இந்த ஆண்டு கோடை சீசனில் கையை சுடுமா குளுகுளு ஐஸ்கிரீம்?

புதுடெல்லி: உலர் பழங்கள், பால் பவுடர் உள்ளிட்ட மூலப்பொருட்கள் விலை உயர்வு, தொடர்ந்து அதிகரிக்கும் டீசல் விலை போன்றவற்றால் இந்த ஆண்டு கோடை சீசனில் ஐஸ்கிரீம் விலை உயரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.  ஆண்டுதோறும் கோடை காலத்தில் குளிர்பானங்கள், ஐஸ்கிரீம், பழச்சாறுகள் விற்பனை சூடுபிடிக்கும். இதுபோல் இந்த ஆண்டு சம்மருக்கு புதுப்புது ரகங்களுடன் ஐஸ்கிரீம்களை களமிறக்கி வாண்டூஸ் உட்பட வாடிக்கையாளர்களை குளிர வைக்க நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன. அதேநேரத்தில் இவற்றின் விலை இந்த சம்மரில் கையைச்சுடும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.இதுகுறித்து ஐஸ்கிரீம் உற்பத்தி நிறுவனங்கள் தரப்பில் கூறப்படுவதாவது:ஐஸ்கிரீம்கள் தயாரிப்புக்கு பழங்கள் மிக முக்கியமாக தேவை. அனைத்து வகை பழங்களின் விலையும் உயர்ந்துள்ளது. குறிப்பாக உலர் பழங்கள் விலை கணிசமாக அதிகரித்துள்ளது. இதனால் ஐஸ்கிரீம் தயாரிப்புக்கான உற்பத்தி செலவு அதிகரிக்கும். பால் பவுடர், வெண்ணெய் விலையும் உயர்ந்துள்ளன. போதாக்குறைக்கு டீசல் விலை கடந்த 6 மாதங்களில் சுமார் 23 சதவீதம் உயர்ந்திருக்கிறது. ஐஸ்கிரீம் உற்பத்தியில் ஈடுபடும் தொழிலாளர்களின் சம்பளம் 10 சதவீதமும், பேக்கிங்கிற்கு பயன்படுத்தப்படும் பொருட்கள் விலை 8 முதல் 10 சதவீதமும் அதிகரித்துள்ளது.   இதனால் இந்த ஆண்டு கோடை சீசனில் ஐஸ்கிரீம் விலையை உயர்த்த வேண்டிய இக்கட்டான நிலையில் ஐஸ்கிரீம் தயாரிப்பு நிறுவனங்கள் உள்ளன. உயர் ரக ஐஸ்கிரீம் தயாரிக்கும் ஒரு சில நிறுவனங்கள் மட்டும் 5 சதவீதம் வரை உயர்த்தலாமா என்று பரிசீலித்து வருகின்றன. சாதாரணமாக 5 ரூபாயில் இருந்து 10 ரூபாய்க்குள் விற்கப்படும் ஆரஞ்ச் போன்ற சுவையில் உள்ள குச்சி ஐஸ்கள், ரூ.10 முதல் ரூ.20 வரை விற்கப்படும் சிறிய கப் ஐஸ்களுக்கு எப்போதுமே கிராக்கி உண்டு. உதாரணமாக இதில் 20 ரூபாய்க்கு விற்கப்படும் ஐஸ்கிரீமை 22 ரூபாயாக உயர்த்த முடியாது. வரி இதர செலவுகள் சேர்த்து ரூ.25க்கு உயர்த்தினால்தான் கட்டுபடியாகும்.   ஆனால், சந்தையில் இவற்றுக்கு எப்போதுமே கிராக்கி என்பதால் இந்தனை ஆண்டுகளாக அதிகமாக உயர்த்தாமல் நஷ்டத்தை ஏற்று சமாளித்து வருகிறோம். சில நிறுவனங்கள் கோன் ஐஸ் மற்றும் குச்சி ஐஸ் விலையை 2 முதல் 5 சதவீதம் வரை உயர்த்தியிருக்கின்றன. இந்த தொழிலில் ஆண்டுக்கு ரூ.8,000 கோடிக்கு வர்த்தகம் நடைபெறுகிறது என்றனர்.  ஆனால், ஐஸ்கிரீம் உற்பத்தி நிறுவனங்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு எதுவும் வெளியிடவில்லை. சில நிறுவனங்கள் அடுத்த மாதம் விலை உயர்வு அறிவிக்கலாம் எனத்தெரிகிறது. இருப்பினும், இந்த ஆண்டு கோடை காலத்தில் ஐஸ்கிரீம் விற்பனை 15 முதல் 20 சதவீதம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. உலர் பழங்கள், பால்பவுடர் உள்ளிட்ட மூலப்பொருட்கள் விலை அதிகரிப்புடீசல் விலை 6 மாதங்களில் 23 சதவீதத்துக்கு மேல் உயர்ந்ததால்  போக்குவரத்து செலவு கூடும்.மூலப்பொருள் விலை தொடர்ந்து அதிகரித்தும், மிக பிரபலமான குச்சிஐஸ்கள் 5 முதல் 10 வரை விற்க வேண்டிய சூழ்நிலை. ஐஸ்கிரீம் தொழிலில் ஆண்டுக்கு சுமார் ரூ.8,000 கோடிக்கு வர்த்தகம்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.