கடந்த 3 வருடத்தில் 80 கோடி அமித்ஷாவின் மகன் சொத்து குறித்து விவாதிக்க பிரதமர் தயாரா?: காங்கிரஸ் தேசிய தலைவர் ராகுல்காந்தி கேள்வி

பெங்களூரு:  கடந்த மூன்று வருடத்தில் அமித்ஷாவின் மகன் சொத்து மதிப்பு  ரூ.80 கோடியாக  உயர்ந்துள்ளது. இது எப்படி சாத்தியம் என்பதை விவாதிக்க பிரதமர்  நரேந்திரமோடி தயாராக இருக்கிறாரா? என்று காங்கிரஸ் தேசிய தலைவர் ராகுல்காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். காங்சிரஸ் கட்சியின் தேசிய தலைவர் ராகுல்காந்தி மாநிலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். மூன்றாவது நாளான நேற்று ராய்ச்சூரில் ராகுல்காந்தி சொகுசு பஸ்சில் பயணம் செய்து மக்களிடம் பிரசாரம் செய்தார். மக்கள் ஆசிர்வாத பேரணி என்ற பெயரில் நடைபெறும் பிரசாரத்தில் ராகுல்காந்தி பேசியதாவது: கர்நாடக மாநில அரசு மக்களுக்கு அளித்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றியுள்ளது. தேர்தலுக்கு முன்பு அளித்த வாக்குறுதிகளை நாங்கள் நிறைவேற்றி சொன்ன வார்த்தையை காப்பாற்றியுள்ளோம். எவ்வித முறைகேடு இல்லாத நல்லாட்சியை முதல்வர் சித்தராமையா அளித்துள்ளார். மாநில அரசின் திட்டங்கள் அனைவரையும் சென்றடைந்துள்ளதால்,  மீண்டும் காங்கிரஸ் ஆட்சி அமைவது உறுதியாகும். பெங்களூருவில் நடந்த பாஜக மாநாட்டில் பிரதமர் நரேந்திரமோடியின் இரண்டு பக்கத்திலும் யார் இருந்தார்கள் தெரியுமா? ஒருவர் மிகப்பெரிய ஊழலில் சிக்கி முதல்வர் பதவியை இழந்த எடியூரப்பா, மற்றொருவர் கட்டா சுப்பிரமணியம் நாயுடு. இந்த இரண்டு பேரையும் வைத்துக்கொண்டு ஊழல், முறைகேடு குறித்து பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றியுள்ளார். மாநில காங்கிரஸ் அரசின் மீது குற்றம் சுமத்தியுள்ளார். கர்நாடக மாநில அரசை குறைகூறுவதற்கு முன்பு பிரதமர் நரேந்திரமோடி, பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பு அளித்த வாக்குறுதிகளை ஒரு முறை நினைத்துப்பார்க்கவேண்டும். ஒவ்வொரு தனிநபர் வங்கி கணக்கிலும் ரூ.15 லட்சம் டெபாசிட் செய்வோம், பிரதி வருடம் 2 கோடி பேருக்கு புதிய வேலைவாய்ப்பு அளிப்போம் என்பது உள்ளிட்ட வாக்குறுகள் என்னவாயிற்று? பாஜக தலைவர் அமித்ஷாவின் மகனின் சொத்து மதிப்பு  ரூ.50 ஆயிரம் இருந்தது. கடந்த மூன்று வருடத்தில்  ரூ.80 கோடியாக சொத்து மதிப்பு உயர்ந்துள்ளது. அமித்ஷாவின் மகன் சொத்து மதிப்பு ஒன்றல்ல, இரண்டல்ல ஆயிரம் மடங்கு உயர்ந்துள்ளது.