சயீத் முஷ்டாக் அலி கோப்பை : நடுவரின் கவனகக்குறைவால் 2 ரன்னில் தோற்ற ஐதராபாத்

விசாகப்பட்டினம்: சயீத் முஷ்டாக் அலி கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில், கர்நாடகா-ஐதராபாத் இடையேயான லீக் போட்டி விசாகப்பட்டினத்தில் நேற்று நடந்தது. முதலில் பேட் செய்த கர்நாடகா 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 203 ரன் குவித்தது. கருண் நாயர் 77, கிருஷ்ணப்பா கவுதம் 57 ரன் விளாசினர். அடுத்ததாக பேட் செய்ய ஐதராபாத் அணி களமிறங்கிய போது, வெற்றி இலக்கு 204 ரன் என்பதற்கு பதிலாக 206 ரன் என நடுவர்கள் அறிவித்தனர். கர்நாடகா பேட்டிங்கின் போது, கருண் நாயர் அடித்த பந்தை பவுண்டரி எல்லையில் ஐதராபாத் அணியின் சிராஜ் பீல்டிங் செய்தார். களத்தில் இருந்த பேட்ஸ்மேன்கள் 2 ரன் ஓடி எடுத்தனர். ஆனால், சிராஜ்ஜின் கால், பவுண்டரி கோட்டில் தொட்டபடி இருந்ததை போட்டி நடுவர்கள் கவனிக்கவில்லை. டிவி ரீப்ளேவில் இதை உறுதி செய்ததால், இலக்கு 2 ரன் அதிகரிக்கப்பட்டு, 206 ரன்னாக மாற்றப்பட்டதாக கூறினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்தபடியே ஐதராபாத் பேட்டிங்கை தொடங்கியது. அக்‌ஷாத் ரெட்டி 70 ரன் விளாச ஐதராபாத் அணி 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 203 ரன் எடுத்தது. இதனால், சூப்பர் ஓவர் நடத்தி வெற்றியாளரை தீர்மானிக்குமாறு ஐதராபாத் வீரர்கள் கூறினர். நடுவர்களோ கர்நாடகா வென்று விட்டதாக கூறினர். இதனால் ஐதராபாத் அணி கேப்டன் அம்பாதி ராயுடு தலைமையில் வீரர்கள் களத்திலேயே போராட்டத்தில் குதித்தனர். பின்னர் அணி நிர்வாகத்தினர் அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். இங்கு நடந்த மற்றொரு லீக் போட்டியில் தமிழகம், கோவா அணிகள் மோதின. முதலில் பேட் செய்த தமிழக அணி 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 155 ரன் எடுத்தது. தினேஷ் கார்த்திக் 56 ரன் எடுத்தார். அடுத்து களமிறங்கிய கோவா அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழந்து 130 ரன் எடுத்து தோல்வி அடைந்தது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.