ஐசிசி யு-19 உலக கோப்பை : நியூசிலாந்தில் இன்று கோலாகல தொடக்கம்

வாங்கரெய்: இளைஞர் உலக கோப்பை ஒருநாள் போட்டித் தொடர், நியூசிலாந்தில் இன்று கோலாகலமாகத் தொடங்குகிறது. இந்திய நேரப்படி அதிகாலை 3.00 மணிக்கு தொடங்கும் முதல் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) நடத்தும் 19 வயதுக்குட்பட்டோருக்கான உலக கோப்பை தொடர் நியூசிலாந்தில் இன்று தொடங்கி பிப்ரவரி 3ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து உட்பட மொத்தம் 16 அணிகள் 4 பிரிவுகளாக லீக் சுற்றில் மோதுகின்றன. மூன்று முறை சாம்பியனான இந்திய அணி பி பிரிவில் ஆஸ்திரேலியா, பாப்புவா நியூ கினியா, ஜிம்பாப்வே ஆகிய அணிகளின் சவாலை எதிர்கொள்கிறது. 2000, 2008, 2012ல் யு-19 உலக கோப்பையை முத்தமிட்டுள்ள இந்தியா, 2 முறை பைனலில் தோற்றுள்ளது. இந்த முறை முன்னாள் நட்சத்திர வீரர் ராகுல் டிராவிட் பயிற்சியின் கீழ், தொடக்க வீரர் பிரித்வி ஷா தலைமையில் களமிறங்கும் இந்திய அணி 4வது முறையாக சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்தியா தனது முதல் லீக் ஆட்டத்தில் நாளை பலம் வாய்ந்த ஆஸ்திரேலிய அணியுடன் மோதுகிறது. இப்போட்டி, இந்திய நேரப்படி அதிகாலை 5.30க்கு தொடங்குகிறது. இதைத் தொடர்ந்து 16ம் தேதி பாப்புவா நியூ கினியா அணியுடனும், கடைசி லீக் ஆட்டத்தில் 19ம் தேதி ஜிம்பாப்வே அணியுடனும் மோதுகிறது. தொடக்க நாளான இன்று 4 லீக் ஆட்டங்கள் நடைபெறுகின்றன.இந்தியா: பிரித்வி ஷா (கேப்டன்), ஷிபம் கில், ஆர்யன் ஜுயல், அபிஷேக் ஷர்மா, அர்ஷ்தீப் சிங், ஹர்விக் தேசாய், மன்ஜோத் கல்ரா, கம்லேஷ் நாகர்கோட்டி, பங்கஜ் யாதவ், ரியான் பராக், இஷான் போரெல், ஹிமான்ஷு ராணா, அனுகுல் ராய், ஷிவம் மாவி, ஷிவா சிங். தலைமை பயிற்சியாளர்: ராகுல் டிராவிட்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.