சத்தியமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் கடும் பனிப்பொழிவு காரணமாக மல்லிகைப்பூ விளைச்சல் குறைந்தது: நோயை கட்டுப்படுத்த முடியாமல் விவசாயிகள் திணறல்

சத்தியமங்கலம்: சத்தியமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள சிக்கரசம்பாளையம், புதுவடவள்ளி, குய்யனூர், ராஜன்நகர், கொத்தமங்கலம், காராச்சிக்கொரை, பசுவபாளையம், வெள்ளியம்பாளையம், இக்கரைதத்தப்பள்ளி, பகுத்தம்பாளையம், தாண்டாம்பாளையம், கெஞ்சனூர், இக்கரைநெகமம் புதூர், செண்பகபுதூர், எரங்காட்டூர், ஆலாம்பாளையம், கரிதொட்டம்பாளையம், கோடேபாளையம், தொப்பம்பாளையம், தொட்டம்பாளையம் உள்ளிட்ட 50 க்கும் மேற்பட்ட கிராமங்களில் சுமார் 40 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் மல்லிகைபூ பயிரிடப்பட்டுள்ளது.  இங்கு விளையும் பூக்கள் தினமும் காலை பறிக்கப்பட்டு சத்தியமங்கலத்தில் மலர் விவசாயிகள் நடத்தும் பூமார்க்கெட்டிற்கு விற்பனைக்கு கொண்டுவரப்படுகிறது. இங்கு ஏலமுறையில் விலை நிர்ணயம் செய்யப்பட்டு பூக்கள் கோவை, ஈரோடு, சேலம், திருப்பூர், மதுரை உள்ளிட்ட நகரங்களுக்கும், கேரளா மற்றும் கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூரு, மைசூரு உள்ளிட்ட வெளிமாநில நகரங்களுக்கும்  விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. தற்போது கடும்பனிப்பொழிவு காரணமாக பூக்கள் உற்பத்தி வெகுவாக குறைந்துள்ளதாகவும், செடியில் நோய் தாக்கியுள்ளதால் பல்வேறு பூச்சிக்கொல்லி மருந்துகளை பயன்படுத்தியும் கட்டுப்படுத்தமுடியாமல் திணறுவதாகவும் விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.  இதுகுறித்து சத்தியமங்கலம் விவசாயிகள் மலர்கள் உற்பத்தியாளர் சங்கத்தலைவர் முத்துசாமி, செயலாளர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் கூறியதாவது:  கடந்த 10 நாளாக பனிபெய்வதால் மல்லிகைப்பூ விளைச்சல் குறைந்துள்ளது. பனி காரணமாக மொட்டுக்கள் சிறுத்து காணப்படுகிறது. வழக்கமாக மே, ஜூன், ஜூலை உள்ளிட்ட மாதங்களில் பூக்கள் நன்கு விளைவதால் தினமும் 20 முதல் 25 டன் வரை வரத்து இருக்கும். தற்போது கடும் பனிப்பொழிவு காரணமாக பூக்கள் வரத்து குறைவால் மல்லி விலை கடந்த ஒருவாரகாலமாக கிலோ ₹500 முதல் ₹1000 வரை விற்பனையானது. பூக்கள் விளைச்சல் அதிகமாக இருக்கும்போது பூப்பறிக்கும் கூலி ஒரு படிக்கு ₹10 கொடுக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது ஒரு படிக்கு ₹20 வரை கொடுக்கிறோம். பூ விளைச்சல் குறைந்தது ஒருபுறமிருக்க மல்லிச்செடியில் நோய்தாக்குதல் அதிகரித்துள்ளது. காம்பு அழுகல், மொக்கு புழு தாக்குதலால் மல்லிச்செடிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நோயை கட்டுப்படுத்துவதற்கு 3 தினங்களுக்கு ஒருமுறை பூச்சிக்கொல்லி மருந்து வாங்கி தெளித்தும் நோயின் தாக்கம் குறையவில்லை. ஒரு ஏக்கருக்கு அரைலிட்டர் பூச்சிக்கொல்லி மருந்து தேவைப்படுகிறது. ₹1500 க்கு பூச்சிக்கொல்லி மருந்தும், மருந்து தெளிப்பதற்கான கூலி ₹300 என மொத்தம் 3 தினங்களுக்கு ஒரு ₹1800 செலவு செய்தும் நோய் கட்டுப்படாததால் விவசாயிகள் நோயை கட்டுப்படுத்தமுடியாமல் திணறி வருகின்றனர். இதுகுறித்து தோட்டக்கலைத்துறை அதிகாரிகளுக்கு விவசாயிகள் தகவல் தெரிவித்தும் அதிகாரிகள் கள ஆய்வு செய்து தரமான மருந்து பரிந்துரை செய்வதற்கு வருவதே இல்லை. உண்மையிலேயே பூச்சிக்கொல்லி மருந்துகள் தரமானவையா என்பதை விவசாயிகள் உறுதி செய்யமுடியாத சூழ்நிலை உள்ளது. எனவே உடனடியாக தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் கள ஆய்வு செய்து மல்லிச்செடியில் ஏற்பட்டுள்ள நோய் தாக்குதலை கட்டுப்படுத்த விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கவேண்டும் என்றனர்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.