எம்எல்ஏக்கள் சம்பள உயர்வு மசோதா நிறைவேற்றம்: போக்குவரத்து தொழிலாளர் பிரச்னை தீராமல் சம்பளம் வாங்கமாட்டோம்: மு.க.ஸ்டாலின்

சென்னை: சட்டப் பேரவையில் நேற்று மேயர் பதவிக்கு நேரடி தேர்தல், எம்எல்ஏக்கள் சம்பளம் உயர்வு உள்பட 14 புதிய சட்ட மசோதாக்கள் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டன. அப்போது நடந்த விவாதம்: எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின்: போக்குவரத்துத் தொழிலாளர்கள் வெறும் 0.13 சதவீத ஊதிய உயர்வுக்காக போராடிக் கொண்டிருக்கிறார்கள். எனவே இதுபோன்ற சூழ்நிலையில் மக்கள் பிரதிநிதிகளாக இருக்கின்ற நாமெல்லாம் மற்றவர்களுக்கு ஒரு உதாரணமாக இருக்க வேண்டும். அந்த வகையில் இந்த சம்பள உயர்வை திமுக கடுமையாக எதிர்க்கிறது. துணை முதல்வர்:  இந்த சம்பள உயர்வு குறித்து அறிவிப்பு வெளியாகி 6 மாதங்கள் ஏதும் சொல்லாமல் இருந்த எதிர்க்கட்சித் தலைவர் இப்போது ஏன் எதிர்ப்பு தெரிவிக்கிறார். அரசியல் ஆதாயம் இருக்கிறது என்று எதிர்க்கிறாரா? எல்லா உறுப்பினர்களும் வசதியானவர்கள் அல்ல. குறிப்பாக ஏற்காடு உறுப்பினர் இன்னும் தொகுப்பு வீட்டில் 3 குழந்தைகளுடன் வசித்து வருகிறார். மு.க.ஸ்டாலின்: ஊதிய உயர்வு பற்றி  துணை முதல்வர் சொல்லியிருக்கிறார். ஏதோ அரசியல் ஆதாயத்திற்காக என்று. யார் அரசியல் ஆதாயத்திற்காக என்னென்ன செய்தார்கள் என்பதை சொல்ல ஆரம்பித்தால் அது வேறு விவாதத்தில் போய் விடும்.திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் உங்களிடத்திலே ஒரு கடிதத்தை கொடுத்து இருக்கிறோம். போக்குவரத்துத் தொழிலாளர்களின் பிரச்சினை தீர்கிற வரையில் இந்த சம்பள உயர்வு தேவை தானா? முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி: ஒரு உறுப்பினர் பொதுமக்கள் தொடர்பாக பணியாற்ற வேண்டும் என்றால் எவ்வளவு செலவாகிறது என்று எல்லாருக்கும் தெரியும். ஒரு சிலருக்கு வசதிவாய்ப்புகள் இருக்கலாம். அவர்களை வைத்து மற்றவர்களை எடை போடக்கூடாது. அவர்கள் சேவை என்றும் தேவை அடிப்படையில்தான் சம்பளம் உயர்த்தப்படுகிறது. மு.க.ஸ்டாலின்:  போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு தருவதற்கு பணம் இல்லை, போதிய அளவு நிதி ஆதாரம் இல்லை என்று அரசே வெளிப்படையாகச் சொல்லிக் கொண்டிருக்கிறது. போக்குவரத்துத் தொழிலாளர்கள் பிரச்னை தீரும் வரை நீங்கள் உயர்த்தி இருக்கும் இந்த சம்பளத்தை பெறுவதற்கான முடிவில் நிச்சயமாக நாங்கள் பின்வாங்க மாட்டோம். துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம்: சம்பளம் தேவையில்லை என்று கூறுகிறீர்களே, கம்யூனிஸ்ட் கட்சியினர் எழுதிக் கொடுத்தது போல நீங்கள் எழுதிக் கொடுப்பீர்களா? மு.க.ஸ்டாலின்: நீங்கள் கேட்பது போல நாங்கள் தரத் தயாராக இருக்கிறோம். இவ்வாறு விவாதம் நடந்தது. இந்த விவாதத்திற்கு பின் மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.