​இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரை கைப்பற்றியது இந்தியா..!

இந்தியா-இலங்கை அணிகளுக்கு இடையே, டெல்லியில் நடைபெற்ற மூன்றாவது டெஸ்ட் போட்டி, டிராவில் முடிவடைந்தது.  இதனையடுத்து 1-0 என்ற கணக்கில் இந்திய அணி டெஸ்ட் தொடரை வென்றது. 

டெல்லி ஃபெரோஷா கோட்லா மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் முதல் இன்னிங்சில் இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 536 ரன்களை எடுத்து டிக்ளேர் செய்தது. பின்னர் விளையாடிய இலங்கை அணி, 373 ரன்களை எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. 165 ரன்கள் முன்னிலையுடன், இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி 246 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இலங்கை அணிக்கு 410 ரன்கள் இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டது. 

3 விக்கெட்டுகளை இழந்து 31 ரன்களுடன் போட்டியின் கடைசி தினமான இன்று விளையாட தொடங்கிய இலங்கை அணி வீரர்கள் தொடர்ந்து தடுப்பு ஆட்டத்தை மேற்கொண்டு நிதானமாக ரன்களை எடுத்தனர். இலங்கை அணி 5 விக்கெட் இழப்பிற்கு 299 ரன்கள் எடுத்திருந்த நிலையில் இரு அணி கேப்டன்களும் ஒத்துக்கொண்டதை அடுத்து போட்டி டிராவில் முடிவடைந்ததாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்தியா 1-0 என்ற கணக்கில் வென்றது. தொடர்ந்து 9 டெஸ்ட் தொடர்களை வென்று இந்திய அணி சாதனை படைத்துள்ளது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.