கர்நாடகத்தில் முற்றும் காங்., - பா.ஜ.க மோதல் : சித்தராமையா மன்னிப்பு கேட்க வலியுறுத்தல்

பெங்களூரு: கர்நாடகத்தில் ஆட்சியை பிடிக்க தீவிரம் காட்டி வரும் பாரதிய ஜனதா - காங்கிரஸ் கட்சிகள் இடையே நாள்தோறும் பிரச்சனைகள் மூணட வண்ணம் உள்ளன. பாரதிய ஜனதா, RSS போன்ற அமைப்புகளில் தீவிரவாதிகள் உள்ளதாக அம்மாநில முதல்வர் சித்தராமையா கூறியதில் இருந்து இரு கட்சிகளுக்கும் இடையேயான மோதல் முற்றியுள்ளது. சித்தராமையா இந்துக்களுக்கு எதிரானவர் என பாரதிய ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா விமர்சித்தார். இதற்கு பதிலடி கொடுத்த சித்தராமையா கர்நாடகத்தில் பாரதிய ஜனதா மதமோதலை தூண்டுவதாக சாடினார். இப்படி நாள்தோறும் முற்றி வரும் நிலையில் சித்தராமையா மன்னிப்பு கேட்க வலியுறுத்தி பல இடங்களில் ஆர்பாட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இது பற்றி கருத்து தெரிவித்த மத்திய அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி, கர்நாடக முதல்வர் ஆதாரங்கள் இல்லாத தகவல்களை பேசி வருவதாக கூறினார். தீவிரவாதத்திற்கு வண்ணம் பூசுவது போன்றும், தீவிரவாதிகளுக்கு சுவாசம் கொடுப்பது போன்றும் அவரது பேச்சு இருப்பதாக சாடினார். கர்நாடக முதல்வரின் பேச்சு கண்டனத்திற்குரியது என்றார். பாரதிய ஜனதா பற்றி அவர் கூறிய கருத்தை வாபஸ் பெறுவதுடன் நாட்டு மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தினார். கர்நாடகத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ஆட்சியை கைப்பற்ற பாஜக தீவிரம் காட்டி வருகிறது. அக்கட்சியின் முக்கிய தலைவர்கள் கர்நாடகா சென்று பேரணி மற்றும் பொதுக்கூட்டங்களில் பங்கேற்று வருகின்றனர். இதனால் ஆளும் காங்கிரஸ் கட்சியும் பதிலடிக்கு தயாராகி விட்டதால் கர்நாடக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.     

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.