தூய பஞ்சு விலை சரிவு; கழிவு பஞ்சு விலை உயர்வு

கோவை: தமிழகத்திலுள்ள நூற்பாலைகளில் தூய பருத்தி துணி மற்றும் பின்னலாடை துணி உற்பத்திக்கு தேவையான நூல் உற்பத்தி செய்யப்படுகிறது. இதற்கு தேவையான பஞ்சு வட மாநிலங்களில் இருந்து வாங்கப்படுகிறது. 355 கிலோ கொண்ட ஒரு பேல் அளவு கொண்ட பஞ்சு கடந்த செப்டம்பரில் ₹42 ஆயிரமாக இருந்தது. இதில் ஒரு கிலோ தூய பஞ்சு சராசரியாக ₹118 ஆக இருந்தது. பின்னர் அக்டோபர், நவம்பர் மற்றும் டிசம்பரில் தற்போது வரை 355 கிலோ ₹38 ஆயிரமாகவும், ஒரு கிலோ ₹108 ஆகவும் சரிந்தது. 3 மாதமாக கிலோவிற்கு ₹10 சரிந்த நிலையில் உள்ளது. தூய பஞ்சை கொண்டு நூற்பாலைகளில் நூல் உற்பத்தி செய்யும்பொழுது 15 சதவீதம் முதல் 28 சதவீதம் அளவிலான கழிவு பஞ்சு வெளியேறுகிறது. இந்த பஞ்சை நூற்பாலைகள் விற்பது வழக்கம். இந்த பஞ்சை வாங்கி சுத்திகரிப்பு செய்து விசைத்தறி துணி மற்றும் வீட்டு உபயோக ஜவுளி பொருட்கள் உற்பத்திக்கு தேவையான நூல்களை ஓபன் எண்ட் ஸ்பின்னிங் மில்கள் தயாரிக்கின்றன. கடந்த செப்டம்பரில் கழிவு பஞ்சின் விலை ஒரு கிலோ ₹70 ஆக இருந்தது. பின்னர் அக்டோபர் நவம்பர், டிசம்பரில் தற்போது வரை இதன் விலை கிலோ ₹85 ஆக உள்ளது. 3 மாதமாக கிலோவிற்கு ₹15 உயர்ந்த நிலையிலேயே உள்ளது. தூய பஞ்சு விலை உயர்வாக இருந்தபோது குறைந்த விலையில் இருந்த கழிவு பஞ்சு விலை, தூய பஞ்சு விலை சரிவாக உள்ளபோது உயர்ந்துள்ளது. கழிவு பஞ்சு விலை உயர்விற்கு, வட மாநிலத்தில் உள்ள தூய பஞ்சில் கலப்படம் செய்வதற்காக வியாபாரிகள் கழிவு பஞ்சை போட்டி போட்டு வாங்கி செல்வதாக கூறப்படுகிறது. இதனால் கழிவு பஞ்சு விலை உயர்ந்துள்ளது, என்கின்றனர்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.