ஆனைமலை அருகே விவசாயிகள் பங்களிப்புடன் பிஏபி கால்வாய் பராமரிப்பு

ஆனைமலை: பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலையருகே, விவசாயிகள் பங்களிப்புடன் பிஏபி கிளை கால்வாய் பராமரிப்பு பணி துவங்கப்பட்டது. பொள்ளாச்சியை அடுத்த ஆழியார் அணையிலிருந்து, பழைய மற்றும் புதிய ஆயக்கட்டு பாசன பகுதிகளுக்கு, ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிட்ட நாட்கள் தண்ணீர் திறக்கப்படுகிறது. இதில் ஆனைமலையருகே, புதிய ஆயக்கட்டு பாசனத்திற்குட்பட்ட வேட்டைக்காரன்புதூர் பிரதான கால்வாயிலிருந்து பிரிந்து செல்லும், குளத்துப்புதூர் பிஏபி கிளை கால்வாயானது பல ஆண்டுகளுக்கு முன்பு பராமரிக்கப்பட்டது. பின்அந்த கால்வாயில் ஆங்காங்கே ஏற்பட்ட உடைப்பு மற்றும் பழுதுகளை பராமரிக்க நடவடிக்கை எடுக்காமல் கிடப்பில் போடப்பட்டது. இதையடுத்து, அப்பகுதி பாசனசபை சங்கத்தை சேர்ந்த விவசாயிகள் பலர், குளத்துப்புதூர் கால்வாயை பராமரிப்பு பணி மேற்கொள்ள வேண்டும் என பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்தனர். ஆனால், போதிய நிதி ஆதாரம் இல்லையென்று அந்த கால்வாய் பராமரிப்பு பணி கிடப்பில் போடப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால், அந்த கால்வாயில் தண்ணீர் திறக்கும்போது, கடை மடை விவசாயத்துக்கு தண்ணீர் செல்லாத நிலை ஏற்பட்டது. ஆழியார் அணையிலிருந்து, புதிய ஆயக்கட்டு பாசனத்திற்குட்பட்ட குளத்துப்புதூர் கிளை கால்வாயில், வரும் பொங்கல் பண்டிகை நிறைவடைந்தவுடன் தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், வரும் காலங்களில் கடை மடை விவசாயத்துக்கு தண்ணீர் கொண்டு செல்லும் வகையில், குறிப்பிட்ட தூரத்தில் சிதிலமடைந்த கால்வாயை,  ஒடையக்குளம் கிராம நீரினை பயன்படுத்துவோர் சங்கம் சார்பில், விவசாயிகள் பங்களிப்புடன் குடிமராமத்து பணி மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதையடுத்து, விவசாயிகளின் பங்களிப்பான சுமார் 10 லட்சம் செலவில், குளத்துப்புதூர் பகிர்வு கிளை கால்வாய் பராமரிப்பு பணி,  நேற்று முன்தினம் பூஜையுடன் துவங்கப்பட்டது. இதற்காக, அந்த கால்வாயில் ஆங்காங்கே சூழ்ந்திருந்த புதர்களை அகற்றும் பணி முதற்கட்டமாக நடந்தது.  இதை தொடர்ந்து, கால்வாயின் குறிப்பிட்ட தூரத்துக்கு பக்கவாட்டு மற்றும் தரைதளத்தை கான்கிரீட் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், வரும் காலங்களில் கடை மடை விவசாயத்துக்கு முறையான தண்ணீர் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.