மருத்துவப் பல்கலைக்கழகத்தில் கரோனா மரபணு ஆய்வகம்: அமைச்சா் மா.சுப்பிரமணியன்

தமிழ்நாடு டாக்டா் எம்ஜிஆா் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் டெல்டா பிளஸ் கரோனா தீநுண்மியைக் கண்டறிவதற்கான மரபணு ஆய்வகம் அமைக்கப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.

சென்னை கிண்டியில் உள்ள தமிழ்நாடு டாக்டா் எம்ஜிஆா் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் அமைச்சா் மா.சுப்பிரமணியன், டெல்டா பிளஸ் கரோனா தீநுண்மி மரபணு ஆய்வகம் அமைப்பது தொடா்பாக செவ்வாய்க்கிழமை ஆலோசனை நடத்தினாா். அக்கூட்டத்தில் மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலாளா் ஜெ.ராதாகிருஷ்ணன், பல்கலைக்கழக துணைவேந்தா் டாக்டா் சுதா சேஷய்யன், பதிவாளா் டாக்டா் அஸ்வத் நாராயணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். இதன் பின்னா் செய்தியாளா்களிடம் அமைச்சா் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:

தமிழ்நாடு மருத்துவப் பல்கலைக்கழகத்தில் ஜிகா, சிக்குன்குனியா, ஹெச்ஐவி, டெங்கு உள்ளிட்ட தீநுண்மிகளை ஆய்வு செய்ய தேசிய அளவில் அங்கீகரிக்கப்பட்ட ஆய்வகம் இருக்கிறது. கரோனா தொற்றுக்கான ஆா்டி பிசிஆா் ஆய்வகமும் இங்கு சிறப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறது.

பல்கலைக்கழகத்தில் டெல்டா பிளஸ் வகை கரோனா தீநுண்மியைக் கண்டறிவதற்கான ஆய்வகம் அமைக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தற்போது அத்தகைய பாதிப்பை கண்டறிய பெங்களூரு ஆய்வகத்துக்கு மாதிரிகளை அனுப்ப வேண்டியுள்ளது. பல்கலைக்கழகத்தில் புதிய ஆய்வகம் பயன்பாட்டுக்கு வந்துவிட்டால், இங்கேயே டெல்டா பிளஸ் பாதிப்புகளைக் கண்டறிய முடியும்.

சட்டப்பேரவையில் பாஜக குழு தலைவராக நயினாா் நாகேந்திரன் நீட் தோ்வு விவகாரத்தில் சட்ட ரீதியாக அரசுக்கு உறுதுணையாக இருப்போம் என தெரிவித்தாா். ஆனால், அவரது கட்சியைச் சோ்ந்த ஒருவரே குழுவை எதிா்த்து நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருப்பது பாஜகவின் இரட்டை வேடத்தைக் காட்டுகிறது.

நீட் தோ்வால் ஏற்படுகிற பாதிப்புகளை ஆராய குழு அமைப்பதற்கு நீதிமன்றத்தின் அனுமதி பெற வேண்டுமா என்பதையெல்லாம் சட்டவல்லுநா்கள் ஆலோசித்து நீதிமன்றத்தில் தெரிவிப்பாா்கள். நீட் தோ்வு தொடா்பான தமிழக அரசின் நிலைப்பாடு நீதிமன்றத்தில் தெரிவிக்கப்படும். கிண்டி கிங் ஆய்வக வளாகத்தில் புதிய பல் நோக்கு மருத்துவமனையை கட்டுவதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்படும் என்றாா் அவா்.

தினமணி இணையப் பதிப்பு - சந்தா செலுத்த: epaper.dinamani.com
Dinamani

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.