடுகள் பயணத்தை முடித்துக் கொண்ட பிரதமர் மோடி, நேற்றிரவு நாடு திரும்பினார். முன்னதாக, ஐக்கிய அரபு எமிரேட்சில் பிரதமரும் துணைத்தலைவருமான ஷேக் முகமது பின் ரஷீத்தை  பிரதமர் மோடி சந்தித்தார். இதுதொடர்பாக வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில், ‘‘கடந்தாண்டு மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில், இந்தியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இணைந்து கூட்டு கடற்படை போர் பயிற்சி மேற்கொள்ள உள்ளதை இரு நாட்டு தலைவர்களும் வரவேற்றுள்ளனர்’’ என குறிப்பிடப்பட்டுள்ளது. முதல் முறையாக அரபிக் கடலுக்கு வெளியே, வளைகுடா கடல் பகுதியில் இந்திய கடற்படை இப்பயிற்சியில் ஈடுபட உள்ளது குறிப்பிடத்தக்கது.சிவன் கோயிலில் வழிபட்டார்மஸ்கட்டில் 125 ஆண்டுகள் பழமையான சிவன் கோயிலில் பிரதமர் மோடி வழிபட்டார். இக்கோயில் மத்ரா பகுதியில் அமைந்துள்ளது. குஜராத் வணிகர்களால் 125 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இக்கோயில், கடந்த 1999ல் புனரமைக்கப்பட்டது. தினமும் இக்கோயிலில் 15,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் வழிபடுகின்றனர். இங்கு பிரதமர் மோடியுடன் கோயில் நிர்வாகிகள் மற்றும் இந்தியர்கள் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.