இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரை கைப்பற்றியது இந்தியா

புதுடெல்லி: இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியது. டெல்லியில் நடந்த 3-வது டெஸ்ட் போட்டி டிராவில் முடிவடைந்தது. முன்னதாக  முன்னதாக இந்தியா- இலங்கை அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி டெல்லி பெரோசா கோட்லா மைதானத்தில் நடைபெற்றது. இந்திய அணி முதல் இன்னிங்சில் 9 விக்கெட் இழப்புக்கு 536 ரன் குவித்து டிக்ளேர் செய்தது. கேப்டன் விராட் கோலி இரட்டை சதமும் (243), முரளி விஜய் சதமும் (155 ரன்) அடித்தனர். இலங்கை அணி முதல் இன்னிங்சில் 373 ரன் எடுத்தது. இலங்கை அணியில் அதிகபட்சமாக கேப்டன் சன்டிமால் 164,  மேத்யூஸ் 111 ரன்கள் எடுத்தனர். 163 ரன்கள் முன்னிலையில் இந்தியா 2-வது இன்னிங்சை ஆடியது. 5 விக்கெட் இழப்புக்கு 246 ரன் எடுத்து இருந்த போது டிக்ளேர் செய்தது. இதனால் இலங்கை அணிக்கு 410 ரன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. 410 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி நேற்றைய 4-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 31 ரன் எடுத்து இருந்தது. தனன் ஜெயா சில்வா 13 ரன்னிலும், மேத்யூஸ் ரன் எதுவும் எடுக்காமலும் களத்தில் இருந்தனர். இன்று 5-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடைபெற்று வருகிறது. வெற்றிக்கு மேலும் 379 ரன் தேவை, கைவசம் 7 விக்கெட் என்ற நிலையில் இலங்கை அணி தொடர்ந்து 2-வது இன்னிங்சை ஆடியது. முதலில் தடுமாறிய இலங்கை அணி பிறகு  சுதாரித்து ஆடியது. இறுதியில் 5-வது  நாள் ஆட்ட முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 299 ரன்கள் எடுத்திருந்த நிலையில் போட்டி டிராவில் முடிவடைந்தது. இலங்கை அணியில் அதிகபட்சமாக சில்வா 119, ரோஷன் சில்வா 74 ரன்கள் எடுத்தனர். ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதை கோலி தட்டிச்சென்றார். இதனையடுத்து  மூன்று போட்டிகள் கொண்ட  டெஸ்ட் தொடரை இந்திய அணி 1-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.