”ரஜினியை இயக்க ஆசை இருக்கிறது: ஆனால்?” - ராஜமெளலி

“நடிகர் ரஜினியை இயக்க ஆசை இருக்கிறது” என்று கூறியுள்ளார் இயக்குநர் ராஜமெளலி.

இயக்குநர் ராஜமெளலியின் ‘ஆர்ஆர்ஆர்’படம் வரும் ஜனவரி 7 ஆம் தேதி வெளியாகிறது. ஆலியா பட், ராம் சரண், ஜூனியர் என்டிஆர், அஜய் தேவ்கான் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் வெளியாகும் இப்படத்தின் தமிழ் பதிப்பிற்கான முன்னோட்ட விழா சென்னையில் நடைபெற்றது. அதில், ராஜமெளலி, ராம் சரண், ஆலியா பட் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துகொண்டனர். இந்நிகழ்வில் பேசிய ராஜமெளலி ரஜினியை இயக்க ஆசை இருக்கிறது என்று விருப்பத்தை தெரிவித்துள்ளார்.

image

“நாம் எவ்வளவு பெரிய ஆளானாலும் படிச்ச ஸ்கூலுக்கு வந்தா பயமா இருக்கும். அது மாதிரிதான் எனக்கு சென்னையும். சினிமா கற்று தந்தது சென்னை தான். அந்த பயம் எனக்கு இருக்கிறது. ஒரு பெரிய படம் என்பதை எடுக்கும்போதே யாரும் நிர்ணயிக்க முடியாது. நாங்கள் எங்கள் முழு உழைப்பையும் தந்து படத்தை உருவாக்குகிறோம், இறுதியில் ரசிகர்கள் தான் படத்தை பெரிய படம் என்று சொல்ல வேண்டும். இந்தப்படம் கண்டிப்பாக ரசிகர்களுக்குப் பிடிக்கும். ரஜினி சாரை வைத்து படமெடுக்க நீங்கள் சொல்வதில் எனக்கும் ஆசை இருக்கிறது. ஆனால், ஒரு கதை எழுதி அதில் யார் நடித்தால் நன்றாக இருக்குமோ அவரை நடிக்க வைக்க வேண்டும். கதை தான் நாயகனை தீர்மானிக்க வேண்டும் என்று நினைக்கிறேன். பாகுபலி எல்லோருக்கும் பிடிக்கக் காரணம் அதன் மொழி அல்ல, எமோஷன்தான். அதேபோல், ஆர்ஆர்ஆர் படமும் பாகுபலியைவிட எமோஷனாலாக ரசிகர்களை ஈர்க்கும்.

image

ராம் சரண், என் டி ஆர், ஆலியா பட் எல்லோருக்கும் சமமான திரை அனுபவத்தை தருவது ஒரு படைப்பாளனாக எனக்கு சவாலாகதான் இருந்தது. ஆனால், என் கதை அதை செய்திருக்கிறது. ராம்சரண், என் டி ஆர் இருவரையும் இணைந்து நடிக்க வைக்க வேண்டும் என்று நினைக்கவில்லை. அவர்களை கதை எழுதிய கணத்தில் தான் முடிவு செய்தேன். நான் இந்தப்படத்தை தமிழ்,தெலுங்கு என இரண்டு மொழிகளில் தான் எடுத்திருக்கிறேன். என் சிந்தனை தெலுங்கு அதை மாற்ற முடியாது. ஆனால், தமிழில் நடக்கும் கதையை இயக்கும் போது, இங்கு வந்து கண்டிப்பாக இயக்குவேன். பாகுபலி மாதிரி நினைத்து வராதீர்கள் என்று சொல்லவில்லை ரசிகர்கள் மனதில் இருந்து பாகுபலியை மறக்கடிக்க முடியாது. பாகுபலியில் உள்ள எல்லாம் இதில் இருக்காது. ஆனால், அதில் இருந்த எமோஷன் இந்தப்படத்திலும் இருக்கும். ரசிகர்கள் இந்தப்படத்தை கொண்டாடுவார்கள்” என்று பேசியுள்ளார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.