விஜய் ஹசாரே டிராபி கிரிக்கெட் சமர்த் வியாஸ் அதிரடியில் சவுராஷ்டிரா அபார வெற்றி

செகந்திராபாத்: விஜய் ஹசாரே டிராபி ஒருநாள் போட்டித் தொடரின் டி பிரிவு லீக் ஆட்டத்தில், சவுராஷ்டிரா அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் சர்வீசஸ் அணியை எளிதாக வீழ்த்தியது. செகந்திராபாத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாசில் வென்று பேட் செய்த சர்வீசஸ் அணி 48.2 ஓவரில் 176 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. சாட்டர்ஜீ 52, சேத்தி 33, கேப்டன் ராகுல் சிங் 23, ராஜ் 20, திவாரி 19 ரன் எடுத்தனர். சவுராஷ்டிரா பந்துவீச்சில் தர்மேந்திரசிங் ஜடேஜா 4, உனத்காட், ஷவுர்யா சனந்தியா தலா 2, ஜனி 1 விக்கெட் வீழ்த்தினர். அடுத்து களமிறங்கிய சவுராஷ்டிரா 21.4 ஓவரிலேயே 2 விக்கெட் இழப்புக்கு 181 ரன் எடுத்து வென்றது. பரோட் 0, ஜனி 18 ரன்னில் வெளியேற, சமர்த் வியாஸ் 114 ரன் (66 பந்து, 12 பவுண்டரி, 8 சிக்சர்), கேப்டன் செதேஷ்வர் புஜாரா 45 ரன்னுடன் (39 பந்து, 3 பவுண்டரி, 3 சிக்சர்) ஆட்டமிழக்காமல் வெற்றியை வசப்படுத்தினர். ஆந்திரா அபாரம்: சென்னை டிஐ சைக்கிள்ச் மைதானத்தில் நேற்று நடந்த சி பிரிவு லீக் ஆட்டத்தில் ஆந்திரா 9 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் அணியை வென்றது. டாசில் வென்ற ஆந்திரா முதலில் பந்துவீச, குஜராத் 50 ஓவரில் 250 ரன் குவித்து ஆல் அவுட்டானது. ருஜுல் பட் 74, பியுஷ் சாவ்லா 56, கேப்டன் பார்திவ் பட்டேல் 39, மெராய் 36, ராகுல் ஷா 34 ரன் எடுத்தனர். கடைசி 3 வீரர்கள் டக் அவுட்டாகி ஏமாற்றமளித்தனர். ஆந்திரா பந்துவீச்சில் கார்த்திக் ராமன் 4, அய்யப்பா, நரேன் தலா 2, விஹாரி 1 விக்கெட் வீழ்த்தினர். அடுத்து களமிறங்கிய ஆந்திர அணிக்கு தொடக்க வீரர்கள் கர் பரத், அஷ்வின் ஹெப்பர் இருவரும் 36.3 ஓவரில் 192 ரன் சேர்த்தனர். ஹெப்பர் 99 ரன் எடுத்து (108 பந்து, 11 பவுண்டரி, 2 சிக்சர்) துரதிர்ஷ்டவசமாக சதத்தை நழுவவிட்டார். ஆந்திரா 45.2 ஓவரில் 1 விக்கெட் இழப்புக்கு 251 ரன் எடுத்து தொடர்ச்சியாக 5வது வெற்றியை வசப்படுத்தியது.கர் பரத் 106 ரன் (132 பந்து, 4 பவுண்டரி, 4 சிக்சர்), கேப்டன் விஹாரி 39 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். ஆந்திரா 4 புள்ளிகளை தட்டிச் சென்றது. அந்த அணி இதுவரை விளையாடி உள்ள 5 போட்டியிலும் வென்று 20 புள்ளிகளுடன் சி பிரிவில் தொடர்ந்து முதலிடம் வகிக்கிறது. மும்பை (16), மத்தியபிரதேசம் (12), ராஜஸ்தான், கோவா அணிகள் தலா 8 புள்ளிகள் பெற்றுள்ள நிலையில், தமிழக அணி 5 போட்டியில் 1 வெற்றி, 4 தோல்வி கண்டு 4 புள்ளிகளுடன் 6வது இடத்தின் பின்தங்கியுள்ளது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.