பேரவையில் ஜெயலலிதா படம் வைத்தது தவறு : முத்தரசன் குற்றச்சாட்டு

சென்னை: இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கை: வரலாற்று சிறப்புமிக்க தமிழக சட்டப்பேரவையில் ஜெயலலிதாவின் படத்தை திறப்பது தவறான முன்னுதாரணமாகும். பேரவையில் இதற்கு முன்னர் காந்தி படத்தை அன்றைய கவர்னர் ஜெனரலாக இருந்த ராஜாஜி திறந்து வைத்துள்ளார். ராஜாஜியின் படத்தை அன்றைய பிரதமர் நேரு திறந்து வைத்துள்ளார். திருவள்ளுவர் படத்தை அன்றைய குடியரசு துணைத் தலைவர் ஜாஹீர் உசேனும், அண்ணாவின் படத்தை அன்றைய பிரதமர் இந்திராகாந்தியும், காமராஜர் படத்தை அன்றைய குடியரசுத் தலைவர் நீலம் சஞ்சீவிரெட்டியும், தந்தை பெரியார், டாக்டர் அம்பேத்கர், முத்துராமலிங்கத் தேவர், காயிதேமில்லத் ஆகிய தலைவர்களின் படங்களை கேரள ஆளுனராக இருந்த ஜோதி வெங்கடாசலமும் திறந்து வைத்தனர்.எம்ஜிஆர் படத்தை அன்றைய முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார். புகழ்மிக்க தலைவர்கள் படம் அவையில் அலங்கரித்த நிலையில், குற்றவாளி என உச்ச நீதிமன்றத்தால் தீர்ப்பு வழங்கப்பட்ட ஜெயலலிதா படத்தை பேரவையில் திறப்பது முற்றிலும் தவறான முன்னுதாரணமாகும். இவ்வாறு அவர் கூறியுள்ளார். தமாகா தலைவர் ஜி.கே.வாசன்: தமிழக மக்களின் பண்பாடு, சட்டமன்ற பேரவையின் மரபுகள் ஆகியவை பேணிப் பாதுகாக்கப்பட வேண்டும். மரபும், மாண்பும் கலந்த இப்பிரச்னையை அரசியல் கண்ணோட்டத்தோடு அணுகி, கருத்து கூறுவதை தமாகா தவிர்க்க விரும்புகிறது. இப்பிரச்னையில் நீதிமன்றமே தானாக முன்வந்து சரியான நெறிமுறைகளை வகுத்து கொடுக்க வேண்டும்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.