அமித்ஷாவுக்கு சாதகமாக செயல்பட்டாரா தீபக் மிஸ்ரா?

பாஜக தலைவர் அமித்ஷா தொடர்புடைய என்கவுண்ட்டர் வழக்கை விசாரித்த நீதிபதி லோயா மரணம் தொடர்பான வழக்கு தான் தீபக் மிஸ்ரா மீதான புகார்களுக்கு முதல் காரணமாக அமைந்துள்ளது. 

உச்சநீதிமன்ற நீதிபதிகள் செல்லமேஸ்வர், ரஞ்சன் கோகாய், குரியன் ஜோசப், மதன் பி லோகூர் ஆகிய நான்கு பேரும் தலைமை  நீதிபதி தீபக் மிஸ்ரா மீது சரமாரியான புகார்களை முன்வைத்துள்ளனர். மூத்த நீதிபதிகளுக்கு வழக்குகளை ஒதுக்கீடு செய்வதில் பாரபட்சம் காட்டுகிறார் என்பதுதான் அதில் பிரதானமான குற்றச்சாட்டு. அதில் ஒரு வழக்காக, சிபிஐ நீதிமன்ற நீதிபதி லோயா மரணம் தொடர்பான வழக்கை அதிருப்தி நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர். 

சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதியாக இருந்த லோயா, சொரபுதீன் போலி என்கவுன்டர் வழக்கை விசாரித்து வந்தார். குஜராத் மாநிலத்தில் நடந்த சொரபுதீன் ஷேக் போலி என்கவுன்டர் தொடர்பான வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருந்த 38 பேரில், அப்போதைய குஜராத் மாநில உள்துறை அமைச்சராக இருந்த அமித்ஷாவும் ஒருவராக இருந்தார். இந்த வழக்கு மகாராஷ்டிர மாநில சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதியாக இருந்த லோயா விசாரித்து வந்தார். 

இந்நிலையில், கடந்த 2014ம் ஆண்டு டிசம்பர் 1ம் தேதி திடீரென லோயா உயிரிழந்தார். அதன் பிறகு அதே நீதிமன்றத்தில் தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில், அமித்ஷா உள்பட 15 பேர் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டனர். அவரது உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதாகவும், அதில் விரிவான விசாரணை நடத்த வேண்டுமெனவும் மகாராஷ்டிர மாநில பத்திரிகையாளர் பி.எஸ்.லோனே உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

அந்த வழக்கு, உச்சநீதிமன்ற நீதிபதியான அருண் மிஷ்ரா மற்றும் எம்.எம்.சந்தானகவுடர் அமர்வுக்கு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா அளித்திருந்தார். அந்த வழக்கு இன்றைக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில், அதுவே சர்ச்சைக்கு பிரதான காரணமாக குறிப்பிடப்படுகிறது. செய்தியாளர்களைச் சந்தித்த உச்சநீதிமன்ற நீதிபதிகளில் ஒருவரான ரஞ்சன் கோகாய், நீதிபதி லோயா தொடர்பான வழக்கு குறித்து தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதியதை உறுதிபடுத்தினார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.