ஐசிசி ஒருநாள் தரவரிசை முதலிடத்துக்கு முன்னேற கடும் போட்டி

துபாய்: சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் ஒருநாள் போட்டிகளுக்கான தரவரிசையில், முதலிடத்தை பிடிப்பதற்கு கடும் போட்டி நிலவுகிறது. அணிகளுக்கான தற்போதைய தரவரிசையில் தென் ஆப்ரிக்கா 119 தரப்புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. ஆஸ்திரேலியா, இந்தியா தலா 117 தரப்புள்ளிகளுடன் சமநிலை வகித்தாலும், புள்ளி அடிப்படையில் ஆஸ்திரேலியா (5,505) 2வது இடத்திலும், இந்தியா (5,266) 3வது இடத்திலும் உள்ளன. இந்த நிலையில், இந்தியா - ஆஸ்திரேலியா இடையே நடக்க உள்ள 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டித் தொடரின் முடிவைப் பொறுத்து தரவரிசையில் மாற்றங்கள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. இந்த தொடரை இந்தியா 4-1 என்ற கணக்கில் கைப்பற்றும் பட்சத்தில், நம்பர் 1 அந்தஸ்தை பெறும். அதே சமயம் 3-2 என்ற கணக்கில் வென்றால் 2வது இடத்துக்கு முன்னேறலாம். ஆஸ்திரேலிய அணி 5-0 அல்லது 4-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றால், அந்த அணி முதல் இடத்துக்கு முன்னேற முடியும். இதே போல, இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகளிடையே நடக்க உள்ள ஒருநாள் போட்டித் தொடரும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது. அந்த தொடரில் வெஸ்ட் இண்டீஸ் சிறப்பாக செயல்பட்டு வெற்றிகளைக் குவித்தால், 8வது இடத்தில் உள்ள இலங்கையை பின்னுக்குத் தள்ளி 2019 ஐசிசி உலக கோப்பை ஒருநாள் போட்டித் தொடருக்கு நேரடியாக தகுதி பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.