இது எப்படி சாத்தியம் என்பதை விவாதிக்க பிரதமர் நரேந்திரமோடி தயாராக இருக்கிறாரா? நமது அண்டை நாடான சீனாவில் 24 மணி நேரத்தில் 15 ஆயிரம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. அதே நேரத்தில் நமது இந்தியாவில் 450 வேலை வாய்ப்புகள் மட்டுமே உருவாகியுள்ளன. மாநில காங்கிரஸ் அரசு, தேர்தலுக்கு முன்பு என்னவெல்லாம் வாக்குறுதிகள் அளித்ததோ? அதையெல்லாம் செயல்படுத்தியுள்ளது. கிரிக்கெட் வீரர், சச்சின் டெண்டுல்கர் மைதானத்தில் விளையாடும்போது பந்து வீசும் நபரை எதிர்த்து திறமையை காட்டினார். பந்துகளை எல்லைக்கோடுகளை நோக்கி அடித்து விரட்டுவார். ஆனால், நரேந்திரமோடி விக்கெட் கீப்பரை பார்த்துக்கொண்டு, விளையாடி வருகிறார், என்றார். காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் ராகுல்காந்தி  ராய்ச்சூரு முக்கிய வீதிகளில் நேற்று பிரசாரம் செய்தார். காங்கிரஸ் தொண்டர்கள், ராகுல்காந்திக்கு சிறப்பாக வரவேற்பு அளித்தனர். காங்கிரஸ் தொண்டர் ஒருவர், ராகுல்காந்திக்கு கதாயுதத்தை பரிசளித்தார். அதனை கையில் வாங்கி புகைப்படத்திற்கு கம்பீரமாக போஸ் கொடுத்தார். ராகுல்காந்தியின் சுற்றுப்பயணம், ராய்ச்சூரு, பிஜாபுரா, குல்பர்கா உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த காங்.தொண்டர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.மிளகாய் பஜ்ஜி சாப்பிட்ட ராகுல்ராய்ச்சூருவில் நேற்று நடந்த பேரணியின் போது தெருவோரத்தில் இருந்த சாதாரண டீக்கடையின் முன்பு பஸ்சை நிறுத்த செய்தார். பின்னர் எவ்வித பந்தாவும் இன்றி டீக்கடையின் உள்ளே சென்று சாதாரண பெஞ்சில் அமர்ந்து கடையில் என்ன இருக்கிறது என்று கேட்டுள்ளார். இதைத்தொடர்ந்து முதல்வர் சித்தராமையா, மாநில காங். தலைவர் பரமேஸ்வர், செயல் தலைவர் எஸ் ஆர் பாட்டீல், பிரசார குழு தலைவர் அமைச்சர் டிகே சிவகுமார் ஆகியோர் பதறி அடித்து டீக்கடைக்குள் சென்றனர். டீக்கடையின் உள்ளே அமர்ந்திருந்த ராகுல், காங்கிரஸ் தலைவர்களை எதிரே அமரச்செய்தார். அதன்பிறகு அனைவரும் மிளகாய் பஜ்ஜி, மிக்சர், வெங்காயம், நிலக்கடலை சேர்ந்த கலவை( மண்டக்கி) ஆகியவற்றை சுவைத்தனர். அதன் பிறகு டீ குடித்தபடி தலைவர்களிடம் சுவாரசியமாக ராகுல்காந்தி உரையாடிக்கொண்டிருந்தார். அப்போது டீக்கடைக்கு வந்த ஒரு பெண்ணிடம், மிளகாய் பஜ்ஜியை வழங்கிய ராகுல்காந்தி, கடை உரிமையாளர் மாரம்மாவிடம் ஒரு நாள் வியாபாரம் எவ்வளவு என்று கேட்டார். அதற்கு ரூ.2 ஆயிரம் வரை விற்பனை ஆகும் என மாரம்மா கூறினார். உடனே ரூ.2 ஆயிரத்தை எடுத்து டீக்கடை உரிமையாளராக மாரம்மாவிடம் ராகுல்வழங்கினார்.  அதை வாங்க மறுத்த மாரம்மா, இது உங்கள் கடை என்று நினைத்துக்கொள்ளுங்கள் என்று கூறி மறுத்துவிட்டார். இதைத்தொடர்ந்து ராகுல்காந்தி பஸ்சில் ஏறி மக்கள் ஆசிர்வாத பேரணியை நடத்தினார். ராகுல்காந்தி, டீக்கடையில் மிளகாய் பஜ்ஜி, மண்டக்கி சாப்பிட்ட சம்பவம் அந்த பகுதி மக்களிடம் மகிழ்ச்சியையும் அதே நேரத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசாருக்கு நெருக்கடியையும் ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.